"எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்தவன் நான்" - மாபெரும் கூட்டத்தை கூட்டி வியக்க வைத்த SK! - அடுத்த தளபதி சுடச்சுட ரெடி!

ஆரம்பத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையிலான...
Sivakarthikeyan Fan Meet
Sivakarthikeyan Fan Meet
Published on: 
Updated on: 
2 min read

தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை ஒரே இடத்தில் திரட்டி நடத்திய பிரம்மாண்ட சந்திப்பு, சினிமா மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது. பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் 'சேயோன்' படத்திலும், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் மற்றொரு படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு ரசிகர் மன்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றிய சிவகார்த்திகேயன், அதன் மூலம் பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை போரூர் அருகே உள்ள பரணிபுத்தூரில் நேற்று (அக் 04) தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சிவகார்த்திகேயன் சந்தித்தார். வழக்கமான ரசிகர்கள் சந்திப்பைப் போல இல்லாமல், இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம் மற்றும் பகுதி அளவிலான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்கள் பலரும் அரசியல் கட்சி கூட்டம் போல வெள்ளை சட்டை அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கம், மேடை அமைப்பு, கொடி மற்றும் தலைமைச் செயலகத்தைப் போன்ற பின்னணி ஆகியவை அரசியல் மாநாட்டை நினைவுபடுத்தும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், சிவகார்த்திகேயனின் அரசியல் நகர்வு குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளன.நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் தங்களது நோக்கத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். “விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டு தான் இருப்பார்கள். ஆனால், நம் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். அன்பினால், அன்புக்காக அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ரசிகர்கள் தங்களது குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சிவகார்த்திகேயன் வலியுறுத்தினார். புத்தக வாசிப்பு சிந்தனைத் திறனை மேம்படுத்துவதுடன், சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைக்கவும் உதவும் என அவர் குறிப்பிட்டார். அதேபோல், பல்வேறு தரப்பட்ட மனிதர்களுடன் உரையாடி புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து தனது திரைப்பயணம் குறித்து நிகழ்ச்சியில் பேசிய  சிவகார்த்திகேயன் சினிமா பின்புலம் இல்லாமல் தானும் நடிகர் விஜய் சேதுபதியும் திரைத்துறைக்குள் வந்து நடிகர்களாக முன்னேறியதாக அவர் குறிப்பிட்டார். மிமிக்ரி கலைஞராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தவர்கள் நடிகர்களாக முடியாது என்றிருந்த பிம்பத்தை மாற்றிக் காட்டியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜய் மற்றும் அஜித் நடிப்பை விட்டு வெவ்வேறு துறைகளில் கவனம் செல்லுடி வரும் நிலையில் அடுத்து யார் தல தளபதி என்ற விவாதம் மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. 

ஆரம்பத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையிலான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருவதன் மூலம் தனது ரசிகர் வட்டத்தையும் விரிவுபடுத்தி வருகிறார். மேலும், அடுத்தடுத்து வெவ்வேறு கதைக்களங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், ஒரு நடிகராக மட்டுமின்றி தனது படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய முயற்சி செய்து வருகிறார். இதனால், விஜய்க்கு இருப்பதைப் போன்ற அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய ரசிகர்கள்  சிவகார்த்திகேயனுக்கும் உருவாகி வருவதாக அவரது ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.இதனால், சினிமாவில் விஜய்யின் இடத்தை நோக்கி அடுத்த தலைமுறையில் சிவகார்த்திகேயன் நகர்கிறாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com