

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், மிகப் பெரிய ரஜினி ரசிகர். தான் ஒரு ‘வெறித்தனமான ரஜினி ரசிகன்’ எனப் பல இடங்களில் தெரிவித்துள்ளார். எந்த அளவுக்கு என்றால், வெளிநாட்டில் போட்டி நடைபெறும்போது ரஜினி திரைப்படம் வெளியானால்கூட, ஏதாவது ஒரு மொழியில் தனியாகச் சென்று பார்த்துவிடுவாராம்.
கேரளாவில் எப்போதும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வழக்கம் கொண்டவர். அவரது ரசிக மனம் ஒருபடி மேலே சென்று, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்க்க மொத்தத் திரையரங்கையும் முன்பதிவு செய்துள்ளார்.
முதல் நாள் முதல் காட்சியைத் தவறவிட்ட சஞ்சு, தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வீரர்களையும் தன்னுடன் இணைந்து படம் பார்க்க அழைத்துள்ளார்.
“ரஜினி சார் படங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் எப்போதுமே ஆவலுடன் அவருடைய அடுத்த படத்திற்காகக் காத்திருப்பேன். அவருடைய படங்களை முடிந்தவரை முதல் நாளே பார்க்க முயற்சிக்கிறேன். நேற்று டெல்லியில் எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதனால்தான் என்னால் படத்தைப் பார்க்க முடியவில்லை” என்று சாம்சன் கூறினார்.
“ஆனால் இன்று, அதிர்ஷ்டவசமாக, முழுத் திரையரங்கையும் முன்பதிவு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது நண்பர்களை அழைத்துள்ளேன். என் மனைவியும் இங்கு வந்துள்ளார். பெரிய திரையில் ரஜினி சாரைப் பார்ப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், தமிழ் தெரிந்த இந்திய அணியின் சில வீரர்களும் தன்னுடன் படம் பார்க்க வரவுள்ளதாக சாம்சன் தெரிவித்தார். “அணியிலும், ஆதரவுப் பணியாளர் குழுவிலும் (சப்போர்ட் ஸ்டாஃப்) தமிழ் தெரிந்த அனைவரும் வருகிறார்கள்” என்றார் அவர்.
‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான ஐந்து நாள்களில் ரூ.477 கோடி வசூல் செய்துள்ளது. தமிழில் ரூ.1,000 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையைப் பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.