மிதமான பட்ஜெட்டில் உங்கள் வீட்டை 'லக்சரி'யாக மாற்ற 5 வழிகள்.. இன்டீரியர் டிசைன் ரகசியங்கள்!

விளக்குகளின் வெளிச்சம் சுவர்களில் பட்டுத் தெறிக்கும்போது ஏற்படும் அந்த உணர்வுதான் ஒரு வீட்டிற்கு லக்சரி அந்தஸ்தைத் தருகிறது...
 luxurious on a modest budget
luxurious on a modest budget
Published on
Updated on
2 min read

சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு. அந்த வீட்டை ஒரு அரண்மனை போல அழகாகவும், பார்ப்பவர்கள் வியக்கும் வகையிலும் மாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், "வீட்டை லக்சரியாக மாற்ற வேண்டுமானால் பல லட்சங்களை இன்டீரியர் டிசைனிங்கிற்காகச் செலவு செய்ய வேண்டும்" என்ற ஒரு தவறான கருத்து பலரிடம் உள்ளது. உண்மையில், அதிகப் பணம் செலவழிப்பதை விட, சரியான பொருட்களைத் தேர்வு செய்வதும், அவற்றை நேர்த்தியாக அடுக்கி வைப்பதும்தான் ஒரு வீட்டிற்குப் பணக்காரத் தோற்றத்தைக் கொடுக்கும். பெரிய அளவில் பட்ஜெட் இல்லாமல், சிறிய மாற்றங்கள் மூலம் உங்கள் சாதாரண வீட்டை ஒரு நட்சத்திர ஓட்டல் போல அல்லது ஒரு சொகுசு பங்களா போல எப்படி மாற்றலாம் என்பதற்கான ரகசியங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

முதலில் ஒரு வீட்டின் முகப்பொலிவைத் தீர்மானிப்பது அதன் 'நிறங்கள்'. லக்சரி தோற்றம் தரும் வீடுகளில் எப்போதும் பளிச்சென்ற அல்லது கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் இருக்காது. மாறாக, 'நியூட்ரல் டோன்ஸ்' (Neutral Tones) எனப்படும் வெள்ளை, ஆஃப்-ஒயிட், லேசான சாம்பல் நிறம் அல்லது சந்தன நிறங்கள் தான் பயன்படுத்தப்படும். இந்த நிறங்கள் உங்கள் அறையைச் சற்றுப் பெரியதாகவும், காற்றோட்டமாகவும் காட்ட உதவும். நீங்கள் அதிகப் பணம் செலவழிக்காமல் வீட்டை லக்சரியாக மாற்ற விரும்பினால், சுவர்களுக்கு மென்மையான வண்ணங்களைத் தேர்வு செய்யுங்கள். ஒரு சுவரை மட்டும் சற்று வித்தியாசமான 'டெக்ஸ்சர்' அல்லது லேசான 'வால் பேப்பர்' மூலம் அழகுபடுத்தலாம். இது அந்த அறைக்கு ஒரு தனித்துவமான கம்பீரத்தைக் கொடுக்கும்.

அடுத்ததாக, ஒரு அறையின் அழகை மாற்றியமைப்பதில் 'ஒளி அமைப்பு' முக்கிய பங்கு வகிக்கிறது. வெறும் வெள்ளை நிற டியூப் லைட்டுகளை மட்டும் பயன்படுத்துவது வீட்டிற்கு ஒரு சாதாரணத் தோற்றத்தைக் கொடுக்கும். அதற்குப் பதிலாக, 'லேயர்டு லைட்டிங்' முறையைப் பின்பற்றலாம். அதாவது, அறையின் மையத்தில் ஒரு அழகான 'சாண்ட்லியர்' அல்லது 'பெண்டன்ட் லைட்' வைக்கலாம். சுவர்களில் மறைமுகமாகத் தெரியும் 'வார்ம் ஒயிட்' (Warm White) எல்இடி விளக்குகள் அறையை மிகவும் ராயலாகக் காட்டும். குறிப்பாக, ஒரு மூலையில் அழகான 'ஃப்ளோர் லேம்ப்' (Floor Lamp) வைப்பது அந்த இடத்தின் மதிப்பையே உயர்த்திவிடும். விளக்குகளின் வெளிச்சம் சுவர்களில் பட்டுத் தெறிக்கும்போது ஏற்படும் அந்த உணர்வுதான் ஒரு வீட்டிற்கு லக்சரி அந்தஸ்தைத் தருகிறது.

ஒரு வீட்டைப் பணக்காரத் தோற்றத்திற்குக் கொண்டு வருவது அங்குள்ள 'துணி வகைகள்'. ஜன்னல்களில் தொங்கும் திரைச்சீலைகள் தரை வரை நீண்டிருப்பதாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஜன்னலின் உயரத்தை விடச் சற்று உயரமாகத் திரைச்சீலைகளைத் தொங்கவிடுவது, அந்த அறையின் Ceiling உயரமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும். இது ஒரு லக்சரி வீட்டின் அடையாளம். திரைச்சீலைகளுக்கு வெல்வெட் அல்லது லினன் போன்ற துணிகளைத் தேர்வு செய்யலாம். சோபாவில் வைக்கப்படும் 'குஷன்ஸ்' மற்றும் தரையில் விரிக்கப்படும் 'ரக்' அல்லது கார்பெட் ஆகியவை வீட்டின் நிறங்களுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். மென்மையான மற்றும் தரமான துணிகள் ஒரு அறைக்கு மெருகூட்டும்.

அறையில் வைக்கப்படும் Furniture மற்றும் அலங்காரப் பொருட்கள் விஷயத்தில் "குறைவே நிறைவு" என்ற கொள்கையைப் பின்பற்றுவது அவசியம். அறையைத் திணறடிக்கும் வகையில் நிறையப் பொருட்களைக் குவித்து வைப்பதைத் தவிர்த்து, சில தரமான பொருட்களை மட்டும் நேர்த்தியாக வைக்க வேண்டும். சோபா செட் அல்லது டைனிங் டேபிளைத் தேர்வு செய்யும்போது, அதன் கால்கள் மெல்லியதாகவும் கம்பீரமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பழைய மர நாற்காலியைப் பாலிஷ் செய்து ஒரு மூலையில் வைப்பது கூட ஒரு ராயல் லுக் தரும். சுவரில் ஒரு பெரிய அளவிலான 'ஸ்டேட்மென்ட் ஆர்ட்' அல்லது அழகான பெயிண்டிங் வைப்பது, பல சிறிய போட்டோ பிரேம்களை வைப்பதை விடச் சிறந்தது. ஒரு பெரிய கண்ணாடி ஒரு சுவரில் இருப்பது அறையை இருமடங்கு பெரியதாகக் காட்டுவதோடு, ஒரு சொகுசுத் தோற்றத்தையும் கொடுக்கும்.

லக்சரி வீடுகளில் எப்போதும் 'இயற்கை' ஒரு அங்கமாக இருக்கும். விலையுயர்ந்த பிளாஸ்டிக் பூக்களுக்குப் பதிலாக, உண்மையான உள்அரங்குச் செடிகளை அழகான பீங்கான் தொட்டிகளில் வளர்க்கலாம். ஒரு சோபாவின் ஓரத்திலோ அல்லது ஜன்னல் அருகிலோ வைக்கப்படும் உயரமான செடி அந்த அறைக்கு ஒரு 'பிரஷ்' மற்றும் ராயல் லுக் கொடுக்கும். அதேபோல், வீட்டை எப்போதும் நறுமணத்துடன் வைத்திருப்பது மிக முக்கியம். 'சென்டட் கேண்டில்ஸ்' (Scented Candles) அல்லது 'டிஃபுஸ்சர்' (Diffuser) மூலம் வீட்டை ஒரு ஸ்பா போன்ற நறுமணத்துடன் வைத்திருப்பது அங்கிருப்பவர்களுக்கு ஒரு லக்சரி உணர்வைத் தரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com