"பல்லாவரம் சிக்கன் 65" சாப்பிட்டு இருக்கீங்களா? ஒருமுறை இப்படி செய்து பாருங்க

இந்தக் கலவையில், ஒரு சிறிய கப் தயிரையும் சேர்க்க வேண்டும். தயிர் சேர்ப்பதுதான், கோழி இறைச்சியை மிருதுவாக மாற்றும் ஒரு முக்கியமான ரகசியம்.
"பல்லாவரம் சிக்கன் 65" சாப்பிட்டு இருக்கீங்களா? ஒருமுறை இப்படி செய்து பாருங்க
Published on
Updated on
2 min read

பல்லாவரம் சிக்கன் 65.. பலருக்கும் இதுபற்றி தெரியாது.. இதன் சுவை பற்றித் தெரியாது. அதற்காகத் தான் இந்த கட்டுரை. இந்த முறையில் சிக்கன் 65 தயார் செய்தால், ஒரு முறை செய்தாலும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மீண்டும் மீண்டும் இதையேதான் கேட்கப் போகிறார்கள்.

முதலில், இந்தச் சிக்கன் 65-க்குத் தேவையான மசாலாப் பொடிகளை ஒரு பாத்திரத்தில் தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை நன்றாகச் சுத்தம் செய்து, அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். இத்துடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலந்து விட வேண்டும். இந்தக் கலவையில், ஒரு சிறிய கப் தயிரையும் சேர்க்க வேண்டும். தயிர் சேர்ப்பதுதான், கோழி இறைச்சியை மிருதுவாக மாற்றும் ஒரு முக்கியமான ரகசியம்.

அடுத்ததாக, இந்த மசாலா கலவையுடன் கிரிஸ்பியாக மாற, கடலை மாவு, சோள மாவு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றைச் சம அளவில் சேர்த்து, தண்ணீரே விடாமல் நன்றாகக் கலந்து விட வேண்டும். மாவு குறைவாகச் சேர்ப்பதுதான், பல்லாவரம் சிக்கன் 65-ன் சுவைக்கு முக்கியம். மாவு அதிகமாக இருந்தால், அது வெறும் பக்கோடா போல ஆகிவிடும். மாவு கலவையைச் சேர்த்த பிறகு, இந்தக் கலவை கெட்டியாக இருந்தால் மட்டுமே, பொரிக்கும் போது மாவு உதிராமல் சிக்கனிலேயே ஒட்டி இருக்கும். இந்தக் கலவையை அப்படியே அரை மணி நேரம் ஊற விட வேண்டும். நீங்கள் இந்தச் சிக்கன் 65-ஐ அவசரமாகச் செய்யப் போகிறீர்கள் என்றால், விளக்கெண்ணெய் சேர்ப்பது அவசியம். அதுதான், ஆறு மணி நேரம் ஊற வைத்த சுவையைக் கொடுக்கும்.

இப்போது, சிக்கன் 65-ஐப் பொரிக்கும் முறைக்கு வரலாம். ஒரு பெரிய கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்றாக சூடானதும் தான் சிக்கன் துண்டுகளைப் போட வேண்டும். எண்ணெய் சூடு குறைந்து விட்டால், சிக்கன் அதிக எண்ணெயைக் குடித்துவிடும். அதனால், எண்ணெய் நன்றாகச் சூடான பிறகு, ஒவ்வொரு சிக்கன் துண்டாகப் போட்டு, மிதமான தீயில் வைத்துப் பொரிக்க வேண்டும். சிக்கன் துண்டுகள் பொன்னிறமாக வரும் வரை, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டுப் பொரிக்க வேண்டும். கடைசியாக, அந்த எண்ணெயில் கொஞ்சம் கறிவேப்பிலை மற்றும் இரண்டு பச்சை மிளகாயைத் தனித்தனியாகப் பொரித்து, சிக்கன் 65-ன் மேலே தூவி விட வேண்டும்.

இறுதியாக, சிக்கன் 65 பொரித்த பிறகு, எண்ணெயை ஒரு காகிதத்தில் வடித்து எடுத்து, மேலே கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவிப் பரிமாறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com