

இன்றைய அவசர உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை எனக்கு ரொம்பத் டென்ஷனாக இருக்கிறது என்பதுதான். வேலைப்பளு, குடும்பச் சுமை, பொருளாதாரப் பிரச்சனைகள் எனப் பல காரணங்களால் மனிதன் தன் நிம்மதியை இழந்து நிற்கிறான். மன அழுத்தம் என்பது வெறும் மனதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை, அது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளுக்கும் காரணமாகிறது. எனவே மனதை அமைதியாக வைத்துக் கொள்வது என்பது தற்போதைய காலத்தில் மிக முக்கியமான வாழ்வியல் கலையாக மாறிவிட்டது.
மன அழுத்தத்தைக் குறைக்க மிக எளிய வழி நம் சுவாசத்தைக் கவனிப்பதுதான். ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கண்களை மூடி ஆழமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியே விட வேண்டும். இவ்வாறு செய்யும்போது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரித்து, நரம்பு மண்டலம் அமைதி அடையும். கிராமங்களில் மக்கள் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள், அதுவே ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணிதான். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவதும், சிரிப்பதும் நம் உடலில் உள்ள கெட்ட ஹார்மோன்களை வெளியேற்றி மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்களைத் தூண்டும்.
நமக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவதும் டென்ஷனைக் குறைக்க உதவும். அது இசை கேட்பதாகவோ, சமையல் செய்வதாகவோ அல்லது குழந்தைகளுக்குக் கதை சொல்வதாகவோ இருக்கலாம். நாம் எப்போது நம்முடைய கவலைகளைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசிக்கிறோமோ, அப்போதுதான் அழுத்தம் அதிகமாகிறது. அதற்குப் பதிலாக தற்போதைய தருணத்தில் வாழ்வதைப் பழகிக் கொள்ள வேண்டும். வருங்காலத்தைப் பற்றிய பயமும், கடந்த காலத்தைப் பற்றிய கவலையும்தான் நம் நிம்மதியைப் பறிக்கின்றன. கையில் இருக்கும் இந்த நிமிடம் மட்டுமே உண்மையானது என்பதை உணர்ந்தாலே பாதி டென்ஷன் குறைந்துவிடும்.
நல்ல தூக்கம் என்பது மன ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். இரவு நேரத்தில் சீக்கிரம் படுத்துக் காலையில் சீக்கிரம் எழும் வழக்கம் கொண்டவர்களுக்கு மனச்சோர்வு குறைவாகவே இருக்கும். அதேபோல், உணவிற்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதிக காரமான மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்த்து, இயற்கையான காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் இலகுவாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனம் உற்சாகமாகச் செயல்படும். எனவே, டென்ஷனைத் தூக்கி எறிந்து விட்டு, சின்னச் சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியைத் தேடுங்கள்; வாழ்க்கை மிக அழகாக மாறும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.