காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்குவதற்கு கர்நாடக மக்கள் எதிர்ப்பு!!

கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் இன்று முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரம், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது என்று கூறி 3 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. 

இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம், விசாரணை மேற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. 

இதனை கார்நாடக அரசு ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. கர்நாடக அரசு சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுக்கள், நீதிபதிகள், பி.ஆர்.

கவாய், பி.எஸ். நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, இருதரப்பு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். இதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடாக அரசு தள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுவதை எதிர்த்து மாண்டியா மாவட்ட விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com