நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாகத் திருமணம் நடந்து முடிந்தது. புதுப்பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகாவுக்கு, சரியாக இரண்டு வாரங்களில் ஒரு தேவையற்ற தலைவலி வந்து சேர்ந்துள்ளது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு தனிப்பட்ட உரையாடலின் ஆடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஷ்மிகா, "இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்டப் போகிறேன்" என்று ஆவேசமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவைப் பரப்பும் நபர்கள் 24 மணி நேரத்திற்குள் அதை நீக்க வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றம் ஏறுவேன் என்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சர்ச்சைக்குக் காரணமான அந்த ஆடியோ, ராஷ்மிகாவின் அம்மா சுமன் மந்தனா பேசியது என்று சொல்லப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் ராஷ்மிகாவுக்கும் நிச்சயதார்த்தம் முறிந்த சமயத்தில், ராஷ்மிகாவின் அம்மா ஒரு கன்னடத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதிதான் இது. அதில், ராஷ்மிகா திருமணத்திற்குப் பிறகு நடிப்பை விட்டுவிட வேண்டும் என்று ரக்ஷித் குடும்பத்தினர் வற்புறுத்தியதாகவும், அதனால் இரு குடும்பங்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த இந்த பழைய விவகாரத்தை, ராஷ்மிகாவுக்குத் திருமணம் முடிந்த இந்த நேரத்தில் யாரோ திட்டமிட்டுத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களை எல்லாம் இதுநாள் வரை பொறுமையாகக் கையாண்ட ராஷ்மிகா, இப்போது தனது குடும்பத்தினர் இழுக்கப்படுவதைக் கண்டு வெகுண்டெழுந்துள்ளார். "இது ஏதோ எதார்த்தமாக நடந்த விஷயம் இல்லை; என் வாழ்க்கையில் ஒரு நல்ல காரியம் நடக்கும்போது வேண்டுமென்றே செய்யப்படும் சதி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாகத் தன்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவதும், பேசாத வார்த்தைகளைத் திரித்துப் பேசுவதும் ஒரு கூட்டத்திற்குத் வேலையாகப் போய்விட்டது என்று அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். விளம்பரத்திற்காகவும், இணையதளப் பக்கங்களின் 'வியூஸ்' (Views) அதிகரிக்கவும் பிறருடைய தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்கத் துணிபவர்களை இனி சும்மா விடப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
நிச்சயதார்த்தம் முறிந்த சமயத்தில் ராஷ்மிகா ஏகப்பட்ட கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் ஆளானார். அப்போது ரக்ஷித் ஷெட்டியே முன்வந்து, "ராஷ்மிகாவைத் திட்டாதீர்கள், உண்மை தெரியாமல் யாரையும் எடை போடாதீர்கள்" என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். அப்படி இருந்தும் ராஷ்மிகா மீதான வெறுப்புப் பிரச்சாரம் குறையவில்லை. இப்போது மீண்டும் அந்த பழைய காயத்தைக் கிளறுபவர்களுக்கு ராஷ்மிகா விடுத்த எச்சரிக்கையில், "நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்? எங்களது வாழ்க்கை எங்களுக்கானது" என்று கன்னட மொழியில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.