தெரு நாய்களுக்கு ஏன் திடீரெனெ இவ்வளவு வெறி..!? கடியிலிருந்து தப்பிக்க இதுதான் ஒரே வழி..!

நாய்களை, அதன் இயல்பில் இருந்து மாற்றியது யார்...? நாமும், நம் வாழ்க்கை முறையும்...
stray-dogs
stray-dogs
Published on
Updated on
3 min read

சமீப காலமாக தெரு நாய்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி துரத்தி கடிப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனால் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில், முகாம்கள் அமைக்கப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

அத்துடன் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நாய்களின் உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சிப் மூலம் நாய்களின் உரிமையாளர்களின் விவரங்கள் அறிப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற சிப் பொருத்தப்படாத மற்றும் உரிமம் பெறாத வளர்ப்பு நாய்கள் கண்டறியப்பட்டால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.பொதுவாக நன்றிக்கு உதாரணமாக சொல்லும் ஒரே விலங்கு நாய் மட்டும்தான். ஒரே ஒரு முறை ஒரு பிஸ்கெட் வாங்கி போட்டு விட்டால் போதும், அது வாழ்நாள் வரை அந்த நன்றியை மறக்காமல், நம்மை எங்கு பார்த்தாலும், வாலைக் குழைத்து தனது அன்பையும், நன்றியையும் தெரிவிக்கும். அப்படி ஒரு நன்றியுள்ள ஜீவன்தான், இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

ஆம்... நாய், தனக்கே உரிய பண்பில் இருந்து விலகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஏனென்றால், தெருவில் செல்லும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரத்தி துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இது அதிர்ச்சியான ஒரு உண்மைதான். ஆனால் நாயின் பிறவி குணமும், அதன் பண்பும்,  மாறிப் போனதற்கு என்ன காரணம். அல்லது யார் காரணம் என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் இது. 

நாயின் இன விருத்தியை கட்டுப்படுத்துவது, இதற்கு எந்த வகையிலும் தீர்வாகாது. அத்துடன் நாய்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது, நாய் கடித்தால் தொற்று நோய் பரவுவதை தடுக்குமே தவிர, நாய்கள் கடிப்பதை தடுக்க எந்த வகையிலும் உதவாது என்பதுதான் நிதர்சனம். 

மனிதர்கள் தோன்றியது முதல் நாய்கள் மனிதர்களுக்கு நல்ல நண்பனாக, உற்ற தோழனாக இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட நாய்கள் மனிதர்களை இப்படி துரத்தி, துரத்தி கடிக்கத் தொடங்கியது எப்போது என்பதை யோசிக்க வேண்டிய தருணம் இது. அதற்கும் நம்முடைய வாழ்க்கை முறைதான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? ஆம். முன்பெல்லாம், வீட்டில் குழந்தைகள் மீச்சம் வைக்கும் சாப்பாடு அல்லது அனைவரும் சாப்பிட்டு மிச்சம், மீதியுள்ள உணவை, வீட்டின் வெளியில் உள்ள ஏதோ ஒரு கல் அல்லது ஒரு பாத்திரம் வைத்து அதில் அந்த மீதியான உணவுகளை போடுவார்கள். 

இந்த உணவுக்காகவே காத்திருக்கும் தெருநாய்கள் ஆர்வமாய் வந்து சாப்பிடும். இப்படி ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தது 5, 6  நாய்களாவது இருக்கும். எல்லோர் வீட்டு உணவையும் சாப்பிட்டுவிட்டு, அந்த தெருவையும், மக்களையும் பாதுகாக்கும். ஆனால் இன்று, இப்படி மிச்சமாகும் அளவிற்கு யாரும் உணவு சமைப்பதில்லை. மிகவும் அளவாக சிக்கனமாகவே சமைக்கின்றனர். அப்படியே உணவு பொருட்கள் மீதம் ஆனாலும், அந்த உணவை ஒரு பாலிதீன் கவரில் கட்டி "dust bin"-னில் போட்டு விடுகிறோம். இன்று எந்த வீட்டின் முன்னாலும், இப்படி நாய்களுக்கான உணவு வைக்கும் கல்லோ, இடமோ இல்லை என்பதை மறுப்பதற்கில்லை.  

இதேபோன்று திருமண மண்டபங்களில் வாழையிலையில் வகைவகையான விருந்து பரிமாறப்படும் நிலையில், திருமணத்திற்கு வந்தவர்கள் சாப்பிட்ட பின்னர் இந்த வாழை இலைகள் அப்படியே திருமண மண்டபத்தின் வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள், இதில் மிச்சமுள்ள உணவுகளை தெரு நாய்கள் தின்று பசியாறும்.  அதுமட்டுமல்ல, அந்த வாழை இலைகள் தெருவில் உள்ள மாடுகளுக்கு உணவாகும்.

ஆனால் இன்றைய நிலையை யோசித்து பாருங்கள். திருமணங்களில் விருந்து பரிமாறப்பட்டவுடன் டேபிளில் உள்ள பேப்பருடன் வாழை இலைகளும் , அதில் மிச்சமுள்ள உணவுகளும் அப்படியே சேர்த்து சுற்றப்பட்டு, மிகப் பெரிய பாலிதீன் கவர்களில் போட்டு கட்டப்பட்டு பின்னர் குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகின்றன. இதனை, குப்பை அள்ளும் வாகனங்களில் சேகரித்து சென்றுவிடுகின்றனர். 

ஹோட்டல்கள் மற்றும் சிறிய உணவு கடைகளிலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது.இதனால், தெருநாய்களுக்கு முறையான உணவு கிடைக்காமல் போய்விட்டது. பசிக் கொடுமையால்தான் தெரு நாய்களுக்கு வெறி பிடித்து, காண்பவர்களையெல்லாம் கடித்து குதறுகின்றன.

இப்போது சொல்லுங்கள் நாய்களை, அதன் இயல்பில் இருந்து மாற்றியது யார்...? நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் என்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நம் பெற்றோரும், நம் முன்னோர்களும், நாய், பூனை, காகம், குருவி என தன்னை சார்ந்துள்ள வீட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவு கொடுத்து, அதனை ஆதரித்து வந்தனர். இதற்கு கைமாறாக நாய்கள் அந்த தெருவிற்கே காவல் தெய்வங்களாக விளங்கி வந்தன. இப்போதும் ஒன்றும் கை மீறிப் போகவில்லை. உங்கள் வீடுகளில் உணவு சமைக்கும்போது, ஒரு பிடி அதிகமாக சமைத்து, தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு வைத்து பாருங்கள். அதன் பின்னர், உங்கள் தெருவில் திருட வேண்டும் என்ற எண்ணத்தோடு யாரும் நெருங்க முடியாத அளவிக்கு, உங்களுக்கும், உங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பைத் தரும் இந்த தெருநாய்கள். 

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தெருநாய்க்கு ஒரு வேளையாவது உணவு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதனை செயல்படுத்தினால் போதும், தெரு நாய்கள் கடிப்பதில் இருந்து மாறி, நம்முடன் நட்புடன் பழகி, தனது அன்பை வெளிப்படுத்தும். இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை உணர்ந்து, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, ஆதரித்து, வாழ்ந்தால், நாமும் வாழ்ந்து, பல்லுயிர்களையும் வாழ வைக்க முடியும். 

"வாலை குழைத்து வரும் நாய்தான் அது மனிதனுக்கு தோழனடி பாப்பா" 

"காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் 

கடலும் மலையும் எங்கள் கூட்டம், 

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை 

நோக்க நோக்க களியாட்டம்..."

என்ற பாரதியாரின் விரிகளை மனதில் கொண்டு, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வாழ்வோம்... வாழ வைப்போம்...

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com