“நாய்களுக்கு இதை மட்டும் கொடுத்துடாதீங்க” - உங்கள் செல்ல பிராணியின் உயிருக்கு ஆபத்தாகும் அன்றாட உணவு! தெரியுமா?

ஒரு சில நாய்களுக்கு வெங்காயம் சாப்பிட்டவுடன் வாந்தி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் காட்டிவிடும்...
Foods Toxic to Dogs
Foods Toxic to Dogs
Published on
Updated on
3 min read

Pet Animal வளர்ப்பதில் நம்மில் பலருக்கும் ஆர்வம் அதிகம். அதிலும் நாய் வளர்ப்பதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர். உள்நாட்டு நாய்கள், வெளிநாட்டு நாய்கள், உயர்ரக நாய்கள், என பலவகையான நாய்களை பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வளர்ப்பவர்கள் ஏராளம் ஏராளம். அப்படி செல்லப் பிராணிகளை ஆர்வமுடன் வாங்கி வளர்ப்பதுடன், அவற்றிற்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியது, செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களின் கடமையாகும்.

நாய்கள் தனது எஜமானர்களை மட்டுமே உலகமாக நினைத்து வாழும் தன்மை கொண்டவை. நன்றிக்கு பெயர்போன இந்த செல்லப் பிராணிகளை வளர்ப்பதும் ஒரு அலாதியான இன்பம்தான். அதே நேரம், இந்த செல்லப் பிராணிகளுக்கு எந்த வகையான உணவு கொடுக்க வேண்டும் என்பதை விட, எந்த வகையான உணவுகளை கொடுக்கவே கூடாது என்பதை முக்கியமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நாம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு பொருள், நாய்களுக்கு நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? ஆம்... நாய்களுக்கு நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் அந்த உணவு வெங்காயம் தான். அதாவது பச்சையாகவோ, சமைத்தோ, வதக்கியோ, அல்லது வெங்காயப் பொடி (Onion Powder) என்று எப்படி கொடுத்தாலும், நாய்களுக்கு வெங்காயம் நஞ்சாகவே மாறிவிடுகிறது . வெங்காயம் சாப்பிடுவதால் நாய்களுக்கு கடுமையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வெங்காயத்தால் நாய்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன:

வெங்காயத்தில், என்-புரோப்பைல் டைசல்பைடு (N-propyl disulfide) மற்றும் 'தியோசல்பேட்' (Thiosulphate) ஆகிய நச்சுப் பொருட்கள் உள்ளன. இவை நாய்களின் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை (Red Blood Cells) அழித்து, ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் திறனைக் குறைக்கின்றன. இதனால் நாய்களுக்கு இரத்த சோகை (Hemolytic Anemia) நோய் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

முக்கிய நச்சு அறிகுறிகள்:

வெங்காயத்தை சாப்பிட்டவுடன் அறிகுறிகள் எதுவும் தெரியாது. ஆனால், 1 முதல் 5 நாட்களுக்குள் பிறகு அறிகுறிகள் வெளிப்படலாம். அதாவது, வாந்தி, வயிற்றுப்போக்கு கடுமையான உடல் சோர்வு மற்றும் பலவீனம் போன்றவை ஏற்படும்.

நாய்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு அறிவது :

ஒரு சில நாய்களுக்கு வெங்காயம் சாப்பிட்டவுடன் வாந்தி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் காட்டிவிடும். ஆனால் கொஞ்சம் வளர்ந்த மற்றும் நாட்டு ரக நாய்களுக்கு 2 முதல் 5 நாட்களில்தான் பாதிப்புகள் தெரியவரும்.

அதனால், இந்த பாதிப்புகள் எதனால் ஏற்பட்டது என்பதை நம்மால் கணிக்க முடியாது. வெங்காயம் சாப்பிடுவதால் நாய்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய, அதன் வாயில் உள்ள ஈறுகளை பார்க்க வேண்டும். அது வெளிறிய நிலையில் இருந்தால் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அத்துடன், அதன் சிறுநீர் அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும், சிறிது தூரம் நடந்தாலோ, அல்லது விளையாடினாலோ அதிகமாக மூச்சு இறைக்கும் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படும். இதனைக் கொண்டு நாய்களுக்கு வெங்காயத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதை அறிந்து கொள்ள முடியும்.

வெங்காயம் எந்த வகை நாய்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்:

வெங்காயம் அனைத்து வகையான நாய்களுக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளைத்தான் ஏற்படுத்துகிறது. இதனால் நாட்டு நாய்கள் மற்றும் தெரு நாய்களுக்கு கூட ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. பொதுவாக தெருவில் உள்ள நாய்களுக்கு தன்னார்வலர்கள் பலரும் உணவு வைப்பது வழக்கம்.

ஆனால் அதில் கூட பிரியாணி, சாம்பார் சாதம் போன்ற உணவுகளில் வெங்காயம் சேர்க்கப்படக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நாய்களுக்கு உணவளிப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதில் சேர்க்கப்படும் வெங்காயம் நாய்களுக்கு நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் என்பதை, இந்த பதிவை படிக்கும் நீங்கள் பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.

நம்மால் முடிந்தவரை, நம்மையே சார்ந்து வாழும் நன்றியுள்ள ஜீவன்களை பாதுகாப்போம். நாய்களுக்கு இறைச்சியுடன், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொடுப்பதே சிறந்தது. கேரட், உருளைக் கிழங்கு, பூசணிக்காய், சுரைக்காய், பச்சைப்பட்டணி, பீன்ஸ், முட்டைகோஸ், காளிப்பிளவர் போன்ற காய்கறிகளையும் கொடுக்கலாம்.

பொதுவாக நாய்கள் காய்கறிகளை சாப்பிடுவது கடினம். எனவே இறைச்சியை வேக வைக்கும் போது அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வேக வைத்து, காய்கறிகள் தெரியாத அளவிக்கு மசித்து கொடுத்தால், இறைச்சி வாசத்தில் நாய்கள் சாப்பிட்டுவிடும்.

எனவே வெங்காயத்தை அறவே தவிர்த்து விடுங்கள். ஒரு வேளை நாய்கள் வெங்காயத்தை சாப்பிட்டு, அதனால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவர்களை அணுகுங்கள். இதனை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்.

நாய்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் இதர உணவுகள்:

நாய்களுக்கு வெங்காயம் மட்டுமின்றி, வேறு சில உணவுகளும் நச்சுத் தன்மை கொண்டவையாக மாறிவிடுகிறது. அவை

சாக்லேட், காபி, டீ:

இதில் உள்ள 'Thiobromine' மற்றும் கஃபைன் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும்.

திராட்சை மற்றும் உலர் திராட்சை (Raisins):

மிகக் குறைந்த அளவு சாப்பிட்டாலும் நாட்டு நாய்களின் சிறுநீரகத்தை (Kidneys) முற்றிலும் செயலிழக்கச் செய்யும்.

பூண்டு (Garlic): வெங்காயத்தைப் போலவே இதுவும் இரத்த சோகையை (Anemia) ஏற்படுத்தும்.

மசாலா மற்றும் காரமான உணவுகள்: மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா போன்றவை நாயின் குடலில் புண்களை (Ulcers) உண்டாக்கும்.

உப்பு மற்றும் சர்க்கரை: அதிக உப்பு சிறுநீரகப் பாதிப்பையும், சர்க்கரை மற்றும் இனிப்புகள் சர்க்கரை நோய் (Diabetes) மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும்.

சமைத்த கோழி எலும்புகள்: கோழி இறைச்சியை வேகவைத்த பின் அதன் மெல்லிய கூர்மையான எலும்புகள் நாயின் தொண்டை அல்லது குடலைக் கிழித்துவிடலாம்.

அவகேடோ (Avocado): இதில் உள்ள 'Persin' என்ற நச்சுப் பொருள் நாய்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

நாய்களுக்கு வெங்காயத்தை அறவே தவிர்ப்போம்.. மனிதர்களின் உற்ற தோழனான நன்றியுள்ள நாய்களை பாதுகாப்போம்...

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com