ஒரு நாளைக்கு எத்தனை Spam கால்கள்? இனி அதிரடி கட்டுப்பாடு... TRAI எடுத்த அதிரடி முடிவு!

செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, இந்தச் செயலி 42.36 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது...
TRAI New Rules
TRAI New Rules
Published on: 
Updated on: 
2 min read

தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை மொபைல் போனுக்கு வரும் தேவையற்ற விளம்பர அழைப்புகள், வங்கி கடன் சலுகைகள், கிரெடிட் கார்டு விளம்பரங்கள் எனப் பல தொலைபேசி அழைப்புகளால் மக்கள் சலிப்படைந்து வருகின்றனர். சில நேரங்களில் முக்கியமான அழைப்புகளுக்கு நடுவே மோசடி செய்யும் நோக்கத்துடன் வரும் அழைப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்த இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விதிகளை மீறிய 1.24 லட்சத்துக்கும் அதிகமான தொலைத்தொடர்பு இணைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 374 நிறுவனங்களும் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த 2026-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் முறையாக விதிகளை மீறிய 1,10,325 மொபைல் எண்கள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு இணைப்புகளின் வெளிச்செல்லும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் 15 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் விதிகளை மீறிய 13,777 இணைப்புகள் ஓராண்டுக்கு துண்டிக்கப்பட்டுள்ளன.

தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட 3,725 எஸ்எம்எஸ் தலைப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறிய 374 நிறுவனங்கள் ஓராண்டுக்கு தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் அந்த நிறுவனங்கள் புதிதாக தொலைத்தொடர்பு இணைப்புகளைப் பெற முடியாது. இதன் மூலம் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த TRAI தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மூன்று மாதங்களில் மட்டும் தேவையற்ற வணிக அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தொடர்பாக TRAI-க்கு 15.29 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இதில் 7.23 லட்சம் புகார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய புகார்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் புகார்களைப் பதிவு செய்வதற்கு TRAI-யின் DND செயலி முக்கியப் பங்காற்றியுள்ளது. மொத்த புகார்களில் 92.9 சதவீதம், அதாவது 14.21 லட்சம் புகார்கள் இந்தச் செயலி மூலமாகவே வந்துள்ளன. செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, இந்தச் செயலி 42.36 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்தேகத்திற்குரிய அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் கண்டறிந்து வருகின்றன. இந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 1,990 கோடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் சந்தேகத்திற்குரியவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 1,828 கோடி தொலைபேசி அழைப்புகளும், 162 கோடி குறுஞ்செய்திகளும் அடங்கும். சந்தேகத்திற்குரிய தகவல்களை அனுப்பியதாகக் கருதப்பட்ட நிறுவனங்களுக்கு 45.9 லட்சத்துக்கும் அதிகமான எச்சரிக்கை அறிவிப்புகளும் அனுப்பப்பட்டுள்ளன.

விளம்பர அழைப்புகளையும், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் முக்கியமான தகவல் அழைப்புகளையும் மக்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் தனித்தனி எண் வரிசைகளையும் TRAI அறிமுகப்படுத்தியுள்ளது. விளம்பர அழைப்புகளுக்கு 140 என்ற எண் வரிசையும், வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த தகவல் அழைப்புகளுக்கு 1600 என்ற எண் வரிசையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள், சரக்கு விநியோகம் மற்றும் பொருட்களை வீட்டுக்கு எடுத்துவந்து கொடுக்கும் நிறுவனங்களின் தகவல் அழைப்புகளுக்காக ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் 1601 என்ற புதிய எண் வரிசையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 22.449 கோடி மொபைல் வாடிக்கையாளர்கள் தங்களது அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி விருப்பங்களை DND பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். இது இந்தியாவின் மொத்த 134.9 கோடி தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களில் 16.64 சதவீதமாகும். மீதமுள்ள 112 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இதுவரை தங்களது விருப்பங்களைப் பதிவு செய்யவில்லை.

தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் மோசடி முயற்சிகளைக் கட்டுப்படுத்த TRAI தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. தெரியாத எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்குரிய அழைப்புகளை நம்பி தனிப்பட்ட விவரங்கள், வங்கி ரகசிய எண்கள் போன்றவற்றைப் பகிரக் கூடாது. அதேபோல், தேவையற்ற விளம்பர அழைப்புகள் தொடர்ந்து வந்தால் DND செயலி மூலம் புகார் அளிக்கலாம். இதன் மூலம் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.