சமீபத்தில் இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. மேலும் அந்த உறவுகளால் கொடூரமான கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அடிப்படையில் நாம் எந்த மாதிரியான சூழலில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இந்தியா - என்ற ஒரு துணைக்கண்டம் 70 வருடங்களாக சுயாட்சி தன்மையோடு ஓரளவு ஜனநாயகத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்தியா மற்ற நாடுகளை போல அல்ல, இங்கே பலதரப்பட்ட இன, மத, மொழி வாரியாக பிளவுபட்ட மக்கள் வாழ்கின்றனர். இங்கே இருக்கக்கூடிய முரண்களும் சிக்கலானது. ஆகவே தான் நமது அரசியலமைப்பு புத்தகத்தில், சகிப்பு தன்மை, இறையாண்மை ஆகிய வார்த்தைகள் உள்ளன. மற்ற இனக்குழுக்களை சகித்து சகோதரத்துவத்துடன் இணைந்து வாழ்ந்தால் மட்டுமே இது ஒரு தேசமாக நிலைபெற்று இருக்கும்.
இதற்கும் திருமணத்தை மீறிய உறவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்? இருக்கிறது . மேற்சொன்னபடி இந்தியா முரண்கள் நிறைந்த ஒரு “Paradoxical Society” இங்கே மக்கள் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஒருவரிடம் மட்டும் அனுமதி கேட்கவே, அல்லது போராடவோ முடியாது. பெரும்பான்மையான நேரங்களில் அது குடும்பமாகவோ, நண்பர் வட்டமாகவோ, அல்லது இந்த சமூகமாகவோ இருக்கிறது. ஒரு வயது வரை இந்த கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும் ஏதோ ஒரு சமயத்தில் இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் இந்தியர்களின் ஆழ்மனதில் இருக்கிறது. ஒருவேளை இவர்கள் வெளிநாட்டிற்கு சென்று தங்கள் சமூகம் சொல்லித்தந்த பிரிவினைகளை தொலைத்து விடுவார்களா? என்று கேட்டால் அதுவும் இல்லை. இவர்கள் எங்கு சென்றாலும் தங்களின் ‘அகமணமுறை’ -தன்மையை துறக்கவும் விரும்புவதில்லை. இந்த சிக்கலான மனநிலையிலே உழன்று தவிப்பதால் தான் பெரும்பாலான நேரங்களில் தங்களின் இயலாமையை தங்களின் துணையின் மீது காட்டுகின்றனர். மேலும் தங்களின் அனைத்து சுக துக்கங்களுக்கும் காரணம் தங்கள் துணைதான் என்று யோசிக்கின்றனர். ஆணோ பெண்ணோ அதுவரை தன்னைத்தானே சுமந்து வந்த வாழ்வில் திருமணத்திற்கு பிறகு மற்றொரு நபரையும் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அதீத அன்பும் ஆபத்தாகலாம்!
ஆங்கிலத்தில் ‘Clingy’ என்ற வார்த்தை உண்டு. எப்போதும் நச நச என உடனிருந்துக்கொண்டே ஓவராக லவ் டார்ச்சர் செய்யும் பார்ட்னரை க்ளிங்கி என்று சொல்லுவார்கள். ஒரு காதல் உறவில் நிச்சயம் ஒரு நபர் சற்று அதீத அன்பை வெளிப்படுத்தக்கூடியவராக இருப்பார் அது இயல்புதான். ஆனால் அது உங்கள் துணையின் தனிச்சுதந்திரத்தை பறிக்காத வகையில் இருக்க வேண்டும்.
அடிப்படியில் நடைமுறையை நாம் ஒப்புக்கொள்ள பழக வேண்டும். எவ்வளவு உருகி உருகி காதலித்தாலும் தனி மனிதருக்கான “Time & Space” கண்டிப்பாக தர வேண்டும். திருமணம் ஆன பின்னால் உலகமே புரண்டாலும் கணவன் மனைவி ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதியாக இருக்கிறது. பிறந்த வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மகள் வந்தாலும் தாய் கேட்கக்கூடிய முதல் கேள்வி “உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது சண்டையா?” என்றுதான். இதைத்தான் நாம் “Paradoxical Society”என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
கவனிக்காமல் இருப்பது
Attention (கவனிக்காமல் இருப்பது)கொடுக்காமல் இருப்பதற்கும் clingy -ஆக இருப்பதற்கும் ஒரு நூலிழை வித்தியாசம்தான். காதல் உறவை கையாளுவது என்பது தாய் புலி தனது குட்டியை கவ்வுவது போன்று லாவகத்துடன் கையாள வேண்டும். அதற்கான “Emotional Intteligence” -ஐ ஆண் பெண் இருவரும் வளர்த்துக்கொள்ள முயலவேண்டும்.
நீங்கள் உங்கள் துணையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பாராட்ட தவறிவிட்டால், கவனிக்காமல் விட்டால் இயல்பாகவே அவர்களுக்கு வெறுப்பு தட்டிவிடும். மேலும் இந்த அன்பெல்லாம் எங்கு கிடைக்கிறதோ அங்கு அவர்களின் மனமும் சென்று விடும். ஆகவே அவ்வப்போது உங்கள் காதல் துணையை கவனியுங்கள், பாராட்டுங்கள்.
பழிக்கு பழி வாங்கும் மனநிலை
சமீபத்திய ஆய்வின்படி 23% மக்கள் தங்கள் இணை தங்களுக்கு உண்மையாக இல்லை என்ற காரணத்தினாலேயே அவர்களும் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தங்களுக்கு தந்த அதே வலியை அவர்களும் உணர வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் இது தேவையில்லாத ஒன்று. இந்த போக்கு “தன்னை தானே உளவியல் ரீதியாக அழித்துக்கொள்ளும் ஒரு செயலாகும்”
தேவைகளை பூர்த்தி செய்தல்
திருமணமோ அல்லது காதலோ இருவரும் இணைந்துதான் ஈடுபடுகின்றனர், எனவே ஒருவர் மற்றொருவரின் உடல் மற்றும் உளவியல், பொருளாதார தேவைகளை முடிந்த அளவுக்கு பூர்த்தி செய்ய அர்ப்பணிப்போடு காதலோடு உழைக்க வேண்டும். இந்த மூன்றில் ஏதவது ஒன்றில் நீங்கள் விலகிக்கொண்டால் கூட உங்கள் உறவில் நிச்சயம் விரிசல் ஏற்படும். இந்த மூன்றுமே அத்யாவசியமான ஒன்றுதான். எதிலுமே compromise கூடாது. உளவியல் பொருளாதார ஆதரவில் ஏற்படும் குறைபாடுகளை கூட பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற இடத்திற்கு செல்வோம். ஆனால் உளவியல் ரீதியான நிறை குறைகளை பேசும் இடத்திற்கு இந்திய சமூகம் இன்னமும் முழுமையாக சென்றடையவில்லை என்றுதான் கூற வேண்டும்.
தனது உடல் ரீதியான தேவைகள் இன்னன்ன, பிடித்தவை இவை, பிடிக்காதவை இவை என ஒரு ஆணோ பெண்ணோ கூறினால் உடனே அவர்களை சார்ந்த முன்முடிவுக்கு வந்துவிடும் வழக்கம் நம்மில் பலரிடம் உண்டு. இந்த முன்முடிவு காரணமாக கடைசி வரை அந்த பாதிக்கப்படும் இணையர் வாயை தொறக்காமல் இருந்து இருந்து மன உளைச்சலுக்குத்தான் ஆளாவார்கள். ஆகவே நல்ல காதலில் நல்ல ‘communication’ அவசியம்.
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
ஒரு காதலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திரைப்படங்களில் வருவது போல ‘ஒரு செடியில் ஒரு பூ தான் பூக்கும்” என்பதெல்லாம் இயல்பான ஒன்று கிடையாது. உண்மையில் ஒரு செடியில் ஒரு பூ தான் பூக்கிறதா?.. நிச்சயமாக கிடையாது. சில மனிதர்களுக்கு வாழ்க்கையிலே ஒரு காதல் கூட இருந்திருக்கலாம். அதுவும் தவறு கிடையாது. என்றோ ஒருநாள் உங்கள் துணை வேறு ஒரு நபரிடம் காதல் கொண்டால், அவர்களோடு சென்று விட விரும்பினால் அவர்களை கண்ணியமாக உங்கள் வாழ்விலிருந்து அனுப்பி வைப்பதே சரி. நீங்கள் அழுதாலும், அடித்தாலும், துன்புறுத்தினாலும், அவர்களை தடுக்கவே முடியாது என்பதே நிதர்சனம். ஆகவே உங்கள் இணையர் உங்களை விட்டு பிரிய வேண்டும் என்று கூறினால் அவர்களோடு உரையாடுங்கள்.. உங்கள் பிரிவையும் கண்ணியதோடு நிகழ்த்துங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.