சேமிப்பு என்று வரும்போது பல மடங்கு லாபம் தருவதில் சிறந்த ஒன்றாக திகழ்ந்து வருகின்றது தங்க சேமிப்பு. உலக அளவில் பிற நாட்டவரை ஒப்பிடும்போது, தங்கம் மீது அதிக ஆர்வம்கொண்டவர்கள் தான் இந்தியர்கள். குறிப்பாக தமிழகத்தில், தங்கத்தின் புழக்கம் என்பது மிக அதிகம். அதன் மீதான ஆசை இதற்கு ஒரு காரணம் என்றால், அதை சேமிப்பதால் கிடைக்கும் பலன்களும் அதிகம் தான்.
1950களின் துவக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 100 ரூபாயாக இருந்தது, இன்று 10 கிராம் தங்கத்தின் விலையோடு ஒப்பிட்டு பார்த்தல் நமக்கு தலையே சுற்றும். அந்த அளவிற்கு ஆண்டுக்கு ஆண்டு, இந்த தங்கத்தின் விலையானது உயர்ந்துகொண்டே உள்ளது. அப்போது அதை சேமிப்பது ஒரு நல்ல சேமிப்பாக அமையுமா என்றால், நிச்சயம் அமையும் என்பது தான் பதில்.
ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் வாங்க வேண்டும் என்றாலும் கூட, ஒரு நடுத்தர வருமானம் கொண்ட குடும்பம் அதற்காக பல மாதங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். 8000 ரூபாயை தாண்டி பறந்துகொண்டிருக்கும் தங்கத்தை சேமிக்க வேண்டும் என்றால் அது சற்று சிரமமான வழி தான். ஆனால் அந்த தங்கத்தை கூட சிறு சிறு பங்குகளாக வாங்க வழியுண்டு.
அது தான் தங்க பத்திர திட்டம், தனியார் நிறுவனங்கள், பங்கு சந்தைகளில் கூட உங்களால் தங்கத்தை இந்த முறையில் சேர்க்க முடியும்.
Non Physical Gold
உருவமற்ற தங்கம், அதாவது ஆபரணமாக, அல்லது நாணயமாக தங்கத்தை சேர்க்காமல், இணைய வழியில் அதை சேமிக்க இப்பொது வழி உள்ளது. முன்பே கூறியதை போல இந்த வகை தங்கத்தை சேர்க்க, பங்கு சந்தை போன்ற சில வழிகள் இருந்தாலும், நமக்கு துளி கூட பயம் ஏற்படுத்தாத ஒரு வழி உள்ளது. அது தான் அஞ்சலக தங்க பத்திர திட்டம்.
Sovereign Gold Bond (SGB)
தங்கத்திற்கு ஒரு மாற்று முதலீட்டை வழங்குவதற்காக, இந்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த தங்கப் பத்திரத்தை (SGB) அறிமுகப்படுத்தியது. SGB-கள் அரசால் வழங்கப்படும் பத்திரங்கள் என்பதால் அவை பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.
எப்படி சேர்ப்பது?
இந்த தங்க பத்திரங்களை வாங்க பல வழிகள் உள்ளது, அதில் ஒன்று தான் அஞ்சலகம். அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்றாலே, அங்கு உங்களால் இந்த பத்திரங்களை வாங்க முடியும். 1 கிராம் முதல் 4 கிலோ வரை இந்த திட்டத்தில் உங்களால் தங்க பத்திரங்களை வாங்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பத்திரங்களை வாங்க குறிப்பிட்ட சில நாள்கள் ஒதுக்கப்படும். அன்றைய தேதியில் மட்டுமே உங்களால் இந்த பத்திரங்களை அஞ்சலகத்தில் வாங்க முடியும்.
இது ஒரு நல்ல சேமிப்பா?
நிச்சயம் இது ஒரு நல்ல சேமிப்பு முறை தான். காரணம், உங்களுக்கு வேண்டிய அளவில் உங்களால் தங்கத்தை வாங்க முடியும். அதே நேரம் இதை நீங்கள் விற்கும்போது, தங்கத்தின் அன்றைய தேதியின் மதிப்பும், அதனோடு சேர்த்து 2.5 சதவிகித வட்டியும் உங்களுக்கு கிடைக்கும். அஞ்சலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருந்தாலே இதை உங்களால் எளிமையாக பெறமுடியும். தங்கத்தை வீட்டில் வைத்து பாதுகாக்கும் கவலையும் இதில் உங்களுக்கு இருக்காது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்