

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் கணிக்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள்.
இது இப்படி இருக்க, ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.
விஜயுடன் கைகோர்க்கும் செங்கோட்டையன்!
50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலிருந்த செங்கோட்டையனை எடப்பாடி அதிரடியாக நீக்கியிருந்தது, அவருக்கு பெரும் பின்னடைவுதான் என்கின்றனர் ஆர்வலர் பலர். முன்னதாக செங்கோட்டையன் தவெக -வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் இன்று காலை செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் செங்கோட்டையன் வருகிற 27 -ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக வெளியான தகவல்கள் 90% உறுதியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தில் அவருக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது காரில் இருந்த அதிமுக கொடியை கழற்றிவிட்டுவிட்டு, ஆதவ் அர்ஜுனாவின் காரில், பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இன்று மாலையே விஜய் -ன் தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலிருந்து தமிழகத்தில் மறுக்க முடியாத சக்தியாக மாறி உள்ளார். விமர்சனங்கள் இருந்தாலும், பிரதான கட்சிகளுக்கும் கூட அவர் தேவைப்படுகிறார் என்பதே நிதர்சனம். சினிமாவில் ‘introvert’ -ஆக இருந்துகொண்டு உச்ச நட்சத்திரமாக மாறிய விஜய் அரசியலிலும் நிதானமாக காய் நகர்த்துகிறார் என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.