இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களிலும் ஆன்லைன் தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர். புதிய நபர்களை சந்திப்பது, தகவல்களை பகிர்வது, கருத்துகளை தெரிவிப்பது போன்றவை அவர்களுக்கு புதிதான விஷயங்கள் அல்ல. ஆனால், இதே இளைஞர்கள் தங்களது தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடியவர்களை அணுகும்போது மட்டும் தயக்கம் காட்டுவதாக புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள Gen Z தொழில்முறை வல்லுநர்களில் 83 சதவீதம் பேர் தங்களது தொழில் வாழ்க்கைக்கு உதவக்கூடிய நபர்களுடன் ஆன்லைனில் தொடர்பை உருவாக்க தயங்குகின்றனர் என LinkedIn ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொழில் வளர்ச்சியில் ‘நெட்வொர்க்கிங்’ எனப்படும் தொழில்முறை தொடர்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை இளம் தலைமுறையினரும் புரிந்துகொண்டுள்ளனர். ஆய்வில் பங்கேற்ற இந்திய Gen Z வல்லுநர்களில் சுமார் 79 சதவீதம் பேர் தொழில்முறை உறவுகள் தங்களது எதிர்காலத்திற்கு முக்கியம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இருந்தாலும், அதை நடைமுறையில் செயல்படுத்துவதில் பெரிய இடைவெளி காணப்படுகிறது. 52 சதவீதம் பேருக்கு இதுபோன்ற தொடர்புகளை எங்கிருந்து தொடங்குவது என்பது தெரியவில்லை. மேலும், 53 சதவீதம் பேர் சாதாரணமாக அறிமுகமான ஒருவருடனான தொடர்பை பயனுள்ள தொழில்முறை உறவாக மாற்றுவதில் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தயக்கத்திற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. மற்றவர்கள் தங்களைப் பற்றி தவறாக மதிப்பிடுவார்களோ என்ற அச்சம் 44 சதவீதம் பேரிடம் உள்ளது. ஒருவரை அணுகுவதன் மூலம் அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்திவிடுவோமோ என்ற கவலை 39 சதவீதம் பேருக்கு இருக்கிறது. அதேபோல், தங்களது உரையாடல் இயல்பானதாக இல்லாமல் செயற்கையாகத் தோன்றிவிடுமோ என்ற பயம் 37 சதவீதம் பேரிடம் காணப்படுகிறது. இதனால், உதவி கேட்பது, ஆலோசனை பெறுவது அல்லது புதிய தொழில்முறை தொடர்புகளை உருவாக்குவது போன்ற வாய்ப்புகளை பல இளம் வல்லுநர்கள் தாமாகவே தவிர்த்து வருகின்றனர்.
இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இளம் தலைமுறையினர் நினைப்பதைப் போல மூத்த தொழில்முறை வல்லுநர்கள் அவர்களை நிராகரிப்பதில்லை என்பதுதான். இந்திய Gen Z இளைஞர்களில் 59 சதவீதம் பேர் தொழில்முறை உறவுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை தங்களுக்கு யாரும் தெளிவாக கற்றுக்கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதாவது, பிரச்சினை தொடர்பு கொள்ள விருப்பமின்மை மட்டுமல்ல; எப்படி அணுகுவது, என்ன பேசுவது, எப்போது தொடர்பு கொள்வது போன்ற நடைமுறை வழிகாட்டுதலின் பற்றாக்குறையும் முக்கிய காரணமாக உள்ளது.
தொழில் சந்தையில் தொடர்புகளின் மதிப்பு குறித்தும் LinkedIn தரவுகள் கவனம் ஈர்க்கின்றன. ஒரு நிறுவனத்திற்குள் ஏற்கனவே இருக்கும் தொடர்பு மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு, அத்தகைய தொடர்பு இல்லாதவர்களை விட வேலை கிடைக்கும் வாய்ப்பு சுமார் 8.5 மடங்கு அதிகமாக இருப்பதாக LinkedIn ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், திறமை மற்றும் கல்வித் தகுதிகளுடன் சேர்த்து சரியான தொழில்முறை தொடர்புகளும் வேலைவாய்ப்பில் முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளன.
அப்படியானால் இந்த தயக்கத்தை எப்படி கடக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு மிகப்பெரிய தீர்வு, நெட்வொர்க்கிங்கை ஒரு கட்டாயமான ‘வேலை தேடும் நடவடிக்கை’ என்று பார்ப்பதைத் தவிர்ப்பதுதான். ஒருவரது LinkedIn பதிவில் பயனுள்ள கருத்தை பகிர்வது, துறையைச் சேர்ந்தவர்களின் பதிவுகளை தொடர்ந்து கவனிப்பது, பழைய கல்லூரி அல்லது பணியிடத் தொடர்புகளை மீண்டும் அணுகுவது போன்ற எளிய நடவடிக்கைகளிலிருந்தே இதை தொடங்கலாம். ஒவ்வொரு தொடர்பும் உடனடியாக வேலைவாய்ப்பாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தேவையில்லை.
LinkedIn-ன் ஆசிரியர் மற்றும் Creator Management பிரிவைச் சேர்ந்த நிராஜிதா பானர்ஜியும், தனது ஆரம்பகால தொழில் வாழ்க்கையில் மூத்தவர்களை அணுகுவதற்கு முன்பு பலமுறை உரையாடலை மனதில் ஒத்திகை பார்த்ததாக பகிர்ந்துள்ளார். அவர் ‘networking’ என்ற வார்த்தையைவிட ‘உறவுகளை உருவாக்குதல்’ என்ற அணுகுமுறையை விரும்புவதாக கூறியுள்ளார். இந்த பார்வை, தொழில்முறை தொடர்புகளை வெறும் வேலைக்கான பரிந்துரை பெறும் முயற்சியாக அல்லாமல், நீண்டகால உறவாக பார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
AI வேகமாக பணிச்சூழலை மாற்றி வரும் நிலையில், திறமையுடன் சேர்ந்து மனிதர்களுடனான தொடர்பும் எதிர்கால தொழில் வாழ்க்கையில் முக்கியமானதாக மாறி வருகிறது. ஆன்லைனில் இருப்பது மட்டும் போதாது; சரியான நபர்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்குவதும் அவசியம். Gen Z தலைமுறையினருக்கு ஏற்கனவே டிஜிட்டல் உலகத்துடன் பழகிய அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தை தொழில்முறை உறவுகளாக மாற்றும் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், அவர்களுக்கு கிடைக்காமல் போகும் பல வாய்ப்புகள் திறக்கப்படலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்