அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. உங்கள் சேமிப்புக்கு, பாதிப்பு என்பது துளிகூட இல்லாமல், சரியான வட்டியுடன் வருகின்றது இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்கள். மேலும் ஷேர் மார்க்கெட் போன்ற பிற சேமிப்பு திட்டங்களை ஒப்பிடும்போது, வட்டி குறைவாக இருந்தாலும், நம் பணத்திற்கு என்னவாகுமோ என்ற பயம் இல்லாமல் இதில் சேமிக்க முடியும்.
நடுத்தர அல்லது வறுமைக்கோட்டில் வாழும் இளம் பெற்றோர்கள், அதிகம் கவலைப்படுவது இரு விஷயங்கள் குறித்து தான். ஒன்று அவர்களை பெற்ற பெற்றோரின் இறுதி காலம், மற்றும் தாங்கள் பெற்ற குழந்தைகளின் எதிர்காலம். இன்று இந்த பதிவில், இளம் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை சிறந்ததாக மாற்ற ஒரு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
பலருக்கும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டம் குறித்து தெரியும். ஆனால் தமிழக அரசு, ஆண் குழந்தைகளுக்கும் அப்படி ஒரு திட்டத்தை வைத்துள்ளது. அது தான், பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம். ஆண் குழந்தைகளுக்காக கடந்த 2015ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்ட ஒரு திட்டமிது. பிற அஞ்சலக சேமிப்புகளை ஒப்பிடும்போது, மிக மிக அதிக வட்டி தரும் திட்டமாகவும் இது உள்ளது.
யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணையலாம்?
தமிழகத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள். 10 வயது கடந்த ஆண் பிள்ளைகளின் பெயரிலேயே இந்த திட்டம் துவங்க முடியும். 10 வயதிற்கு குறைவான குழந்தை என்றால், பெற்றோரின் பாதுகாப்பின் கீழ் இதில் சேரலாம்.
விண்ணப்பம் செய்யும் ஆண் குழந்தையின் குடும்பத்தார் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்க வேண்டும். அதாவது SC, ST, MBC மற்றும் DNC ஆகிய வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் அந்த ஆண் குழந்தை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்க வேண்டும். கல்லூரியில் பயில்பவர்களுக்கும் இது பொருந்தும். ஒரு குடும்பத்தை பொறுத்தவரை, ஒரு ஆண் குழந்தைக்கு மட்டுமே இந்த திட்டத்தில் இணைய வாய்ப்பு கிடைக்கும்.
திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள், இதில் மாதம் 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரை உங்களால் சேமிக்க முடியும். உங்கள் குழந்தைக்காக மாதம் நீங்கள் 3000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். 15 ஆண்டுகளின் முடிவில் சுமார் 5,40,000 ரூபாயை நீங்கள் அசலாக சேர்த்திருப்பீர்கள்.
இன்றைய தேதியில் இந்த பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் 9.7 சதவிகித வட்டியுடன் சேர்த்து, உங்களுக்கு 15 ஆண்டுகளின் முடிவில், வட்டியாக மட்டும் 6,34,000 ரூபாய் கிடைக்கும். மாதந்தோறும் உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றாலும் கூட, LUMPSUM என்ற முறையிலும் உங்களால் இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்க முடியும்.
இந்த திட்டத்தை இடை நிறுத்தி, அதில் உள்ள பணத்தை எடுக்க வேண்டும் என்றால், அது திட்டம் துவங்கப்பட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் சாத்தியமாகும். மேலும் இந்த திட்டத்தை பொறுத்தவரை TDS பிடித்தம் `இருக்காது என்றாலும், இந்த திட்டத்தால் வரி சலுகைகள் பெறமுடியாது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்