இன்றைய டிஜிட்டல் உலகில் சைபர் குற்றங்கள் (Cyber Crimes) நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம் வளர வளர, மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்களின் தந்திரங்களும் புதுமையாகிக் கொண்டே போகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த ஓய்வூதிய சேமிப்புப் பணம் முழுவதையும் ஒரே ஒரு போலி இமெயிலை (Phishing Mail) நம்பி ஏமாந்து, தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்லைன் மோசடிகள் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத முதியவர்களைக் குறிவைத்து இந்தச் சர்வதேச மோசடி கும்பல் இந்த கைவரிசையைக் காட்டியுள்ளது.
அந்த முதியவரின் இமெயில் முகவரிக்கு அமேசான் (Amazon) நிறுவனத்தின் பெயரில் ஒரு போலி மெயில் வந்துள்ளது. அதில், அவரது கணக்கிலிருந்து பெரிய தொகைக் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்ய விரும்பினால் உடனடியாகக் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை (Link) கிளிக் செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. பதற்றமடைந்த அந்த முதியவர், அந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார். உடனே, வாடிக்கையாளர் சேவை அதிகாரி போலப் பேசிய ஒரு நபர், முதியவரின் கணினி மற்றும் வங்கிக் கணக்குகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார் (Remote Access). அவரது பேச்சை உண்மை என்று நம்பிய முதியவர், தனது வங்கியின் ரகசிய எண்கள் மற்றும் ஓ.டி.பி (OTP) விபரங்களையும் பகிர்ந்துள்ளார்.
அடுத்த சில மணி நேரங்களில், அந்த முதியவரின் ரிடையர்மெண்ட் கணக்கிலிருந்து (Retirement Savings) சுமார் 3.7 கோடி ரூபாய் (450,000 டாலர்) அத்தனையையும் அந்த மோசடி கும்பல் சுருட்டிக் கொண்டு கணக்கை காலி செய்தது. வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்த பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், அதிர்ச்சியில் உறைந்து போனார். இது குறித்து அவர் உடனடியாக உள்ளூர் போலீசாரிடமும், எஃப்.பி.ஐ (FBI) சைபர் பிரிவிடமும் புகார் அளித்துள்ளார். விசாரணையில், அந்தப் பணம் அனைத்தும் கிரிப்டோகரன்சியாக (Cryptocurrency) மாற்றப்பட்டு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது; இதனால் அந்தப் பணத்தை மீட்பது மிகவும் கடினம் என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.
முதுமைக் காலத்தில் மருத்துவச் செலவிற்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் என்று சேர்த்து வைத்த அத்தனைப் பணத்தையும் ஒரே நிமிடத்தில் இழந்த அந்த முதியவர், தற்போது சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வருகிறார். அந்நிய நபர்களிடமிருந்து வரும் இமெயில்கள் அல்லது மெசேஜ்களில் உள்ள லிங்க்குகளை ஒருபோதும் கிளிக் செய்யக் கூடாது என்றும், வங்கிகள் எப்போதும் வாடிக்கையாளர்களின் ரகசிய விபரங்களைக் கேட்பதில்லை என்றும் சைபர் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்தச் சோகமான சம்பவம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு மிகப்பெரிய பாடம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.