
இந்தத் தீபாவளியை இனிமையாகக் கொண்டாட வேண்டும், ஆனால் அதிக நேரம் சமையலறையில் செலவிட விருப்பமில்லையா? அப்படியானால் அதற்குச் சரியான தேர்வு ரிப்பன் பக்கோடா அல்லது ரிப்பன் முறுக்குதான். இதைச் செய்ய அதிக பக்குவமோ, நேரமோ தேவையில்லை. மாவு பிசைந்து, பிழிந்து, பொரிக்க, மொத்தமாகவே 20 நிமிடங்களுக்குள் முடித்துவிடலாம். இதன் தனித்துவமான வடிவம் மற்றும் சுலபமான செயல்முறையால், இது அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிஸ்பியான சிற்றுண்டியாகும்.
இந்தக் கட்டுரையில், உங்கள் ரிப்பன் பக்கோடாவை கடையின் சுவைக்குக் கொண்டு செல்லும் ரகசியமான பொட்டுக்கடலை மாவு சேர்ப்பதற்கான டிப்ஸுடன், முழுமையான செய்முறையைப் பார்க்கலாம்.
கடலை மாவு (Besan): 1 கப் (சலித்தது)
அரிசி மாவு: 1 கப் (சலித்தது)
பொட்டுக்கடலை மாவு (Pottukadalai Maavu): 1/2 கப்
மிளகாய்த்தூள்: 1 முதல் 1.5 டீஸ்பூன்
சீரகம் (அ) ஓமம்: 1 டீஸ்பூன்
வெண்ணெய் (அ) சூடான எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
தண்ணீர்: மாவு பிசையத் தேவையான அளவு
எண்ணெய்: பொரிப்பதற்குத் தேவையான அளவு
1. மாவு கலவையைத் தயார் செய்தல்:
பொட்டுக்கடலை மாவு சேர்ப்பு: பொட்டுக்கடலையை மிக்ஸியில் நன்கு அரைத்து, கட்டிகள் இல்லாமல் சலித்து, தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
சூடான எண்ணெய் / வெண்ணெய் சேர்ப்பு: 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் அல்லது நன்கு சூடாக்கிய எண்ணெயை மாவுக் கலவையுடன் சேர்த்து, கைகளால் நன்கு தேய்த்துப் பிசையவும். இந்தச் சூடான எண்ணெய் தான் பக்கோடாவிற்குத் தேவையான கிரிஸ்பி மற்றும் 'வாயில் கரையும்' தன்மையைத் தரும்.
2. மாவு பிசையும் பக்குவம்:
சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மாவை மென்மையாகப் பிசையவும். மாவு முறுக்கு மாவை விடச் சற்றுத் தளர்வாக இருக்க வேண்டும், ஆனால் கைகளில் ஒட்டக் கூடாது.
கவனத்தில் கொள்க: மாவு மிகவும் தளர்வாகிவிட்டால், பொரிக்கும்போது பக்கோடா அதிக எண்ணெயைக் குடிக்கும். அதனால் தண்ணீர் சேர்க்கும் போது கவனம் தேவை. பிசைந்த மாவைச் சற்று நேரம்கூட வைக்காமல் உடனே பயன்படுத்தலாம்.
ரிப்பன் பக்கோடாவுக்கு உரிய அச்சை (தட்டையான நீளமான துளைகள்) முறுக்கு அச்சில் பொருத்தவும். அச்சின் உள்ளே மாவை நிரப்பவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தீயை மிதமான சூட்டில் வைக்கவும்.
அச்சை எண்ணெயின் மேல் பிடித்து, பக்கோடாவைத் தொடர்ச்சியாக வட்ட வடிவத்தில் பிழியவும்.
பக்கோடா ஒருபுறம் வெந்து, லேசான பொன்னிறம் வந்ததும், திருப்பிப் போட்டு இருபுறமும் சமமாக வேக வைக்கவும். பக்கோடாவின் நுரைகள் முழுவதுமாக அடங்கிய பிறகே, அதை எண்ணெயில் இருந்து எடுக்க வேண்டும்.
பொரித்த ரிப்பன் பக்கோடாவை கிச்சன் டிஷ்யூ பேப்பரில் போட்டு, எண்ணெயை வடித்த பிறகு, நன்கு ஆறியதும் உடைத்து, டப்பாவில் போட்டு மறக்காம மூடி வச்சிடுங்க.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.