

கடும் வெயில் சுட்டெரிக்கும் இந்த கோடை காலத்தை சமாளிக்கவும், வெப்பத்தில் இருந்து உடலை தற்காத்துக் கொள்ளவும், இயற்கை நமக்கு பல்வேறு கொடைகளை அள்ளித் தந்துள்ளது. அதில் ஒன்றுதான் "கம்பங்கூழ்" ஆகும். பொதுவாக கூழ் என்றால் கேழ்வரகு மாவில் செய்யப்படும் கூழ்தான் பலருக்கும் தெரியும். ஆனால் கம்பு மாவினால் செய்யப்படும் கம்பங்கூழ் அதிக ருசி கொண்டதுடன், உடலுக்கு குளிர்ச்சியை அள்ளித் தந்து, பல்வேறு நன்மைகளையும் அளவில்லாமல் தருகிறது.
கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலரும் ஜூஸ், ஐஸ்கிரீம் போன்ற வெளிநாட்டு பானங்களை எடுத்துக்கொள்கின்றனர். அது அவர்களின் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை உணராமல் குளிர்ச்சியாக, இனிப்பாக இருப்பதால் மட்டுமே அதனை தேடி தேடி ருசித்து வருகின்றனர். ஆனால் இயற்கையான, ஆரோக்கியமான முறையில் நம் உடலை குளிர்ச்சியாக வைக்க நம்மிடம் கம்பங்கூழ் இருக்கும்போது வெளிநாட்டு பானங்கள் எதற்கு?
உடலை குளிரவைக்கவும் மட்டுமல்லாமல் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாகவும் கம்பங்கூழில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. அந்த வகையில் தினமும் காலையில் கம்பங்கூழ் குடித்து வந்தால் உடலுக்கு என்னென்ன சத்துகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ் - கடுமையான வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அத்துடன் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டையும் தடுக்க வேண்டும். இதற்கு பெரிதும் உகந்தது, இந்த கம்பங்கூழ்.
செரிமானத்தை மேம்படுத்தும் - கம்பங்கூழ், உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கிறது. உடல் எடையைக் குறைக்கும் - கம்பங்கூழ் உட்கொள்வது வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், தேவையற்ற உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரும்பு சத்து நிறைந்துள்ளது: கம்பங்கூழில், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகையை நீக்கும்
கோடைகாலத்திற்கு ஏற்ற இந்த ஆரோக்கிய பானம், உடலுக்கு உடனடி ஆற்றலை தரக்கூடியது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்: கம்பங்கூழில், குறைந்த கிளைசெமிக் குறியீடு (Low Glycemic Index) இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. உடனடி சத்து தரும் - கம்பங்கூழில்,சக்தி வாய்ந்தது (Energy Booster) புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து, சோர்வை நீக்குகிறது. எலும்புக்கு வலுவூட்டும் - இதில் உள்ள கால்சியம், எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. மேலும் இயற்கையான புரோபயாடிக் (Probiotic) பண்புகளைக் கொண்டுள்ளதால், குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
குறிப்பு: கம்பங்கூழை மண் பாத்திரத்தில் வைத்து மறுநாள் காலையில் பருகினால், அதன் புரோபயாடிக் நன்மைகள் முழுமையாக கிடைக்கும்.
கம்பங்கூழ் செய்வது எப்படி? கம்பங்கூழ் செய்ய தேவையான பொருட்கள்...
கம்பு - கால் கிலோ, தயிர் - அரை லிட்டர், உப்பு - தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 20, தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை: முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் காய விடவும். பிறகு மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த கம்பை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி, கைவிடாமல கிளறவும். பின்னர் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கிளறி வேக விடவும். கம்பு வெந்து, கூழ் கெட்டியானதும், அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியானதும், அதில் தண்ணீரை ஊற்றி அடுப்பை அணைத்து மூடி வைத்துவிடவும். பின்னர் 8 மணி நேரம் கழித்து, கம்பங்கூழை கட்டிகள் இல்லாமல் கலந்து, அதில் தயிர் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கரைத்து, பருகினால் உடலுக்கு குளிர்ச்சி மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியமான உணவும் தயார்.
கம்பில் வைட்டமின் பி, வைட்டமின் சி, மெக்னீசியம், இரும்பு சத்துகள் நிறைந்துள்ளன. அதுபோல் பொட்டாசியம், மெக்னீசியமும் அதிக அளவு உள்ளதால் இவை இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை சீர்செய்து இதய நலனை பாதுகாக்கும். எனவே தினமும் நம் டயட்டில் கம்பங்கூழ் எடுத்துக்கொள்வது நல்லது.
அதிலும் இந்த ஆரோக்கிய பானத்தை மண் பாத்திரத்தில் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். எனவே அடிக்கடி இந்த இயற்கையான பானத்தை செய்து கொடுங்கள்., நீங்களும், உங்கள் குடும்பமும் ஆரோக்கியமாக வாழலாம்..
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.