கால நிலை மாற்றத்தால் அதிகரிக்கும் காய்ச்சல்... மக்களே உஷார்...!

கொசுக்களைத் தவிர்க்க கொசு வலை மற்றும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம். சளி, காய்ச்சல் போன்ற...
fever
fever
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் நிலையில், கால நிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி, தொண்டை வலி, வறட்டு இருமல், உடல் வலி, சோர்வு, வயிற்றுப் போக்கு, வாந்தி, போன்ற பாதிப்புகள் வேகமாக பரவி வருகிறது. 

மழைக்காலம் வந்தால் கூடவே கொசுக்களும் வந்து விடுகிறது. மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு போன்ற நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் நோயை பரப்பியும் வருகின்றன. 

இந்த காலங்களில் பெரும்பாலான நோய் தொற்றுகள் தண்ணீரின் மூலமே பரவுகிறது. எனவே தான் இது போன்ற காலங்களில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி பருக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த காலங்களில், ஐஸ் வாட்டர், கூல்ட்ரிங்ஸ், ஐஸ்கிரீம்  போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கால நிலை மாற்றம் காரணமாக வரும் சளி, காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற பாதிப்புகள் பெரும்பாலும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே அதிகம் தாக்குகிறது. எனவே அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கைகளை நன்கு சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாஸ்க் அணிந்து தங்களை தற்காத்துக் கொள்வதுடன், மற்றவர்களுக்கு பரவாமல் பார்த்துக்கொள்வதும் அவசியமாகும். 

கொசுக்களைத் தவிர்க்க கொசு வலை மற்றும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம். சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி, முறையாக சிகிச்சை பெற்று, அத்துடன்,  தேவையான ஓய்வு எடுத்துக் கொண்டால் எளிதில் இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு விடலாம். 

பாதிப்பு ஏற்பட்டால் தவிர்க்கவும்,  பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், நிலவேம்பு, அதிமதுரம், சுக்கு, மிளகு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கஷாயம் வைத்து குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், நோய் பரவலையும் தடுக்க முடியும்.  

கஷாயம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

நிலவேம்பு  - 2 கிராம்

அதிமதுரம் - சிறிதளவு

சுக்கு   -      சிறிய துண்டு

மிளகு   - 10

திப்பிலி - 3

துளசி இலைகள்  - 5

பனங்கற்கண்டு சிறிதளவு. 

செய்முறை:

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் (பனங்கற்கண்டு தவிர) லேசாக தட்டி ஒன்றும் பாதியுமாக இடித்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதில் தட்டி வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 

தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி,  சூடாக பருகவும். தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். 

காய்ச்சல் வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பாதிப்புகளால் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்படும். எனவே நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

அது போன்று நேரங்களில், சூப், கஞ்சி, இஞ்சி கலந்த தேனீர், சுக்கு காபி போன்ற சூடான பானங்களை பருகலாம் அல்லது, உப்பு, சர்க்கரை கலந்த நீரை பருக வேண்டும்.  

குழந்தைகளுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கை வைத்தியத்தை விட உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com