"குடும்பத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்" - பாடகி ஜானகி பேத்தி உருக்கம்... இறுதிச்சடங்கு தனிப்பட்ட நிகழ்வு மட்டுமே என விளக்கம்!

ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்த அவர்...
s. janaki amma
s. janaki amma
Published on
Updated on
2 min read

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவையடுத்து, அவரது பேத்தி அப்சரா உருக்கமான அறிக்கையை வெளியிட்டு, குடும்பத்தின் தனிப்பட்ட துயரத்திற்கு மதிப்பளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "எங்களது அன்பு பாட்டியும், உலகப் புகழ்பெற்ற பின்னணி பாடகியுமான எஸ். ஜானகி அமைதியான முறையில் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். குடும்பத்தினர் அனைவரின் அன்புக்கு மத்தியில் அவர் இறுதி மூச்சை விட்டார். அவரது மறைவால் நாங்கள் அனைவரும் மனமுடைந்து போயுள்ளோம். உலகிற்கு அவர் ஒரு தலைசிறந்த பாடகியாக இருந்தாலும், எங்களுக்கு அவர் அன்பும், பாசமும், கருணையும் நிறைந்த பாட்டி. அவரது நினைவுகள் எப்போதும் எங்களுடன் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "எங்கள் பாட்டியின் இறுதிச் சடங்கு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெற வேண்டும். இந்த துயரமான நேரத்தில் எங்கள் குடும்பத்தின் தனிமைக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டபோது பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்" என தெரிவித்துள்ளார். 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இந்திய இசை உலகில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்ற எஸ். ஜானகி, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் வைக்கப்பட்ட நிலையில், பின்னர் அவரது விருப்பப்படி மாலை 4 மணியளவில் அவரது பண்ணை வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது. எஸ். ஜானகியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய் தனது இரங்கல் செய்தியில், "தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்த அவர், தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனங்களில் என்றும் வாழ்வார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ரஜினிகாந்த் தனது இரங்கல் பதிவில், "தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது பதிவில், "பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்க முடியாத சோகம் பலருக்கும் இருக்கும். அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்திய திரையிசை உலகின் பொற்காலக் குரலாக திகழ்ந்த எஸ். ஜானகியின் மறைவு, இசை ரசிகர்களையும் திரையுலகினரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com