

தென்னிந்திய சமையலில் இட்லி மற்றும் தோசைக்குத் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி எனப் பல வகைகள் இருந்தாலும், பூண்டு துவையலுக்கு இருக்கும் மவுசு எப்போதும் தனி தான். பூண்டின் காரமான சுவையும், மணமும் பசியை மேலோங்கச் செய்யும். குறிப்பாக, செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யவும், உடலில் உள்ள தேவையற்ற வாயுவை நீக்கவும் பூண்டு ஒரு அருமருந்தாகச் செயல்படுகிறது. காரசாரமான சுவையை விரும்புபவர்களுக்கு இந்த 'பூண்டு காரத் துவையல்' ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்தத் துவையல் செய்யத் தேவையான முக்கியமான பொருட்கள் என்னென்ன என்று பார்ப்போம். சுமார் 400 கிராம் பூண்டு (உரித்தது), தேவையான அளவு வரமிளகாய் (காரத்திற்கு ஏற்ப), ஒரு எலுமிச்சை அளவு புளி, மற்றும் சுவைக்கேற்ப உப்பு. பூண்டு மற்றும் மிளகாயின் காரத்தைச் சமன் செய்யப் புளி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மேலும், தாளிக்கக் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவை தேவைப்படும்.
செய்முறையைப் பொறுத்தவரை, ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடுபடுத்தவும். முதலில் வரமிளகாயைப் போட்டு வதக்கித் தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் உரித்த பூண்டுப் பற்களைச் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்க வேண்டும். வறுத்த மிளகாய் மற்றும் பூண்டு ஆறியவுடன், அவற்றுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். சில இடங்களில் இதனுடன் துருவிய தேங்காய் சேர்த்தும் அரைப்பதுண்டு.
அடுத்ததாக, இந்தத் துவையலின் சுவையை இரட்டிப்பாக்கத் தாளிப்பு அவசியம். வாணலியில் தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றி (சுமார் 4 டேபிள் ஸ்பூன்), கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கினால் சுவையான பூண்டு துவையல் தயார்!. இந்தத் துவையலைப் பிரிட்ஜில் வைத்து சுமார் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
இந்தத் துவையலை இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, தயிர் சாதம் மற்றும் ரச சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். பூண்டின் மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்தத் துவையல், சளி மற்றும் இருமல் காலங்களில் உடலுக்கு மிகவும் இதமாக இருக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.