எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரன்வீர் சிங்கின் ரகசிய கோவில் பயணம்! பின்னணி என்ன?

கோவிலுக்குச் சென்ற ரன்வீர் சிங், யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாகச் சாமி தரிசனம் செய்தார்
Ranveer Singh secrect temple visits
Published on
Updated on
2 min read

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று இன்று காலை சாமி தரிசனம் செய்தார். டான் 3 படத்தில் இருந்து விலகிய விவகாரத்தில், திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு (FWICE) அவருக்கு ஒத்துழையாமை உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே, அவர் இந்த கோவில் பயணம் மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டான் 3 படத்தில் இருந்து ரன்வீர் சிங் விலகியதால் தயாரிப்பாளர்களுக்கு சுமார் 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவர் சாமி தரிசனம் மேற்கொண்டது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடைபெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 'காந்தாரா' பட விவகாரத்தில் ரன்வீர் சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, நான்கு வாரங்களுக்குள் சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தக் கோவிலுக்குச் சென்ற ரன்வீர் சிங், யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாகச் சாமி தரிசனம் செய்தார். அதிகாலையில் மும்பை விமான நிலையத்தில் முகக்கவசம் அணிந்து காணப்பட்ட அவர், கோவிலின் கருவறைக்குள் சென்று சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டார். கடந்த 2025-ம் ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், 'காந்தாரா' படத்தின் முக்கியமான தெய்வ வழிபாடு காட்சியை ரன்வீர் சிங் மேடையில் நடித்துக் காட்டினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, கன்னட மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தெய்வ வழிபாடு என்பது மிகவும் உணர்வுப்பூர்வமானது மற்றும் புனிதமானது என்று கருதிய கன்னட மக்கள், அவர் அதைச் சரியாகச் செய்யவில்லை என்று விமர்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தனது செயல் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். ரிஷப் ஷெட்டியின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தவே தான் அவ்வாறு செய்ததாக அவர் விளக்கமளித்தார். ஆனால், காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, தெய்வ வழிபாடு என்பது மிகவும் புனிதமானது, அதை மேடைகளில் நடித்துக் காட்ட வேண்டாம் என்று மறைமுகமாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பாக ரன்வீர் சிங் மீது கர்நாடகாவில் வழக்கு பதியப்பட்டது. பிப்ரவரி மாதம் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி, தன் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். நீதிமன்றம் அப்போது அவருக்கு நிம்மதி அளித்திருந்தாலும், இப்போது கோவில் சென்று வர உத்தரவிட்டது.

டான் 3 விவகாரத்தில் திரைப்பட ஊழியர்கள் சங்கம் ரன்வீர் சிங் மீது தடை விதித்திருக்கும் சூழலில், அவர் தனது செய்தித் தொடர்பாளர் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், இந்த விவகாரம் குறித்துப் பொதுவெளியில் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும், தன் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் தனது மரியாதையைத் தெரிவிப்பதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைகளின் போது அமைதி காப்பது மற்றும் கண்ணியமாக நடப்பது தனது வழக்கம் என்றும், அதையே தொடருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், அடுத்தடுத்து ரன்வீர் சிங் சந்திக்கும் இந்தச் சிக்கல்கள் பாலிவுட் வட்டாரத்தில் பெரிய விவாதமாக மாறியிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com