ரஜினி 173' படத்தை இயக்குகிறார் சிபி சக்கரவர்த்தி! சுந்தர் சி விலகிய நிலையில் சூப்பர்ஸ்டாரின் அதிரடி முடிவு!

ஒரு கல்லூரிக் கதையைத் தந்தை மற்றும் மகன் பாசத்தோடு கலந்து அவர் சொன்ன விதம் பலராலும் பாராட்டப்பட்டது...
ரஜினி 173' படத்தை இயக்குகிறார் சிபி சக்கரவர்த்தி! சுந்தர் சி விலகிய நிலையில் சூப்பர்ஸ்டாரின் அதிரடி முடிவு!
Published on
Updated on
1 min read

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள 173-வது திரைப்படம் குறித்த மிக முக்கியமான தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட, அவர் சில காரணங்களால் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டான்' திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, ரஜினி 173 திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் அறிவித்துள்ளது.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனது முதல் படமான 'டான்' மூலமாகவே இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தவர். ஒரு கல்லூரிக் கதையைத் தந்தை மற்றும் மகன் பாசத்தோடு கலந்து அவர் சொன்ன விதம் பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது அவர் சூப்பர்ஸ்டாரை இயக்குவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளது, கோலிவுட்டில் ஒரு ஆச்சரியமான மற்றும் ஆரோக்கியமான மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஜாலியான மற்றும் கலகலப்பான திரைக்கதை அமைப்பதில் சிபி சக்கரவர்த்தி கைதேர்ந்தவர் என்பதால், இந்தப் படம் ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் தயாரிப்பு பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். THALAIVAR173 திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று பிரம்மாண்டமான வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com