ஜார்ஜியா சுற்றுலா.. ஏன் இந்தியர்களுக்கு கசப்பான அனுபவமாகிறது?

"சந்தேகத்தின் பேரில்" திடீர் சோதனைகள் மற்றும் கடுமையான விசாரணைகளை எதிர்கொள்வதாகவும்....
georgia
georgia
Published on
Updated on
1 min read

2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜார்ஜியாவுக்குச் செல்லும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. இது ஒரு நல்ல வளர்ச்சி என்றாலும், பல இந்திய சுற்றுலாப் பயணிகள், ஜார்ஜிய அதிகாரிகளால் இனரீதியான பாகுபாடு மற்றும் மோசமான நடத்தைகளை எதிர்கொள்கிறார்கள். இதனால், ஜார்ஜியா பயணம் இனிப்பான அனுபவமாக இல்லாமல், கசப்பான அனுபவமாக மாறுகிறது.

பல இந்தியப் பயணிகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். விமான நிலையங்களில் "சந்தேகத்தின் பேரில்" திடீர் சோதனைகள் மற்றும் கடுமையான விசாரணைகளை எதிர்கொள்வதாகவும், செல்லுபடியாகும் ஆவணங்கள் இருந்தும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சடாக்லோ எல்லைச் சாவடியில் நடந்த சம்பவம்: ஒரு குழுவாகப் பயணம் செய்த 56 இந்தியப் பயணிகள், சடாக்லோ (Sadakhlo) எல்லைச் சாவடியில் மனிதநேயமற்ற முறையில் நடத்தப்பட்டனர். அவர்கள் பல மணி நேரம் உறைபனி குளிரில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களது விசாக்கள் செல்லாதவை என்று எந்தவித உரிய மதிப்பாய்வும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டன.

அதேபோல், ஜனவரி 2025-ல் ஒரு தனிப் பயணிக்கு ஏற்பட்ட அனுபவம், மிகவும் பயங்கரமானது. ஒரு Immigration அதிகாரி அவரை அவதூறாகப் பேசியதோடு, "ஏதோ ஒன்றை மறைப்பதாக"க் குற்றம் சாட்டி, அவரை நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்தார்.

2017-ல் நடந்த சம்பவம்: 2017-ல் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் பயணிக்கு இதே போன்ற அனுபவம் ஏற்பட்டது. அவரிடம் தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்தும், பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டார். அவருக்குத் தண்ணீரோ, உணவோ மறுக்கப்பட்டது. பின்னர், எந்தத் தெளிவான காரணமும் இல்லாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்தச் சிக்கல்களுக்குக் காரணம் என்ன?

ஜார்ஜிய அதிகாரிகள் இந்தச் சம்பவங்களுக்கு, சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி என்று விளக்கம் அளிக்கின்றனர். ஆனால், இது இனரீதியான பாகுபாடு கொண்ட ஒரு நடவடிக்கையாகவே கூறப்படுகிறது. பொதுவாக, பெண்கள், குடும்பங்கள், மற்றும் தனியாகப் பயணம் செய்யும் சில பெண்கள் குறைவான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதேசமயம், குழுக்களாகப் பயணம் செய்யும் ஆண்கள் பெரும்பாலும் கடுமையான நடத்தைகளை எதிர்கொள்கிறார்கள்.

இந்த எதிர்மறையான அனுபவங்கள் இருந்தபோதிலும், ஜார்ஜியாவுக்குச் செல்லும் இந்தியப் பயணிகளின் ஆர்வம் முழுமையாகக் குறைந்துவிடவில்லை. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குச் சான்று. இருப்பினும், எல்லைகளில் ஏற்படும் இந்த மோசமான அனுபவங்கள் பலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜார்ஜியா அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான சூழலை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com