

வெளிநாட்டில் கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் அன்றாட சவால்கள் மற்றும் அவர்களின் கடின உழைப்பு குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது கனடாவில் வசிக்கும் ஜோதி கராயத் என்ற இந்திய மாணவி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது படிப்பு, பகுதிநேர வேலை மற்றும் அன்றாட செலவுகளைச் சமாளிக்க அவர் எவ்வளவு போராடுகிறார் என்பதை அந்த வீடியோ கண்முன்னே நிறுத்துகிறது.
ஜோதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், காலை கல்லூரிக்குச் சென்றுவிட்டு வந்த கையோடு ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் நேராக ஸ்டார்பக்ஸ் காபி ஷாப்பில் தனது வேலைக்காகத் தயாராவதைக் காட்டியுள்ளார். வெளிநாட்டில் தங்கிப் படிக்கும் ஒரு சராசரி இந்திய மாணவரின் ஒரு நாள் எவ்வளவு நெருக்கடியானது என்பதை அவரது பதிவு விளக்குகிறது.
தனது இந்த ஓயாத உழைப்பு குறித்துப் பேசிய ஜோதி, இது ஒரு தொடர்ச்சியான சுழற்சி என்று குறிப்பிட்டுள்ளார். கல்லூரி கட்டணம் செலுத்தப் பணம் தேவைப்படுகிறது, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் காலையில் கல்லூரி, மதியம் வேலை, பின்னர் மீண்டும் கல்லூரி, இரவு மீண்டும் வேலை எனத் தனது வாழ்க்கை ஒரு சக்கரம் போலச் சுழன்று கொண்டிருப்பதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இவ்வளவு சவால்கள் இருந்தாலும், இந்த வாழ்க்கையைத் தான் மகிழ்ச்சியுடனேயே எதிர்கொள்வதாக அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஜோதியின் நிலையைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் தங்கிப் படிக்கும் பல மாணவர்கள் இதே போன்ற சூழலைத் தான் எதிர்கொள்கின்றனர் என்றும், கல்விச் செலவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்காகப் பகுதிநேர வேலை செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாகவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். படிப்புக்கும் வேலைக்கும் இடையே சமநிலையைப் பேணுவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக மாணவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜோதியின் இந்த வீடியோவிற்கு ரிப்ளை செய்த ஒரு பயனர், "இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், அதுவே வாழ்க்கைக்குப் போதுமானது" என்று அவரைத் தேற்றியுள்ளார். மற்றொருவரோ, "உங்களைப் போன்றவர்களைப் பார்க்கும்போது எங்களுக்கெல்லாம் ஒரு உத்வேகம் கிடைக்கிறது" என்று பாராட்டியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.