குழந்தை உணவு பாக்கெட்டில் இனி தாய்-குழந்தை படம் கூடாது... புதிய விதிமுறைகளின் பின்னணி என்ன?

மருத்துவமனை விநியோக மையங்கள் மற்றும் இணையவழி விற்பனை தளங்கள் வரை விதிகள் பொருந்தும்...
Baby Food Packaging Rules
Baby Food Packaging Rules
Published on: 
Updated on: 
2 min read

கடைகளில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை வாங்கும்போது, பாக்கெட்டில் இருக்கும் தாய் மற்றும் குழந்தையின் புகைப்படம், வண்ணமயமான வடிவமைப்பு, “முழுமையான ஊட்டச்சத்து” போன்ற வார்த்தைகள் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். இனி அத்தகைய விளம்பர முறைகளுக்கு கட்டுப்பாடு வர உள்ளது. குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் பேக்கெட்டுகளில் தாய் அல்லது குழந்தையின் படங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான உணவு என்பது சாதாரண நுகர்வோர் பொருள் அல்ல என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களுக்கு என்ன உணவு தேவை என்பதைத் தாங்களாக முடிவு செய்ய முடியாது. பெற்றோர் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை நம்பியே அவர்களுக்கான உணவு தேர்வு செய்யப்படுகிறது. எனவே, பொருளின் விளம்பரம் அல்லது பாக்கெட்டில் உள்ள படங்களை பார்த்து மட்டும் பெற்றோர் முடிவு செய்வதைத் தவிர்க்கும் வகையில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

புதிய உத்தரவின்படி, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் பாக்கெட்டின் முன்பக்கத்தில் “Mother's Milk Is Best For Your Baby” என்ற அறிவிப்பு தெளிவாக இடம்பெற வேண்டும். அதாவது, குழந்தைக்கு தாய்ப்பால் முக்கியமானது என்பதை தயாரிப்பு விளம்பரத்துக்கு மத்தியில் மறைத்து விடாமல், பெற்றோருக்கு நேரடியாக தெரியும்படி குறிப்பிட வேண்டும். இது வெறும் அலங்கார வாசகமாக இல்லாமல், பேக்கேஜிங் விதிமுறையின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், தாய் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பொருள் தாய்ப்பாலுக்கு இணையானது அல்லது அதற்கு மாற்றாக முழுமையான உணவாகும் என்ற தவறான எண்ணத்தை உருவாக்கக்கூடிய வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக “humanised”, “maternalised”, “complete food”, “health food” போன்ற சொற்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது பால் கலவை உணவுகளுக்கு மட்டும் பொருந்தும் நடவடிக்கை அல்ல. குழந்தைகளுக்கான பால் உணவுகள், தொடர்ச்சியான பால் கலவை உணவுகள், ஆறு மாதங்களுக்கு பிறகு வழங்கப்படும் துணை உணவுகள், பாரம்பரிய குழந்தை உணவுகள், குறிப்பிட்ட மருத்துவ தேவைகளுக்கான குழந்தை உணவுகள் மற்றும் feeding bottles உள்ளிட்ட பல பொருட்கள் விதிமுறைகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. உற்பத்தியாளர்கள் முதல் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், கடைகள், மருத்துவமனை விநியோக மையங்கள் மற்றும் இணையவழி விற்பனை தளங்கள் வரை விதிகள் பொருந்தும்.

குழந்தைகளுக்கான துணை உணவு தொடர்பாகவும் முக்கியமான அறிவுறுத்தல் உள்ளது. ஆறு மாதங்கள் நிறைவடைந்த பிறகே இத்தகைய உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், குழந்தையின் தேவைக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையுடன் வழங்க வேண்டும் என்றும் பேக்கெட்டில் தெளிவாக குறிப்பிட வேண்டும். இதன் மூலம் வயதுக்கு முன்பாக குழந்தைகளுக்கு குறிப்பிட்ட உணவுகளை வழங்குவதைத் தவிர்க்கும் நோக்கம் உள்ளது.

விளம்பர முறைகளிலும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தை உணவுகளுக்கான இலவச மாதிரிகள், பரிசுகள், கூப்பன்கள், cashback, தள்ளுபடி சலுகைகள் மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Influencer-கள் மூலமாக தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதும் அனுமதிக்கப்படாது. மருத்துவர்கள், மருத்துவமனைகள் அல்லது மருத்துவ அமைப்புகளுக்கு மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் பெயரில் வழங்கப்படும் சில வகையான sponsorship, hospitality மற்றும் நிதியுதவிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உணவின் தரம் தொடர்பாகவும் நிறுவனங்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். குழந்தை உணவில் பயன்படுத்தப்படும் சில பாதுகாப்பு பொருட்கள், செயற்கை நிறங்கள் மற்றும் flavouring substances மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சேர்க்கப்படும் சர்க்கரைக்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “No added sugar” போன்ற தவறான அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விளம்பரக் கூற்றுகளும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம். தவறான விளம்பரம் அல்லது உரிய உரிமம் இல்லாமல் செயல்படுவது போன்றவற்றுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். தரம் குறைந்த உணவுக்கு ரூ.5 லட்சம் வரையும், தவறான தகவல்களுடன் பொருளை சந்தைப்படுத்தினால் ரூ.3 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு உணவு வழங்கிய பிறகு ஏற்படும் சந்தேகத்திற்கிடமான உடல்நலப் பிரச்சினைகளையும் கண்காணிக்க புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் குழந்தை மருத்துவர்கள் சந்தேகத்திற்குரிய பாதிப்புகளை தெரிவிக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமான பாதிப்பு குறித்து தகவல் கிடைத்தால் 48 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். தயாரிப்புகளின் ஒவ்வொரு தொகுதியையும் கண்காணிக்கும் பதிவுகள் மற்றும் தேவைப்பட்டால் பொருட்களை திரும்பப் பெறும் நடைமுறையும் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை முழுமையாக தடை செய்வது இந்த நடவடிக்கையின் நோக்கம் அல்ல. அதற்கு பதிலாக, அவற்றை வாங்கும் பெற்றோருக்கு சரியான தகவல் கிடைக்க வேண்டும், விளம்பரங்களால் தவறான புரிதல் ஏற்படக்கூடாது, குழந்தையின் வயதுக்கும் தேவைக்கும் ஏற்ற உணவு குறித்து மருத்துவ ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே விதிமுறைகளின் மைய நோக்கமாக உள்ளது. இனி குழந்தை உணவுப் பொருட்களின் பாக்கெட்டை பார்த்து முடிவு எடுக்கும் போது, அதில் இருக்கும் புகைப்படத்தை விட அதன் பின்னால் கொடுக்கப்பட்டுள்ள வயது, ஊட்டச்சத்து மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளை பெற்றோர் கவனமாக படிப்பது முக்கியமாகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com