

இந்த வெயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள, அதிக விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் தேவையில்லை. மிக எளிமையாகவும், மலிவாகவும் கிடைக்கும் வெள்ளரிக்காய் போதும் வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளித்து விடலாம்...
வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரிப் பிஞ்சுகளில் அப்படி என்ன சத்துக்கள் இருந்து விடப் போகிறது என்று நினைக்கிறீர்களா...?
தெரிந்து கொள்ளுங்கள், மிக சாதாரணமாக, குறைந்த விலையில் கிடைக்கும் வெள்ளரிக் காய்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
வெள்ளரியில், 96 சதவீதம் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, பொட்டாசியம் என பல்வேறு சத்துக்கள் உள்ளன.
நீர் சத்து நிறைந்தது:
உடல் இயக்கம் தொய்வில்லாமல் நடைபெறுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமானது. உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும்போது ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட வேண்டியது முக்கியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன் நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். அதற்கு வெள்ளரிக்காய் மிகவும் ஏற்றது.
உடல் சூட்டைத் தணிக்கும்:
வெள்ளரிக்காயில் 96 சதுவீதம் நீர் சத்து இருப்பதால், வெயிலால் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை போக்கும் ஆற்றல் கொண்டது இந்த வெள்ளரிக்காய்கள். அதுமட்டுமின்றி, வெயில் காலங்களில், சூட்டினால் உடலில் ஏற்படும் நோய்களையும், உடலில் ஏற்படும் மாற்றங்களையும், வெப்பத்தை தணித்து, உடலை குளிச்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
செரிமானம், உடல் எடை குறைய :
வெள்ளரியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை நீக்குகிறது. அத்துடன், வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. மேலும், கொழுப்பு செல்கலைக் கரைக்கும் சக்தி வெள்ளரியில் உள்ளதால், உடல் எடை அதிகாரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
சிறுநீரக ஆரோக்கியம்:
உடலில் இருந்து சிறுநீர் பிரிவைத் தூண்டி, சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீர்ப் பாதை எரிச்சலைக் குணப்படுத்த இந்த வெள்ளரிக்காய்கள் பெரிதும் உதவுகிறது.
இதயத்திற்கு இதமானது வெள்ளரி:
வெள்ளரிக்காய் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றது. இதய நோய்களுக்கான காரணியாக இருக்கும் கொழுப்பை நிர்வகிப்பதற்கு வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து பெரிதும் உதவுகிறது. அதில் சோடியமும் குறைவாகவே இருப்பதால், உணவில் வெள்ளரிக்காயைச் சேர்ப்பது இதய நோய் அபாயத்தை கட்டுப்படுத்தும்.
ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு:
வெள்ளரியில் பொட்டாசியம் சத்து இருப்பதால் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்து, குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்குப் பாதுகாப்பை தருகிறது.
வாய் ஆரோக்கியம்:
வெள்ளரிப் பிஞ்சை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகும். தினமும் உணவில் வெள்ளரி பிஞ்சைச் சேர்ப்பது உடல் நலம் மற்றும் புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கும்.
முகம், சருமம், கூந்தல் பாதுகாப்பு:
வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரிப் பிஞ்சுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, முக அழகிற்கும், சரும பாதுகாப்பிற்கும், பெரிதும் உதவுகிறது.
வெள்ளரிக்காய் முகப் பொலிவிற்கு ஒரு சிறந்த இயற்கை பொருளாகும், இது சருமத்தை ஈரப்பதமாக்கி, வெயிலால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து, புத்துணர்ச்சி அளிக்கிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிலிக்கா ஆகிய சத்துக்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைத்து, முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. தினசரி வெள்ளரிச் சாறு அல்லது வெள்ளரி பேக் போடுவதால், சருமத் துளைகளைச் சுருக்கி, பொலிவான தோற்றத்தைத் தரும்.
மேலும் வெள்ளரியில் நீர்ச்சத்து, சிலிக்கா மற்றும் கந்தகம் இருப்பதால், சருமத்தை நீரேற்றத்துடன் வைத்து, கூந்தல் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
மிக மிக மலிவான விலையில் கிடைக்கும் இந்த வெள்ளரியில்தான் எத்தனை எத்தனை சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
எனவே இத்தனை நன்மைகளை கொண்ட வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கி சாப்பிட்டு, வெயில் பாதிப்பில் இருந்து, உடல் ஆரோக்கியத்தையும், முகக் பொலிவையும் பெறுவோம்...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.