காரசாரமான ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி... வீட்டில் செய்து பாருங்க எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி கேப்பாங்க!

அதனுடன் வறுத்த மசாலா கலவை, புளி தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக..
காரசாரமான ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி... வீட்டில் செய்து பாருங்க எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி கேப்பாங்க!
Published on
Updated on
1 min read

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருமே முள்ளங்கியை ஒதுக்குகிறார்கள் காரணம் முள்ளங்கி என்றால் சாம்பார் மட்டும் தான் வைப்பார்கள். எனவே முள்ளங்கியில் உள்ள சத்துக்களை நாம் எடுத்துக்கொள்வதே இல்லை இதை மாற்ற வேண்டும் என்றால் இந்த ஒரு ரெசிபியை முயற்சித்து பாருங்கள் முள்ளங்கியை வெறுத்தவர் அதனை விரும்ப தொடங்கிவிடுவார்கள். ஆந்திரா மாநிலத்தின் சமையல் கலாச்சாரத்தில் பச்சடி எனப்படும் காரசாரமான சட்னிகள் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றன. அவற்றில் முள்ளங்கி பச்சடி அல்லது ஆந்திர ஸ்டைல் முள்ளங்கி சட்னி மிகவும் சுவையானது இந்த சட்னியை எப்படி வீட்டில் எளிதாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முள்ளங்கி 2 நடுத்தர அளவு, பழுத்த சிவப்பு மிளகாய் 6 முதல் 8, தக்காளி – 1 பெரியது, புளி எலுமிச்சை அளவு, இஞ்சி- 1 அங்குல துண்டு, பூண்டு -3,4 பல், கடலை பருப்பு-2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன், மல்லி விதை - 1 டீஸ்பூன்.

செய்முறை

முள்ளங்கியை நன்கு கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும் அப்போதுதான் வேக அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு, உளுந்து, மல்லி விதை, சிவப்பு மிளகாய் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். எரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் இதை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, துருவிய முள்ளங்கி,தக்காளி துண்டுகள், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். முள்ளங்கி மென்மையாகி, கசப்பு வாசனை போகும் வரை நடுத்தர தீயில் வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கலாம். வதங்கிய முள்ளங்கி கலவையை ஆற வைத்து, அதனுடன் வறுத்த மசாலா கலவை, புளி தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். மிகவும் மென்மையாக அரைக்க வேண்டாம்.ஒரு சிறிய கடாயில் தாளிக்க எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கலக்கவும்.

தயார் செய்த முள்ளங்கி சட்னியை சூடான இட்லி, தோசை, கிரிஸ்பியான பெசரட்டு அல்லது சத்தத்துடன் சேர்த்து சாப்பிட்டால்... உங்கள் நாக்கு ஆந்திராவுக்கே போய்விடும்…

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com