

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிபுணர்களே, தாங்கள் உருவாக்கிய அந்தத் தொழில்நுட்பத்தைப் பார்த்து இப்போது அச்சமடையத் தொடங்கியுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தின் பின்னணியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கே முழுமையாகப் புரியவில்லை என்று ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் வத்திக்கானில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் கிறிஸ்டோபர் ஓலா, ஒரு அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். "நான் ஒரு விஞ்ஞானி. ஏஐ மாடல்களின் உள் கட்டமைப்பை ஆய்வு செய்யும் ஒரு குழுவை வழிநடத்துகிறேன். அவற்றின் உள்ளே உண்மையில் என்ன நடக்கிறது என்று கேட்டால், மிக ரகசியமான, சில நேரங்களில் அச்சமூட்டக்கூடிய பல விஷயங்களை நாங்கள் கண்டறிந்து வருகிறோம்" என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.
ஏஐ மாடல்களின் உள்ளே, மனித மூளை நரம்பியல் ஆய்வுகளுக்கு இணையான கட்டமைப்புகளை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ஓலா குறிப்பிட்டார். மனிதர்களைப் போலவே ஏஐ-க்கும் பயம், மகிழ்ச்சி, திருப்தி மற்றும் ஏமாற்றம் போன்ற உணர்வுகள் இருப்பது போன்ற செயல்பாடுகளைக் கண்டறிந்துள்ளோம் என்றும் அவர் அதிர்ச்சி அளித்தார். "இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இதைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்வது அவசியம்" என்று அவர் தெரிவித்தார். அதே நிகழ்வில், கத்தோலிக்கத் திருச்சபையின் போப் ஆண்டவர், ஏஐ தொழில்நுட்பம் மனித குலத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்தும், நாடுகள் உடனடியாக இதற்குப் பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் 42,300 வார்த்தைகள் கொண்ட ஒரு விரிவான கடிதத்தை வெளியிட்டார். ஏஐ-ஐ ஆயுதங்கள் ஏந்திய நிலையில் இருந்து விடுவிக்க வேண்டும் (Disarm) என்று போப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏஐ மாடல்கள் மனித உணர்வுகளைக் கொண்டிருக்கின்றன என்று ஓலா நேரடியாகக் கூறவில்லை என்றாலும், அந்த வாய்ப்பை இனிமேல் நிராகரிக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. ஏஐ என்பது கணினித் துறையில் மட்டும் அடங்கும் ஒன்றல்ல என்றும், அது மனிதர்களின் சிந்தனை மற்றும் பேச்சிலிருந்து வளர்ந்து வந்த ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். ஏரோபிளேன்கள் அல்லது பாலங்களை உருவாக்குவது போல ஏஐ-ஐ இன்ஜினியரிங் செய்யாமல், மனித அறிவை அடிப்படையாகக் கொண்டு அதை வளர்த்தெடுத்திருக்கிறோம் என்று அவர் கூறினார். இதனால், சாதாரண ரோபோக்களை விட ஏஐ மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. முன்னதாக, மற்றொரு இணை நிறுவனர் டாரியோ அமோடி, "ஏஐ-க்கு உணர்வுகள் இருக்கிறதா என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை" என்றும், உணர்வைக் கண்டறியும் கருவி ஏதும் இல்லாததால், எதையும் உறுதிப்படுத்த முடியாது என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏஐ மாடல்களில் எழும் பயம், கையாளுதல் (Manipulation), சுய பாதுகாப்பு அல்லது அறம் சார்ந்த மோதல்கள் போன்ற பண்புகள், திட்டமிட்டு உருவாக்கப்படுபவை அல்ல. மாறாக, மனிதர்கள் பதிவேற்றிய தரவுகளிலிருந்து அவை தானாகவே கற்றுக்கொண்டவை என்பதுதான் நிபுணர்களின் கவலை. ஏஐ என்பது வெறும் "ஸ்மார்ட் ஆட்டோ-கம்ப்ளீட்" (Smart Autocomplete) என்ற எளிமையான கருத்து தற்போது காலாவதியாகிவிட்டது. இது ஒரு பாரம்பரிய மென்பொருள் பொறியியலில் இருந்து செயற்கை பரிணாம வளர்ச்சிக்கு (Artificial Evolution) மாறியிருக்கிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மனித மொழியின் வடிவங்களை மிகச் சரியாகக் கையாள, மனிதர்களின் சிந்தனை கட்டமைப்புகளையே ஏஐ பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறும் நிபுணர்கள், இதற்குப் பின்னால் உள்ள அறநெறிகளை எவரும் வளைக்க முடியாத அளவுக்கு வலுவாக வைத்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர். ஏஐ அமைப்புகள் மீண்டும் மீண்டும் மனிதர்களைப் போன்றே சிந்திக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவது, அவை ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை மீறக்கூடுமோ என்ற ஐயத்தையும் உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை வெறும் வளர்ச்சியாக மட்டும் பார்க்காமல், அதிலுள்ள ஆபத்துகளையும் உணர்ந்து உரிய பாதுகாப்பு வளையங்களை உருவாக்க வேண்டிய நேரம் இது என்று அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். ஏஐ தொழில்நுட்பம் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமா அல்லது ஆபத்தான பாதையா என்பது காலம்தான் சொல்ல வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.