“பட்டாசு வெடிக்கும்போது இந்தத் தவறுகளை மட்டும் செய்யாதீங்க!” தீபாவளிக்கு முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!

பட்டாசுக்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், அதை வெடிப்பவர்கள் மட்டுமின்றி, வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடும் இந்த பட்டாசுகள்.
Diwali 2026
Diwali 2026
Published on: 
Updated on: 
2 min read

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்.. அதிலும் தீபாவளி என்றால் உள்ளத்தில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம் தீபாவளி பண்டிகையில் பட்டசு வெடிப்பதுதான்.

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதுதான் மிகப் பெரிய மகிழ்ச்சி... சொல்லப்போனால் பட்டாசு வெடிப்பதற்காகவே தீபாவளிப் பண்டிகை எப்போது வரும் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்திருப்பதுண்டு.

வானத்தில் வண்ண வண்ண ஜாலங்கள் காட்டும் வாண வேடிக்கைகள், பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் வெடித்து சிதறும் வெடிகள், வானம் அளவிற்கு எழும்பும் புஸ்வானம், வட்டமடிக்கம் சங்கு சக்கரம், கையில் பிடித்து எரிக்கப்படும் மத்தாப்பு, காதை கிழிக்கும் வேட்டுக்கள்... பட்டாசுகளில்தான் எத்தனை ரகங்கள், எத்தகை வகைகள்.

பட்டாசு வெடிப்பதில், சிறுவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களுக்கும் ஒரு தனி குதுகலமும், உற்சாகமும் ஏற்படுவது உண்மைதான். பட்டாசுக்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், அதை வெடிப்பவர்கள் மட்டுமின்றி, வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடும் இந்த பட்டாசுகள்.

பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சி என்றாலும், அதனை பாதுகாப்பாக வெடிக்க வேண்டியது மிக மிக முக்கியம். பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பதற்காகவே பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த வழிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக பட்டாசு வெடித்தால், உண்மையில் தீபாவளியும், பட்டாசு வெடிப்பதும் மகிழ்ச்சிதான்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள்:

  • பட்டாசுகளை, திறந்த வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் வெடிக்க வேண்டும்.

  • குறுகலான தெருக்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய குடிசைகள் அல்லது தென்னை ஓலை வேய்ந்த கூரைகள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • பெட்ரோல் பங்குகள், மின்மாற்றிகள் (Transformers) அல்லது எரியக்கூடிய பொருட்கள் அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

  • பட்டாசு வெடிக்கும்போது எப்போதும் முழுக்கை அல்லது சாதாரண பருத்தி ஆடைகளை (Cotton clothes) அணிய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய நைலான் அல்லது சில்ஹ்க் ஆடைகளைத் தவிர்க வேண்டும்.

  • எப்போதும் காலில் காலணி (Footwear) அணிந்து கொண்டு மட்டுமே பட்டாசுகளை பற்றவைக்க வேண்டும்.

  • பட்டாசின் திரியைப் பற்றவைக்கும்போது, முகத்திலிருந்து ஒரு கை நீள தூரத்தில் வைத்துப் பற்றவைக்க வேண்டும்.

  • குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது அருகில் கண்டிப்பாகப் பெரியவர்கள் இருக்க வேண்டும்.

  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சிறிய கம்பி மத்தாப்புகளைக் கூடத் தனியாகக் கொடுக்கக் கூடாது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பிற்காக குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவிப்பது கண்களை பாதுகாக்கும்.

  • ஒருவேளை கண்களில் பட்டாசு துகள்கள் பட்டால், உடனே அழுத்தி தேய்க்காமல் குளிர்ந்த நீரில் கண்ணை திறந்து பார்த்து விட்டு உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

  • மேலும் தூசி ஒவ்வாமை ஏற்படுபவர்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.

  • பட்டாசு வெடிக்கும் போது, விபத்துகளைத் தவிர்க்க அருகில் ஒரு வாளியில் குளிர்ந்த நீர் மற்றும் மணலை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

  • பற்றவைத்த பிறகு வெடிக்காத பட்டாசுகளுக்கு அருகில் உடனடியாகச் செல்லக் கூடாது. அது தாமதமாக வெடிக்கக்கூடும். எனவே வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்றவைக்க முயலக் கூடாது. குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து அதன் மீது தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

  • பட்டாசுகளைக் கண்ணாடி பாட்டில்கள், டின்கள் அல்லது இரும்பு டப்பாக்களுக்குள் போட்டு வெடிக்க வைக்கக் கூடாது.

  • ராக்கெட் மற்றும் புஸ்வானம் போன்றவற்றை உரிய திசையில், திறந்த வெளியில் வானத்தை நோக்கி மட்டுமே செலுத்த வேண்டும்.

  • தீக்குச்சி மற்றும் மெழுகுவர்த்தி போன்ற எரியும் பொருட்களால் வெடிகளை கொளுத்தக் கூடாது. அதற்கான நீளமான ஊதுபத்திகளைக் கொண்டு மட்டுமே வெடிக்க வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டால் முதலுதவி:

  • பட்டாசு வெடிக்கும் போது தவறுதலாக, தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாகக் காயத்தின் மீது சுத்தமான குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.

  • மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகளோ, எண்ணெய்களோ, பேனா மை மற்றும் களிம்புகளையோ தடவக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

  • தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அல்லது அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.