ரோகிணி தியேட்டர் விவகாரம்...! தெரிவித்த சரத்குமார்...!

ரோகிணி தியேட்டரில் பட்டியலினத்தவரை அனுமதிக்க மறுத்த விவகாரம் குறித்து தனது கருத்துக்களை சரத் குமார் கூறியுள்ளார்.
ரோகிணி தியேட்டர் விவகாரம்...!  தெரிவித்த சரத்குமார்...!

சமீபத்தில் பட்டியலினத்தை (நரிக்குறவர்) சேர்ந்தவர்கள் என்பதால் சென்னை ரோகிணி திரையரங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதற்கு அரசு சரியான நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் நடைபெற்ற 130 வது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் அழைக்கப்பட்டார். இதில் பங்கேற்பதற்காக  தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை வந்தடைந்த சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அடுத்த மாதம் திரையரங்குளில் வெளியாக உள்ள பொன்னியன் செல்வன் பாகம் - 2 திரைப்படத்தினை ரசிகர்கள் எதிர்பார்ப்பதைப் போலவே தானும் எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்  ஒருவர்  ரோகிணி தியேட்டர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, இதுபோன்ற செயல்கள் அவருக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். நடிகர் சரத் குமார் 2015ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்விகள் கேட்டதற்கு, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை  என சொல்வது எதிர்கட்சியினரின் தொடர்செயல்பாடாக இருந்து வருகிறது எனவும் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்பது அரசுக்கு தெரியும் எனவும் கூறிய சரத்குமார் தற்போது தமிழகத்தை பொறுத்தவரை காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பின்னர் ஆன்லைன் ரம்மி மற்றும் அதிமுகவில்  நடைபெறும் உள்கட்சி பிரச்சனை குறித்து கேட்டதற்கு அதிமுக பிரச்சனை என்பது உள்கட்சி பிரச்சனையாக இருந்து வருகிறது எனவும் ஆன்லைன் ரம்மி என்பது நிச்சயமாக தடைசெய்ய வேண்டும் எனவும் கூறினார்.

 - முருகானந்தம்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com