இந்த சம்மர்-ல இப்படி கோழி வறுவல் செய்து சாப்பிடுங்க! ஒருமுறை செஞ்சா விடமாட்டீங்க!

எண்ணெயிலேயே கறியை ஒரு அஞ்சு நிமிஷம் நல்லா பிரட்டி விடுங்க. கறி லேசா வெந்து அதோட நிறம் மாறத் தொடங்கும்...
Chettinad Chicken Roast
Chettinad Chicken Roast
Published on
Updated on
2 min read

செட்டிநாடு மசாலா வாசனை தெருவோரம் வீசினாலே அங்க ஒரு பெரிய கூட்டமே கூடிடும். அந்த மசாலாவுல இருக்குற காரமும், மணமும் உலக அளவுல ரொம்பப் பிரபலம். குறிப்பா செட்டிநாடு கோழி வறுவல் அப்படின்னா அதுல இருக்குற அந்தத் தூக்கலான மிளகு வாசனைக்கும், வறுத்து அரைச்ச மசாலாவுக்கும் ஈடு இணையே கிடையாது. "செட்டிநாடு சமையல்னாலே அதுல ஒரு நேர்த்தி இருக்கும்"னு சொல்லுவாங்க. பல பேர் ஹோட்டலுக்குப் போனா முதல்ல ஆர்டர் பண்றது இந்த கோழி வறுவலைத்தான். ஆனா, அந்த அசல் சுவையை நம்ம வீட்லயும் கொண்டு வர முடியும். கடையில விக்குற பொடியைப் பயன்படுத்தாம, செட்டிநாடு மக்கள் பாரம்பரியமா பயன்படுத்துற அந்த ரகசிய மசாலா கூட்டினை எப்படிச் செஞ்சு, ருசியான கோழி வறுவல் பண்ணலாம்னு இப்போ விரிவா பார்ப்போம்.

முதல்ல இந்த வறுவலுக்குத் தேவையான கோழிக் கறியைத் தேர்ந்தெடுக்குறதுல தான் முதல் சூட்சுமமே இருக்கு. முடிஞ்ச வரைக்கும் நாட்டுக்கோழி பயன்படுத்தினா செட்டிநாடு சுவை அப்படியே கிடைக்கும், ஆனா பிராய்லர் கோழியிலயும் இதை அருமையா செய்யலாம். கறியை நல்லா கழுவிட்டுச் சின்னச் சின்ன துண்டுகளா வெட்டிக்கோங்க. கோழி வறுவலுக்குக் கறி நல்லா மசாலாவோட ஒட்டி வரணும்னா துண்டுகள் சின்னதா இருக்குறதுதான் நல்லது. கறியைக் கழுவும்போது கொஞ்சம் மஞ்சள் தூளும், உப்பும் சேர்த்து அலசுனீங்கன்னா அந்தப் பச்சை வாசனை சுத்தமா போயிடும். கறியைச் சுத்தம் செஞ்ச அப்புறம் ஒரு பாத்திரத்துல எடுத்து வச்சுக்கோங்க. இதோட ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் அப்புறம் கொஞ்சமா இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு அரை மணி நேரம் ஊற வைங்க. இப்படிச் செய்றதுனால கறி நல்லா சாஃப்டா (Soft) மாறும்.

இப்போ அந்தச் செட்டிநாடு ரகசிய மசாலா பொடியைத் தயார் செய்வோம். ஒரு வாணலியை அடுப்புல வச்சு மிதமான தீயில சூடுபடுத்துங்க. அதுல ரெண்டு ஸ்பூன் மல்லி விதை, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் மிளகு, நாலஞ்சு காய்ந்த மிளகாய் சேர்த்துக்கோங்க. இதோட கூடவே ஒரு சின்ன துண்டு பட்டை, ரெண்டு ஏலக்காய், மூணு கிராம்பு, ஒரு அன்னாசிப்பூ அப்புறம் கொஞ்சமா கல்பாசி சேர்த்துக்கோங்க. செட்டிநாடு சமையலுக்கு அந்தத் தனித்துவமான மணத்தைக் கொடுக்கிறது இந்த கல்பாசிதான், அதனால இதை மறக்காம சேர்த்துக்கோங்க. மசாலா பொருட்கள் கருகிடாம பொன்னிறமா வறுத்துட்டு, ஆற வச்சு மிக்ஸியில நல்லா நைஸா பொடி செஞ்சு எடுத்துக்கோங்க. இந்த வாசனை அப்போவே உங்க சமையலறையைத் தூக்கும்.

அடுத்ததா ஒரு இரும்பு வாணலியில இல்லனா நல்ல கனமான பாத்திரத்துல மூணு நாலு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊத்திக்கோங்க. அசைவ வறுவலுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துறதுதான் சுவைக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது. எண்ணெய் காஞ்சதும் கொஞ்சம் சோம்பு, கறிவேப்பிலை அப்புறம் ரெண்டு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளிங்க. இதுல ஒரு இருபது சின்ன வெங்காயத்தைப் பொடியா நறுக்கிச் சேர்த்துக்கோங்க. செட்டிநாடு சமையல்ல பெரிய வெங்காயத்தை விடச் சின்ன வெங்காயம்தான் மகாராஜா. வெங்காயம் நல்லா வதங்கி கண்ணாடி மாதிரி வரணும். அதுக்கப்புறம் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதோட பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா வதக்குங்க.

வெங்காயம், இஞ்சி பூண்டு வதங்குனதுக்கு அப்புறம், நாம ஊற வச்சிருக்க கோழிக் கறியை உள்ள சேர்த்துக்கோங்க. கறியைச் சேர்த்த உடனே தண்ணி ஊத்தக்கூடாது. கறியில இருக்குற தண்ணியே போதும். எண்ணெயிலேயே கறியை ஒரு அஞ்சு நிமிஷம் நல்லா பிரட்டி விடுங்க. கறி லேசா வெந்து அதோட நிறம் மாறத் தொடங்கும். இப்போ நாம அரைச்சு வச்சிருக்க அந்தச் செட்டிநாடு ஸ்பெஷல் மசாலா பொடியைத் தாராளமா தூவுங்க. மசாலா எல்லா கறித் துண்டுகள்லயும் படுற மாதிரி நல்லா கிளறணும். இப்போ கறி வேகுறதுக்கு மட்டும் கொஞ்சமா தண்ணி தெளிச்சு விடுங்க. தண்ணி அதிகமா ஊத்துனா அது கிரேவி மாதிரி ஆகிடும், நாம வறுவல் செய்றதுனால தண்ணியைப் பார்த்துச் சேர்க்கணும்.

அடுப்பைச் சிறு தீயில வச்சு ஒரு பத்துல இருந்து பதினைஞ்சு நிமிஷம் அப்படியே விடுங்க. கறி மசாலாவோட சேர்ந்து நல்லா சுருண்டு வரணும். அப்பப்போ கரண்டியால கிளறி விடுங்க இல்லனா அடியில பிடிச்சுடும். கறி நல்லா வெந்து, எண்ணெய் பிரிஞ்சு, மசாலா எல்லாம் கறியோட ஒட்டி ஒரு திக்கான வறுவல் பதத்துக்கு வரும்போது, ஒரு ஸ்பூன் மிளகுத் தூளை மேல தூவுங்க. செட்டிநாடு கோழி வறுவல்ல காரம் கொஞ்சம் தூக்கலா இருந்தாத்தான் ருசி. கடைசியா நிறைய கறிவேப்பிலை அப்புறம் பொடியா நறுக்குன மல்லித்தழையைத் தூவி இறக்குனீங்கன்னா, கமகமக்கும் செட்டிநாடு கோழி வறுவல் தயார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com