

கோடைகாலம் வந்துவிட்டால் ஆங்காங்கே தர்பூசணி கடைகள் முளைத்துவிடும். கண்ணைக் கவரும் இதன் சிவப்பு நிறம், நம்மையறியாமல் நம்மைக் கடைக்கு இழுத்து சென்றுவிடும் .
லேசாக மிளகாய்ப் பொடியை தூவி சாப்பிட்டால் ஒரு சுவை என்றால் எதுவும் சேர்க்காமல் அப்படியே சாப்பிட்டால் இன்னுமொரு சுவை. தர்பூசணி இயற்கை நமக்கு தந்த கோடையின் கொடை என்றுதான் சொல்ல வேண்டும். கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்ததுதான் இந்த தர்பூசணி.
கோடை வெயில் தொடங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மக்கள் குளிர்ச்சியான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை நாடி செல்கின்றனர். அந்த வகையில், வெயிலுக்கு ஏற்ற உணவுகளில், முக்கிய இடம் வகிப்பது இந்த தர்பூசணி பழம் என்றால் அது மிகையில்லை. தர்பூசணி வெறும், சுவைக்காகவும், தாகத்திற்காகவும், சாப்பிடும் பழம் மட்டுமல்ல. நீங்கள் நினைத்தே பார்த்திராத. ஏராளமான சத்துக்கள் இந்த தர்பூசணியில் இருக்கின்றன. இந்த தர்பூசணி, மாரடைப்பு மற்றும் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றால் நம்ப முடியவில்லையா...? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குத்தான் தொடர்ந்து படியுங்கள்.
நீர் இழப்பை கட்டுப்படுத்தும் :
கோடை காலங்களில், வெயிலால், அதிக அளவில் வியர்வை வெளியேறி நமக்கு நீர் இழப்பு ஏற்படுகிறது. இந்த நீரிழப்பால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
கோடையில் ஏற்படும் இந்த நீரிழப்பை போக்க அருமருந்தாக விளங்குவது இந்த தர்பூசணி பழங்கள். இந்த பழத்தில் 90 சதவீதம் அளவிற்கு நீர்ச்சத்து உள்ளது. இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு (Dehydration) பிரச்னைகள் ஏற்படாது.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் :
நடுத்தர வயதினரின் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணி குறைக்கும். அத்துடன் தமனிகள் சிறப்பாகச் செயல்படவும் தர்பூசணி பெரிதும் உதவுகிறது.
இதய நலனைக் காக்கும் :
தர்பூசணியில் லைக்கோபீன் (Lycopene) என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. இது ஃப்ரீ ராடிகல்ஸ் எனப்படும் நச்சுத் தன்மை கொண்ட உணவுப் பொருட்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்கும் தன்மை கொண்டது.
தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைத்து, இதயத்துடிப்பை சீராக்குகிறது. இதன் மூலம் இதயத்தை பாதுகாப்பதுடன், இளமையாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கும் :
லைக்கோபீன் (Lycopene) மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை கொண்டது.
கண்களைப் பாதுகாக்கும் :
தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூடீன் (Lutein), சியாக்ஸன்தின் (zeaxanthin) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. இவை மாலைக்கண்நோய், கண்விழி மிகை அழுத்த நோய் (Glaucoma) போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
எலும்புகளை பாதுகாக்கும் :
தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்புகளை பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் (Osteoporosis) தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :
தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, காயங்களை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் கொண்டது. அத்துடன் அடிக்கடி நோய் தொற்று ஏற்படுவதையும் தடுக்கிறது.
எடையைக் குறைக்கும்:
தர்பூசணியில் பெருமளவுக்கு நீர் இருப்பதால் அதில் கலோரி மிக மிக குறைவு. இதனால் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் எடை குறையும்.
கழிவுகளை எளிதாக வெளியேற்றும்:
தர்பூசணியில் நார் சத்து நிறைந்துள்ளதால், இது உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. அத்துடன்,
சிறுநீர் வெளியேறும்போது சிரமம் கொடுக்கும் அமோனியாவை , கல்லீரலில் இருந்து வெளியேற்றி, சிறுநீரகத்துக்குசிரமம் இல்லாமல் திரவக் கழிவுகளை வெளியேற்ற இது பெரிதும் உதவுகிறது. ஆனால், அதே நேரம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும் உஷார்.
மனநிலையைச் சிறப்பாக வைத்திருக்க உதவும்:
தர்பூசணியில் வைட்டமின் பி 6 சத்து உள்ளது. இது, நமது மூளையில் பல வேதிப்பொருட்களை உற்பத்தி செய்ய உதவக்கூடியது. இந்த வேதிப்பொருட்கள்தான் நமது நடவடிக்கை மற்றும் மனநிலைக்குக் காரணமாக அமைகின்றன. வைட்டமின் பி 6- குறைபாடுகளே மனஅழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. தர்பூசணியை தொடர்ந்துச் சாப்பிட்டுவந்தால், மனநிலை அமைதியாக, மாறுகிறது.
சருமம் மற்றும் தலை முடியை பாதுகாக்கிறது:
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும், தலைமுடிக்கும் ஊட்டமளித்து பொலிவுடன் வைக்க உதவுகிறது இந்த தர்பூசணி பழம்.
இதிலுள்ள பீட்டா கரோட்டின் , உடலில் வைட்டமின் ஏ வாக மாற்றப்படுகிறது. இது முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. பழத்தை சாப்பிட்டப் பின்னர் இதன் பட்டையை ( வெள்ளை பகுதியை ) தூக்கி எறியாமல், முகத்தில் தடவலாம். இதில் பாக்டீரியாத் தொற்று மற்றும் அலர்ஜிக்கு எதிரான தன்மை உள்ளது. முகப்பரு பிரச்னைக்கும் இது நல்ல தீர்வு தரும்.
இத்தனை நன்மைகள் கொண்ட, இயற்கையின் கொடையான இந்த தர்பூசணியை அடிக்கடி வாங்கி சாப்பிட்டு, உடல் நலத்தையும், முகப் பொலிவையும் பாதுகாப்போம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.