கிராமத்து ஸ்டைல் Leather Jacket மீன் குழம்பு! ஒருமுறை இப்படிச் செய்து பாருங்கள், வீடே மணக்கும்!

குழம்பு பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதித்து ஓரளவிற்குச் சுண்டி வர வேண்டும்...
கிராமத்து ஸ்டைல் Leather Jacket மீன் குழம்பு! ஒருமுறை இப்படிச் செய்து பாருங்கள், வீடே மணக்கும்!
Published on
Updated on
2 min read

மீன் பிரியர்களுக்குக் கடல் மீன்களில் மிகவும் பிடித்தமான ஒன்று Leather Jacket மீன் ஆகும். இதன் தோல் சற்று தடிமனாகவும், காய்ந்த நிலையில் ஒரு தோல் சட்டை அணிந்தது போலவும் இருப்பதாலேயே இதற்கு ஆங்கிலத்தில் Leather Jacket என்ற பெயர் வந்தது. இந்த மீனின் சிறப்பு என்னவென்றால், இதில் முட்கள் மிகக் குறைவாகவும், சதைப்பற்று அதிகமாகவும் இருக்கும்.

Leather Jacket மீனின் தோலை உரிப்பது சற்று கடினமான வேலை என்பதால், மீன் வாங்கும் இடத்திலேயே தோலை நீக்கித் துண்டுகளாக வெட்டி வாங்கி வருவது நல்லது. வீட்டிற்கு வந்ததும் மீன் துண்டுகளைச் சுத்தமான தண்ணீரில் கழுவி, அதில் சிறிது கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துப் பிசிறி வைக்க வேண்டும். இது மீனில் உள்ள கவுச்சி வாடையை முழுமையாக நீக்க உதவும். பின்னர் ஒரு எலுமிச்சை அளவு புளியை எடுத்து ஒரு கோப்பை தண்ணீரில் ஊற வைத்து, அதன் கரைசலைத் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலில் மூன்று தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள், இரண்டு தேக்கரண்டி மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு மண் சட்டியை வைத்து, அதில் நான்கு தேக்கரண்டி சுத்தமான நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்துத் தாளிக்க வேண்டும். வெந்தயம் கருகிவிடாமல் சிவந்தவுடன், ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயத்தைப் பாதியாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, அதனுடன் பத்து பற்கள் பூண்டு மற்றும் இரண்டு நடுத்தர அளவு தக்காளிப் பழங்களைச் சேர்த்து மசிய வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது, நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள புளி மற்றும் மசாலா கரைசலைச் சட்டியில் ஊற்ற வேண்டும். குழம்பு பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதித்து ஓரளவிற்குச் சுண்டி வர வேண்டும்.

குழம்பு நன்கு கொதிக்கும் போது, நாம் கழுவி வைத்துள்ள Leather Jacket மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக உள்ளே சேர்க்க வேண்டும். மீன் துண்டுகளைச் சேர்த்த பிறகு கரண்டியைக் கொண்டு அதிகமாகக் கிளறக் கூடாது, இல்லையெனில் மீன் துண்டுகள் உடைந்து குழம்பின் சுவையைக் கெடுத்துவிடும். சட்டியை லேசாக ஆட்டிவிட்டு, மூடி போட்டு மிதமான தீயல் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். Leather Jacket மீன் சீக்கிரமாக வெந்துவிடும் என்பதால் அதிக நேரம் அடுப்பில் வைக்கத் தேவையில்லை.

இந்த மீன் குழம்பைச் சூடான சாதத்துடன் பரிமாறலாம். மண் சட்டியில் சமைத்த குழம்பு என்பதால், சமைத்த உடனே சாப்பிடுவதை விட இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துச் சாப்பிடும் போது மீனில் மசாலாக்கள் நன்கு இறங்கிச் சுவை அபாரமாக இருக்கும். குறிப்பாக அடுத்த நாள் காலை பழைய சாதத்துடன் இந்த Leather Jacket மீன் குழம்பைச் சேர்த்துச் சாப்பிடுவது ஒரு சொர்க்கமான அனுபவத்தைத் தரும். புரதச்சத்து நிறைந்த இந்த மீன் குழம்பை உங்கள் வீட்டில் சமைத்து அசத்துங்கள். இந்த முறையில் நீங்கள் ஒருமுறை சமைத்தால், மீண்டும் மீண்டும் இதையே விரும்பிச் செய்வீர்கள் என்பது உறுதி.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com