

மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களை தொடர்ந்து சென்னையிலும் உணவகங்கள் மூடப்படும் அபாயம்.
இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்தப் போரின் தாக்கம் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும் போரால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவில் வணிக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று முதல் பெங்களூரில் உள்ள உணவகங்கள் மூடப்படுவதாக பெங்களூர் உணவாக சங்கம் அறிவித்துள்ளது. தற்போது அதன் தாக்கம் சென்னையிலும் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. சென்னையில் பல உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்து தமிழ்நாட்டில் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டால் 5 - 6 நாட்களில் அனைத்து உணவகங்களும் மூடும் அபாயம் உள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க தலைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று சுற்றுலா நகரமான புதுச்சேரி மாநிலத்திலும் மத்திய அரசு உத்தரவின்படி வணிக சிலிண்டரின் விநியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள 750 ஹோட்டல்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது மற்றும் விநியோக பாதிப்பால் பல உணவகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல் இன்றிலிருந்து முக்கிய பல ஹோட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் மட்டுமே நம்பி செயல்படுவதன் காரணமாக உணவு சமைப்பதற்கு மாற்று வழிகள் செயல்படுத்த முடியாது என்கிற நிலையில் புதுச்சேரியில் நாளை முழுவதும் ஹோட்டல்கள் முழுமையாக முடங்கும் என புதுச்சேரி மாநில ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர், உள்துறை அமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு சென்னை ஓட்டல் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிக சங்கம் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களிடமும் எஸ்மா சட்டத்தை அமல்படுத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். இன்று மாலைக்குள் எரிவாயு எந்தெந்த கம்பெனியில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை தெரிவிக்குமாறு அரசு கோரியுள்ளது. அதன்பிறகே மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்து உணவகங்கள் மூடப்படும் சூழலை தமிழக அரசு தடுக்கும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். ESMA (Essential Services Maintenance Act) சட்டத்தின் படி சமையல் எரிவாயுவை பதுக்கினால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் எரிவாயு சிலிண்டரை பதுக்குதல், அதிக விலைக்கு விற்றல் மற்றும் கள்ளச்சந்தை போன்ற விதிமீறல்களை தடுக்கலாம்.
இன்று மாலைக்குள் எரிவாயு இருப்புகள் பற்றி தெரிந்தால் தான் உணவகங்கள் மூடப்படுமா மற்றும் இல்லை சில கட்டுப்பாடுகளுடன் இயங்குமா என தெரிய வரும். இந்த நிலை நாடு முழுவதும் நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் மற்றும் பொது மக்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த எரிவாயு தட்டுப்பாட்டை சரி செய்ய முடியாத பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் இயல்பு நிலை தடுமாறிய நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "அம்மா உணவங்ககளில் தொடர்ந்து உணவு கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இந்நிலையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையின் இந்த நிலை மாநிலம் முழுவதும் எதிரொலிக்குமா? என பொதுமக்கள் அச்சம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்