காலையில் 'மலம்' அள்ளும் வேலை - இரவில் 'மெர்சிடிஸ் பென்ஸ்' ரைடு! திருமணத்தில் தனது கழிவு நீர் வாகனங்களை பயன்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்

சீனாவை சேர்ந்த ஒருவர் தனது திருமண நாள் அன்று மணமகளை வரவேற்பதற்காக ஒன்பது கழிவுநீர் தொட்டி லாரிகளை கொண்டு சென்று வரவேற்றுள்ளார்.
காலையில் 'மலம்' அள்ளும் வேலை - இரவில் 'மெர்சிடிஸ் பென்ஸ்' ரைடு!
திருமணத்தில் தனது கழிவு நீர் வாகனங்களை பயன்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்
Published on
Updated on
2 min read

சீனாவைச் சேர்ந்த ஒருவர், தன் பெற்றோரைப் பின்பற்றி கழிவுநீர் அகற்றும் தொழிலில் இறங்கியுள்ளார். அவர் தனது திருமண நாளன்று மணமகளை வரவேற்பதற்காக ஒன்பது கழிவுநீர் தொட்டி லாரிகளைப் பயன்படுத்தியது இணையத்தில் வைரலானது. சீனாவை சேர்ந்த மணமகன் பான் ஹாவனானின் சொந்த ஊரான, மத்திய அன்ஹுய் மாகாணத்தின், சுயிசி மாவட்டத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

பானின் தந்தை, சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தின் சிக்ஸி என்ற சிறிய நகரத்தில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீரை அகற்றி கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பான் ஜூனியர், கல்லூரியில் திரைப்படத் தொகுப்புப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஆனால், தனது சொந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் தோல்வியடைந்த பிறகு, அவர் 2023ல் தனது தந்தையின் பணியில் சேர்ந்தார். அவரது தந்தை, இணையம் வழியாக ஆர்டர்களைப் பெறும் பணியில் ஈடுபட, பான் ஜூனியர் பல தொழிலாளர்களைக் கழிவுநீர் தொட்டி லாரிகளை ஓட்ட அவர்களை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.

அதன் பின்பு, பான் மற்றும் அவரது காதலி, லீ யாகிங் ஆகியோருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது, தங்களின் திருமண வாகனங்களாக 'கழிவுநீர் தொட்டி லாரிகளைப் பயன்படுத்தலாம்' என்று பான் கூறியிருக்கிறார், அதற்கு லீ-யும் சம்மதித்துள்ளார். "இதுபோன்ற ஒரு திருமண ஊர்வலம் காதல் மயமானது. அவருடைய வேலை மற்றவர்களின் வேலையிலிருந்து பெரிதும் வேறுபட்டது என்று நான் நினைக்கவில்லை. அவர் பணம் சம்பாதிப்பதற்காகக் கடினமாக உழைக்கிறார். அதைத்தான் நான் மிகவும் மதிக்கிறேன்," என்று அவரது காதலி லீ கூறியிருக்கிறார்.

ஆனால், மலக்கழிவுத் தொட்டி வாகனங்களை திருமண நிகழ்வில் பயன்படுத்துவதை பானின் பெற்றோர்கள் எதிர்த்துள்ளனர். அதன் பின்பு அவரது காதலி லீ சம்மதித்த பிறகு, அவனுடைய பெற்றோரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். திருமண விழாவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முன்பு, அந்த ஒன்பது லாரிகளும் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு, சிவப்பு காகிதப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டன.அவற்றில் இரண்டு வாகனங்கள், பான் நிறுவனத்திற்குச் சொந்தமானவை, மீதமுள்ளவை அவரது தொழில் நண்பர்களிடமிருந்து கடனாகப் பெறப்பட்டவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், இது, சோர்வான மற்றும் அழுக்கான வேலை என்று கருதியதால், பானின் பெற்றோர் ஆரம்பத்தில் அவர் தங்கள் துறையில் பணிபுரிவதை ஆதரிக்கவில்லை என்று பான் கூறினார். பானின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகே அவர்கள் பின்னர் சம்மதித்துள்ளார்.

"என் வேலையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், நாங்கள் மிகவும் அழுக்கான மற்றும் துர்நாற்றம் வீசும் வேலையைச் செய்தாலும், நாங்கள் சம்பாதிக்கும் பணம் தூய்மையானது. மற்ற தொழில்களுடன் ஒப்பிடும்போது, ​​எங்கள் தொழில் மிகவும் நிலையானது.மக்கள் சாப்பிடவும் கழிவறைக்குச் செல்லவும் தேவைப்படும் வரை, எங்கள் தேவை இருக்கிறது. கழிவுநீர் வடிகால் இருக்கும் வரை, எங்கள் தேவை இருக்கிறது," என்று அவர் கூறினார். வேலையில் கழிவுநீர் தொட்டி லாரியை ஓட்டுவதாகவும், ஆனால் வேலை முடிந்ததும் தனது குடும்பத்தின் மெர்சிடிஸ்-பென்ஸ் காரை ஓட்டுவதாகவும் பான் கூறினார். அவர் மாதத்திற்கு சுமார் 30,000 யுவான் (4,300 அமெரிக்க டாலர்) சம்பாதிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த நிகழ்வு இணையத்தில் பலலட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com