உடல் எடையைக் குறைப்பது என்பது உணவைத் தவிர்ப்பது அல்ல, சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதே ஆகும். பலர் எடையைக் குறைக்கிறேன் என்று பட்டினி கிடந்து ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். எடையைக் குறைக்க விரும்புவோர் முதலில் 'கார்போஹைட்ரேட்' அதிகம் உள்ள வெள்ளை அரிசி மற்றும் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். இவற்றுக்குப் பதிலாகப் புரதச்சத்து (Protein) மற்றும் நார்ச்சத்து (Fiber) அதிகம் உள்ள பருப்பு வகைகள், முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் நிறைந்த உணவுகள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும், இதனால் தேவையற்ற நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கலாம்.
தினமும் காலையில் ஒரு பெரிய கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது ஜீரண மண்டலத்தைச் சுறுசுறுப்பாக்கும். உணவை நன்றாக மென்று நிதானமாகச் சாப்பிடுவது சீக்கிரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவும். மாலை நேரங்களில் வறுத்த உணவுகளுக்குப் பதிலாகப் பழங்கள் அல்லது வேக வைத்த சுண்டல் சாப்பிடலாம். இரவு உணவை மிகவும் லேசாக வைத்துக் கொள்வது எடையைக் குறைக்க மிக முக்கியம்.
உடற்பயிற்சி இல்லாமல் எடையைக் குறைப்பது சாத்தியமில்லை. தினமும் 45 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது உடலில் உள்ள கலோரிக்களை எரிக்க உதவும். போதுமான உறக்கம் இல்லாவிட்டாலும் உடல் எடை கூடும் என்பதால் 7 மணி நேரத் தூக்கம் அவசியம். அவசரப்பட்டு எடையைக் குறைக்க 'மாத்திரைகளை' நாடுவது ஆபத்தானது. பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைத்துத் தன்னம்பிக்கையுடன் வாழலாம். அழகை விட ஆரோக்கியமே முக்கியம் என்பதை உணருங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.