

தற்போதைய தலைமுறையினரிடம் அதாவது 2k தலைமுறையினரிடம் முந்தைய தலைமுறையினரை விடவும் நினைவாற்றல் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 2010க்கு பிறகு பிறந்த குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் சிக்கல்களை கையாளும் திறன் ஆகியவை அவர்களின் பெற்றோர்களை விடவும் குறைவாகவே காணப்படுகிறது என நரம்பியலாளர் ஜாரட் கூனி ஹார்வத் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். இதன் காரணங்களாக அவர் குறிப்பிடுவது,அளவுக்கு அதிகமான ஸ்க்ரீன் நேரம் எடுத்துக்கொள்வது,கூகிள் போன்றவற்றை அதிகம் சார்ந்திருத்தல், மூளைகளை சேமிப்பு பகுதியாக அல்லாமல் பதிவு செய்யும் கருவிகளாக மாற்றிவருகிறார்கள். மில்லெனியல்கள் புத்தகங்கள் படித்தல் மற்றும் கூர்ந்து கவனித்தல் போன்றவற்றால் நினைவாற்றலை மெருகூட்டினர். ஆனால் இன்றைய தலைமுறையினர் டிஜிட்டல் பழக்கங்களினால் தங்களது நினைவாற்றலை இழந்து வருகின்றனர் என ஆய்வாளர் கூறினார்.
ஆனால் தற்போது இதில் இருந்து மீண்டு நினைவாற்றலை அதிகப்படுத்த ஒரு எளிமையான முறையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Frontiers in Neuroscience இல் வெளியிடப்பட்ட சீனாவை அடிப்படையாகக் கொண்ட இந்த சோதனை நடனத்தின் மூலம் நினைவாற்றலை மீண்டும் அதிகப்படுத்த முடியும் என நிரூபித்துள்ளது. அதாவது இந்த ஆய்வில் 18 வார தெரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி இளம் பெண்கள், கவனம் மற்றும் பணி மாறுதலுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளில் அதிக செயல்பாட்டைக் காட்டியதாகக் கண்டறிந்தனர். அவர்கள் அறிவாற்றல் திறன் அவர்களது பணிகளில் மிக துல்லியமாகவும், வேகமாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக நினைவாற்றல் இழப்பு என்பது வயது மூப்பின் காரணமாக நிகழக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. மக்கள் முதுமையை அடையும் போது, அவர்களின் பல அறிவாற்றல் திறன்கள் அப்படியே படிப்படியாக குறையத் தொடங்குகின்றன. மிக முக்கியமானதாக பார்க்கப்படும், நினைவு படுத்துதல் மற்றும் நினைவுபடுத்தியதை செயல்படுத்துதல் போன்றவற்றை வயது மூப்பு காரணமாக பாதிக்கிறது. ஆரம்பத்தில் இது மெதுவாக இருந்தாலும் ஒரு நபர் வயதாகும்போது அது துரிதமாக நடக்கிறது. வயதாகும் போது நிகழும் இந்த மறதிக்கு எதிராக போராடும் ஒரு முக்கியமான காரணி அறிவாற்றல் இருப்பு. இந்த அறிவாற்றல் இருப்பு உருவாக காரணமாக அமைவது கல்வி, அறிவுபூர்வமாக தூண்டும் செயல்பாடுகள், சமூக ஈடுபாடு மற்றும் சிக்கலான தொழில்கள் போன்ற வாழ்நாள் காரணிகளே ஆகும். இதனை மேம்படுத்த வழக்கமான உடற்பயிற்சி, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மற்றும் சமூக தொடர்புகளைப் பராமரித்தல் போன்ற வாழ்க்கை முறை தேர்வுகள் மூலமாகவும் மேம்படுத்தலாம். ஆனால் ஆய்வாளர்கள் இன்னும் சுலபமான வழியை கூறுகின்றனர்.
ஆய்வாளர் யோங்போ வாங் மற்றும் அவரது குழுவினர்கள், நடனத்தின் மூலம் அறிவாற்றலை மேம்படுத்தலாம் என்ற ஆய்வினை மேற்கொண்ட போது, தெரு நடனம் முக்கியமான ஒன்றாக அவர்களுக்கு தெரிந்தது. அதாவது, நடனத்தின் ஒவ்வொரு அசைவுகள், இசைக்க ஏற்ற நடன அசைவுகள் போன்றவற்றால் அறிவுத்திறன் மேம்பாட்டு இருப்பதாக அவர்கள் ஆய்வில் தெரியப்படுத்தியுள்ளார். இவர்கள் 28 வயது மதிக்கத்தக்க கல்லூரி பெண்களை குழு நடனத்திற்கோ அல்லது தெரு நடனத்திற்கோ சீரற்ற முறையில் அனுப்பினார். ஆய்வின் தொடக்கத்தில், அனைத்து பங்கேற்பாளர்களும் தங்கள் மூளையின் செயல்பாட்டு திறனை நியர்-இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (fNIRS) சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு சில அறிவாற்றல் பணிகளை செய்து முடித்தனர். அதன் பின்னர் தெரு நடனக் குழுவினர் வாரத்திற்கு மூன்று முறை 80 நிமிட அமர்வுகளை கொண்ட 18 வார நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆய்வாளர் குழு இந்த இளம்பெண்களை எந்த கட்டாயத்திற்கோ அல்லது கட்டுபாட்டிற்கோ இவர்களை உட்படுத்தப்படவில்லை. மேலும் அவர்களின் வழக்கமான தினசரி பழக்கங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 18 வாரங்களுக்குப் பிறகு, இரு குழுக்களும் மீண்டும் fNIRS ஸ்கேன்களை மேற்கொண்டு அதே அறிவாற்றல் பணிகளை முடித்தன.
ஆய்வின் முடிவாக, தெரு நடனக் குழு அறிவாற்றல் பணிகளைச் செய்யும்போது அவர்களுக்கு முன்-மூளை அதாவது இந்தப் பகுதிகளில் வலது டார்சோலேட்டரல் முன்-மூளைப் பகுதி, வலது முன்-துருவப் பகுதி மற்றும் இடது கீழ்-முன்-கைரஸ் ஆகியவை அடங்கும், இந்த பகுதிகள் கவனம், கட்டுப்பாடு மற்றும் பணி மாறுதலுடன் இணைக்கப்பட்டுள்ளன. தெரு நடனக் குழு பங்கேற்பாளர்களின் அறிவாற்றல் பணிகளில் அதிக துல்லியம் மற்றும் வேகமான பதில்களை மேற்கொண்டனர்.18 வார தொடர்ச்சியான தெரு நடன பயிற்சி நினைவாற்றல், கட்டுப்பாடு மற்றும் அறிவாற்றல் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை திறம்பட மேம்படுத்தி, மேம்பட்ட அறிவாற்றல் இருப்புக்கு பங்களித்தது, என ஆய்வாசிரியர்கள் முடிவு செய்தனர்.இசைக்கு ஏற்ற உடல் அசைவு போன்றவற்றால் உடலையும் மூளையையும் இணைக்கும் பலமாக நடனம் இருக்கிறது. தெரு நடனம் அறிவாற்றல் வீழ்ச்சியை தாமதப்படுத்துவதற்கும், டிமென்ஷியா போன்ற மூளையில் ஏற்படும் நோய்களான நினைவாற்றல், சிந்திக்கும் திறன், நடத்தை மற்றும் அன்றாட செயற்பாடுகளை கடுமையாகப் பாதிக்கும் ஒரு அபாயத்தைக் குறைப்பதற்கும் ஒரு நம்பிக்கைக்குரிய ஆரம்ப புள்ளியாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.