கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பயம்.. ஆன்லைனில் விற்றுத் தீர்ந்த இண்டக்ஷன் அடுப்புகள் - கலக்கத்தில் பொதுமக்கள்!

நகர்ப்புற வீடுகளில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இது ஒரு முக்கியமான மாற்று சாதனமாக மாறிவிட்டது...
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பயம்.. ஆன்லைனில் விற்றுத் தீர்ந்த இண்டக்ஷன் அடுப்புகள் - கலக்கத்தில் பொதுமக்கள்!
Published on
Updated on
2 min read

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் எல்பிஜி (LPG) எரிவாயு விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், மக்கள் மாற்று வழிகளைத் தேடி அலைவதால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் இண்டக்ஷன் அடுப்புகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பிளிங்கிட் (Blinkit), செப்டோ (Zepto) மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) போன்ற விரைவு வணிகத் தளங்களில் பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான இண்டக்ஷன் அடுப்பு மாடல்கள் "விற்றுத் தீர்ந்துவிட்டன" (Sold out) என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) அதிகம் நம்பியிருக்கும் பகுதிகளில் இந்தத் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது. குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு உள்ள கிரேட்டர் நொய்டா போன்ற பகுதிகளில் இதன் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்பதால், அங்குக் கூடுதல் இண்டக்ஷன் அடுப்புகள் கையிருப்பில் உள்ளன. கேஸ் விநியோகம் விரைவில் சீராகாவிட்டால் உணவகங்களின் செயல்பாடுகள் முடங்கும் என்று பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் உள்ள உணவக உரிமையாளர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

கூகுள் ட்ரெண்ட்ஸ் தரவுகளின்படி, கடந்த இரண்டு நாட்களில் "இண்டக்ஷன் குக்டாப்" (induction cooktop) என்ற தேடல் இந்தியாவில் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக பீஜியன் (Pigeon), பிலிப்ஸ் (Philips) மற்றும் பிரெஸ்டீஜ் (Prestige) போன்ற பிராண்டுகளை மக்கள் அதிகம் தேடி வருகின்றனர்.

இது குறித்து வொண்டர்செஃப் (Wonderchef) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவி சக்சேனா கூறுகையில், "இண்டக்ஷன் அடுப்புகள் இப்போது மாணவர்கள் அல்லது விடுதிகளில் இருப்பவர்கள் மட்டும் பயன்படுத்தும் ஒரு சாதாரண சாதனம் அல்ல. கடந்த பத்தாண்டுகளில், நகர்ப்புற வீடுகளில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இது ஒரு முக்கியமான மாற்று சாதனமாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார். அவரது தரவுகளின்படி, சுமார் 12-15% நகர்ப்புற வீடுகளில் ஏற்கனவே இண்டக்ஷன் அடுப்புகள் ஒரு கூடுதல் வசதியாக உள்ளன.

இண்டக்ஷன் அடுப்புகளுக்கான தேவை அதிகரிக்கும் போது, அவற்றுக்கு ஏற்ற பாத்திரங்களுக்கான (induction-compatible cookware) தேவையும் அதிகரிக்கிறது. சாதாரண அலுமினிய பாத்திரங்கள் இதில் வேலை செய்யாது என்பதால், மக்கள் துருப்பிடிக்காத எஃகு (stainless steel) மற்றும் செராமிக் பாத்திரங்களை வாங்க முற்படுகின்றனர். இந்தத் திடீர் தேவையால் இத்தகைய பாத்திரங்களின் விலையும் தற்காலிகமாக உயர வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எல்பிஜி நெருக்கடிக்கு முக்கியக் காரணம், இந்தியா தனது எரிவாயு தேவையில் 62-67% இறக்குமதியையே நம்பியுள்ளது. இதில் 85-90% விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. தற்போது அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலால் இந்தப் பாதை முடக்கப்பட்டுள்ளது. இதனால் ஈராக், குவைத் போன்ற நாடுகளின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி வணிகத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. மும்பையில் சுமார் 20% உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அரசு முன்னுரிமை அளித்தாலும், மார்ச் 7 முதல் சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு, டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை சுமார் 913 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 1955-ம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (Essential Commodities Act) அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிலிண்டர்களைப் பதுக்குவதைத் தடுக்கவும், விநியோகத்தைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் 25-30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com