கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மலைப்பிரதேசங்களும், குளிர்ந்த இடங்களும் தான். குறிப்பாக மே மாதம் பள்ளி விடுமுறை மற்றும் அலுவலக விடுமுறைகள் வருவதால், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல இதுவே சரியான நேரமாகும். இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வெயில் சதம் அடித்து வரும் வேளையில், தகிக்கும் வெப்பத்திலிருந்து தப்பித்து மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய மிகச்சிறந்த 7 சுற்றுலாத் தலங்களை என்டிடிவி (NDTV) வெளியிட்டுள்ளது. இந்த இடங்கள் உங்களை இயற்கையோடு இணைய வைப்பதோடு மட்டுமல்லாமல், குறைந்த செலவில் ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது இமயமலையின் மடியில் அமைந்துள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கு (Spiti Valley). இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்த இடம் 'இந்தியாவின் திபெத்' என்று அழைக்கப்படுகிறது. மே மாதத்தில் இங்குள்ள வானிலை மிகவும் இதமாகவும், பனி படர்ந்த மலைச்சிகரங்களைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாகவும் இருக்கும். இங்குள்ள பழமையான புத்த மடாலயங்கள் மற்றும் உயரமான கிராமங்கள் உங்கள் பயணத்தை ஒரு ஆன்மீகத் தேடலாக மாற்றும். சாகச விரும்பிகளுக்கு ட்ரெக்கிங் செய்ய இது ஒரு சொர்க்கபுரி என்றே சொல்லலாம். அமைதியை விரும்புபவர்கள் நிச்சயம் ஒருமுறை ஸ்பிதி பள்ளத்தாக்கிற்குச் சென்று வர வேண்டும்.
அடுத்ததாக, 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில் உள்ள மூணார் (Munnar). தென்னிந்தியாவில் மே மாதத்தில் செல்வதற்கு மூணாரை விடச் சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைகள் மற்றும் இதமான தட்பவெப்பநிலை உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். மே மாதத்தில் மற்ற இடங்கள் வெயிலில் வாடும்போது, மூணாரில் நீங்கள் மேகக் கூட்டங்களுக்கு நடுவே உலாவலாம். குடும்பத்துடன் செல்வதற்கும், தேனிலவு ஜோடிகளுக்கும் மூணார் எப்போதும் ஒரு 'ஆல் டைம் ஃபேவரிட்' இடமாகவே இருந்து வருகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங் (Shillong), இந்த மே மாதப் பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. 'கிழக்கின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் இங்குள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏரிகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மே மாதத்தில் இங்குள்ள வானிலை மிகவும் ரம்மியமாக இருக்கும். குறிப்பாக ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமமான மாவ்லின்னோங் மற்றும் வேர் பாலங்கள் (Root Bridges) உங்களை வியக்க வைக்கும். மேகங்கள் உங்கள் கைகளைத் தொட்டுச் செல்லும் அனுபவத்தை நீங்கள் ஷில்லாங்கில் உணரலாம்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கௌசானி (Kausani) மற்றொரு சொர்க்கமாகும். இமயமலையின் 300 கி.மீ தூரப் பரப்பளவை இங்கிருந்து நீங்கள் ஒரே பார்வையில் ரசிக்கலாம். மகாத்மா காந்தியால் 'இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என்று வர்ணிக்கப்பட்ட இந்த இடம், மே மாதத்தில் செல்வதற்கு மிகவும் ஏற்றது. அமைதியான சூழலில் புத்தகங்களை வாசிக்கவும், இயற்கையை ரசிக்கவும் விரும்புவோருக்கு இது ஒரு மிகச்சிறந்த தளம். அதேபோல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாசுங் (Lachung) கிராமமும் மே மாதத்தில் ஜில்லுனு இருக்கும். இங்குள்ள பூக்களின் பள்ளத்தாக்கு மற்றும் பனி படர்ந்த பாதைகள் உங்கள் பயணத்தை வாழ்நாள் நினைவாக மாற்றும்.
இமாச்சலப் பிரதேசத்தின் மற்றொரு முத்து மணாலி (Manali). மே மாதத்தில் மணாலி செல்வது என்பது ஒரு மேஜிக் அனுபவமாகும். சோலாங் பள்ளத்தாக்கில் பாரா கிளைடிங் செய்வது முதல் ரோஹ்தாங் பாஸில் பனிச்சறுக்கு விளையாடுவது வரை பல சாகசங்கள் இங்கு காத்திருக்கின்றன. பியாஸ் நதியின் ஓரம் அமர்ந்து மாலையைக் கழிப்பது உங்களுக்கு மிகப்பெரிய மனநிம்மதியைத் தரும். இறுதியாக, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் (Tawang). கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் உள்ள இந்த இடம், மே மாதத்தில் ஒரு குளிர்ந்த சொர்க்கமாகத் திகழ்கிறது. இங்குள்ள பிரம்மாண்டமான புத்த மடாலயம் மற்றும் அருவிகள் உங்களை மெய்மறக்கச் செய்யும். இந்த 7 இடங்களும் மே மாத வெயிலை மறக்கச் செய்து உங்களை ஒரு ஜில்லுனு ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்லும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்