காரை மாற்ற போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! மெகா அப்டேட்டுடன் வரும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் - ரிலீஸ் தேதி இதோ!

பிரீமியம் லுக் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் காரின் உட்புறத்தை இன்னும் அழகாக்கியுள்ளன...
Volkswagen-Tiguan-Facelift-
Volkswagen-Tiguan-Facelift-
Published on
Updated on
2 min read

இந்திய கார் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தனது பிரபலமான டைகுன் (Taigun) எஸ்யுவி காரை மிகப்பெரிய மாற்றங்களுடன் மீண்டும் களமிறக்கத் தயாராகிவிட்டது. ஏற்கனவே இந்த கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த புதிய மாடலுக்கான அதிகாரப்பூர்வ டீஸரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட டைகுன் கார் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிறுவனம் உறுதி செய்துள்ளது. காரின் அடிப்படை வடிவம் மாறவில்லை என்றாலும், அதன் வெளித்தோற்றம் மற்றும் இன்ஜின் செயல்திறனில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனைப் பொறுத்தவரை, அதன் ஒரிஜினல் ஸ்டைல் அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்பக்க கிரில் மற்றும் பம்பர் பகுதியில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் ஹெட்லேம்ப்கள் மற்றும் பின்பக்க டெயில் லேம்ப்கள் முற்றிலும் புதிய டிசைனில் ஜொலிக்கப் போகின்றன. பக்கவாட்டில் பார்க்கும்போது, புதிய அலாய் வீல்கள் காருக்கு ஒரு ஸ்போர்ட்டியான லுக்கைத் தருகின்றன. இந்த சிறிய மாற்றங்கள் காருக்கு ஒரு ஃப்ரெஷ்ஷான தோற்றத்தைக் கொடுத்துள்ளதால், எஸ்யுவி பிரியர்களிடையே இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை, டேஷ்போர்டு டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், இன்டீரியர் தீம் மற்றும் வண்ணங்களில் புதிய தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. சமீபத்தில் அறிமுகமான ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ள அனைத்து நவீன வசதிகளும் இதிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரின் அடிப்படை மாடலிலேயே (Base Variant) நீண்ட வசதிகள் பட்டியல் வழங்கப்பட உள்ளதால், பட்ஜெட் விலையில் கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக அமையும். பிரீமியம் லுக் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் காரின் உட்புறத்தை இன்னும் அழகாக்கியுள்ளன.

இந்த புதிய மாடலில் மெக்கானிக்கல் ரீதியாக ஒரு மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய மாடலில் இருந்த 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர்ந்தாலும், கியர்பாக்ஸ் வசதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 1.0 லிட்டர் இன்ஜினில் இருந்த 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிற்குப் பதிலாக, இப்போது அதிநவீன 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல், 1.5 லிட்டர் இன்ஜின் கொண்ட மாடல் இனி 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸுடன் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த மாற்றங்கள் காரின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் மைலேஜை இன்னும் மேம்படுத்தும்.

இந்த புதிய அறிமுகம் குறித்துப் பேசிய ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிராண்ட் இயக்குனர் நிதின் கோலி, புதிய டைகுன் கார் ஒரு வலிமையான பரிணாம வளர்ச்சி என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் துடிப்பான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த கார் உருவாகியுள்ளதாகவும், இது ஓட்டுநர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்றும் அவர் கூறினார். இந்தியாவிலேயே இன்ஜினியரிங் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த கார், ஒவ்வொரு நாளும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காரின் விலை மற்றும் இதர விவரங்கள் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com