

கோடை வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்க இயற்கை தந்த கொடைதான் இளநீர்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தக் கூடிய எளிமையான இயற்கை பானம் இளநீர்...
இளநீர் வெறும் சுவைக்காகவும், தாகம் தீர்ப்பதற்காகவும் பருகும் பானம் அல்ல...மாறாக, இளநீரில் ஏராளமான சத்துக்களும், பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
வெப்ப தளர்ச்சி நோயைத் தடுக்கும்:
வெயிலால் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை போக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது இளநீர். அத்துடன், களைப்பு, தாகம், தலைவலி, வாந்தி, தலை சுற்றல், மயக்கம் போன்ற வெப்ப தளர்ச்சி நோயால் ஏற்படும் பாதிப்புகளை போக்கும் தன்மை கொண்டது இளநீர்.
அத்துடன் வெயில் காலத்தில் நோய் தொற்று பரப்பும் கிருமிகள் அதிகரிப்பதால், அம்மை , அக்கி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கோடை வெயிலால் ஏற்படும் இதுபோன்ற அத்தனை நோய்களுக்கும் ஒரே தீர்வு என்றால், அது இது இயற்கை நமக்கு பரிசளித்த இளநீர் என்று சொல்லலாம்.
சிறுநீர் கடுப்பை போக்கும்:
கோடையில் வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால், நீர் சத்து குறைந்து விடுகிறது. இதன் விளைவாக சிறுநீர் கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இளநீர் சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. இதன் மூலம் சிறுநீரக கற்களை கரைக்கவும் உதவுகிறது.
உடலுக்கு புத்துணர்ச்சி தரும்:
இளநீர் உடலுக்கு தேவையான மினரல் சத்துக்களையும், ஆற்றலையும் அளித்து, உடலை புத்துணர்ச்சியுடனும் தேவையான நீர் சத்துடனும் வைக்கிறது. இளநீரில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் உள்ளன. இது உடலில் உள்ள பி.ஹெச் அளவை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன், இளநீர் ஜீரணசக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டைத் தணித்து, வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மை உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துகிறது.
வயிற்றுப் போக்கைத் தடுக்கும்:
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை மற்றும் வழுவழுப்பான தன்மையால், வயிற்றுப் போக்கை தடுக்க சிறந்த மருந்தாகும்.
ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும்:
இளநீர் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கவும், சிறந்த டானிக் ஆக செயல்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை அழிக்க வல்லது இளநீர். ரத்தத்தை சுத்திகரிக்கும் இளநீர், மலச்சிக்கல், வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கு அருமருந்தாகவும் உள்ளது. அல்சர் நோயாளிகள் தினமும் இளநீர் சாப்பிடலாம்...
கெட்டக் கொழுப்பை நீக்கி, மாரடைப்பைத் தடுக்கும்:
அதுமட்டுமின்றி, வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதுடன், உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி, சரும பராமரிப்புக்கும் இளநீர் பெரிதும் உதவுகிறது. காலை வெறும்வயிற்றில் இளநீர் குடிப்பதால் முகப்பருக்கள் நீங்கும். மேலும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, சருமம் பொலிவு பெற உதவுகிறது.
ஆஸ்துமா, சளி, சைனஸ், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இளநீரை பருகலாம்...
செயற்கை குளிர்பானங்களை தவிர்ப்போம்
கோடை காலத்தில் மட்டுமின்றி, அனைத்து காலங்களிலும் கிடைக்கும், இளநீர் ஓர் அரிய இயற்கை பானமாகும்.
வெயிலில் வெளியில் செல்லும்போது, ரசாயன கலவைகள் நிறமூட்டிகள் கலந்த செயற்கையான குளிர்பானங்களை வாங்கி குடிப்பதை விடுத்து, இத்தனை சத்துகள் நிறைந்த, இயற்கை நமக்கு தந்த கொடையான இந்த இளநீரை வாங்கிப் பருகினால், தாகம் தீர்ப்பதுடன், எத்தனையோ நோய்களுக்கும் இது அருமருந்தாக அமையும்... எனவே, சுத்தமான, சுவையான, சத்தான இளநீரை பருகுவோம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்போம்...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.