இளம் பருவத்தினரிடையே குறையும் உடற்பயிற்சி பழக்கம்... சிறுமிகளின் நிலை சிறுவர்களைவிட மோசம் என ஆய்வில் அதிர்ச்சி !

சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இடையே காணப்படும் உடற்பயிற்சி வேறுபாடாகும்...
Adolescent Physical Activity Study
Adolescent Physical Activity Study
Published on: 
Updated on: 
2 min read

இன்றைய தலைமுறை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வாழ்க்கைமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளி, படிப்பு, செல்போன், இணையம், வீடியோ கேம்கள் என அவர்களின் அன்றாட நேரம் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தபடியே கழிகிறது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கும் பழக்கமும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் இளம் பருவத்தினரின் உடல் இயக்கம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக, சிறுமிகளின் உடற்பயிற்சி அளவு சிறுவர்களைவிட மிகவும் குறைவாக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் 11 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரில் நான்கில் ஒருவர், கடந்த ஒரு வாரத்தில் ஒரு நாள்கூட குறைந்தது 60 நிமிடங்கள் உடலுக்கு உழைப்பு தரும் செயல்களில் ஈடுபடவில்லை. இந்த எண்ணிக்கை சுமார் 24 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இளம் பருவத்தினரில் கணிசமான பகுதியினர் வாரம் முழுவதும் போதிய உடல் இயக்கம் இல்லாமல் இருக்கின்றனர். சராசரியாக ஒரு வாரத்தில் 2.7 நாட்கள் மட்டுமே அவர்கள் உடல் இயக்கத்தில் ஈடுபடுகின்றனர். ஏழு நாட்களும் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுவதாகக் கூறியவர்கள் வெறும் 14 சதவீதம் மட்டுமே.

சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இடையே காணப்படும் உடற்பயிற்சி வேறுபாடாகும். ஒரு வாரத்தில் எந்த நாளிலும் போதிய உடல் இயக்கம் இல்லாத சிறுமிகளின் எண்ணிக்கை 28 சதவீதமாக உள்ளது. சிறுவர்களிடையே இந்த அளவு 22 சதவீதமாக இருக்கிறது. அதேபோல், வாரத்தின் ஏழு நாட்களும் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் உடல் இயக்கத்தில் ஈடுபடும் சிறுவர்கள் 17 சதவீதமாக உள்ளனர். ஆனால், சிறுமிகளின் எண்ணிக்கை வெறும் 11 சதவீதம் மட்டுமே. உலகின் பெரும்பாலான நாடுகளிலும் இந்த வேறுபாடு காணப்படுவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இதற்குப் பல காரணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நகர்ப்புறங்களில் விளையாடுவதற்கான திறந்தவெளி இடங்கள் குறைவது, போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பற்ற சாலைகள், பள்ளிகளில் விளையாட்டு வசதிகள் போதிய அளவில் இல்லாதது போன்றவை குழந்தைகளின் உடல் இயக்கத்தைக் குறைக்கின்றன. இதனுடன் செல்போன், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் வீடியோ கேம்களில் அதிக நேரம் செலவிடுவதும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. சிறுமிகளைப் பொறுத்தவரை, வெளியில் விளையாடுவதற்கான சமூகக் கட்டுப்பாடுகள், பாதுகாப்பு குறித்த பெற்றோரின் கவலைகள், விளையாட்டு வாய்ப்புகள் குறைவாக இருப்பது போன்ற தடைகளும் அவர்களின் உடல் இயக்கத்தைப் பாதிக்கின்றன.

இந்த ஆய்வு 140 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நடத்தப்பட்ட 389 மக்கள் தொகை அடிப்படையிலான ஆய்வுகளின் தகவல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 முதல் 17 வயதுக்குட்பட்ட 32 லட்சத்துக்கும் அதிகமான இளம் பருவத்தினரின் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் 'தி லான்செட் குளோபல் ஹெல்த்' மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக இளம் பருவத்தினரின் உடல் இயக்க அளவில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதும் ஆய்வின் முக்கியமான தகவலாகும்.

ஆய்வில் இந்தியா இடம்பெறாததும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இந்தியா முழுவதையும் அல்லது பெரிய அளவிலான பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஆய்வின் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குப் பொருந்தும் நம்பகமான தரவுகள் கிடைக்காததால் இந்தியாவைச் சேர்க்க முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் இளம் பருவத்தினரில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் இந்தியாவில் வாழும் நிலையில், அவர்களின் உடல் இயக்கம் குறித்த தேசிய அளவிலான நம்பகமான தகவல்கள் இல்லாதது முக்கியமான குறையாகப் பார்க்கப்படுகிறது.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை எதிர்காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதய நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை உடல் இயக்கமின்மை அதிகரிக்கக்கூடும். மேலும், உடல் எடை அதிகரிப்பு, உடல் தகுதி குறைதல் மற்றும் மனநலப் பாதிப்புகளுக்கும் இது காரணமாக அமையலாம். இளம் வயதிலேயே உடற்பயிற்சி பழக்கத்தை உருவாக்குவது எதிர்கால ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய பள்ளிகளில் விளையாட்டு நேரத்தை அதிகரிப்பது, மாணவர்களுக்கு பாதுகாப்பான விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்துவது, சிறுமிகளுக்கான விளையாட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. மேலும், நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயணத்திற்கு ஏற்ற சாலைகள், பொதுப் பூங்காக்கள், திறந்தவெளி விளையாட்டு இடங்கள் ஆகியவற்றை உருவாக்கவும் அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறுவது மட்டுமே போதாது. அதற்கான பாதுகாப்பான சூழலையும் குடும்பங்களும் பள்ளிகளும் சமூகமும் உருவாக்க வேண்டும். மதிப்பெண்களுக்கும் தேர்வுகளுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் போலவே உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய காலம் இது என்பதை இந்த ஆய்வு உலக நாடுகளுக்கு நினைவூட்டுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.