

இன்றைய காலங்களில் பெண்களிடையே ஹேர்(hair extensions) எக்ஸ்டென்ஷனின் பயன்பாடு அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. முதலில் திரையுலக பிரபலங்களிடம் மட்டுமே அதிகரித்து காணப்பட்ட இந்த முறை தற்போது பல பெண்களிடம் சாதாரணமான ஒன்றாகவே மாறிவிட்டது. ஆனால் இந்த ஹேர் எக்ஸ்டென்ஷன் முறையினால் புற்றுநோய் உட்பட இனப்பெருக்க குறைபாடும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செயற்கை மற்றும் இயற்கையான ஜடைகள் உட்பட டஜன் கணக்கான முடி நீட்டிப்புகளில் சுகாதாரம் மற்றும் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயற்கை இரசாயனங்கள் இருக்கலாம் என்றும் இந்த புதிய பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கண்டறியப்பட்ட 169 இரசாயனங்களில், குறைந்தது 12 இரசாயனங்கள் புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள் மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளுடன் தொடர்புடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
செயற்கை முடி, மனித முடி, கண் இமை முடி மற்றும் தாவர நாரினால் ஆன முடிகள் எனப் பல வகைகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், இத்தகைய சாதனங்களில் 900-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வேதிப்பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சுருள் முடிகளை நேராக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஹேர் ஸ்ட்ரைட்டடினிங் போன்றவற்றாலும் கூட அதில் பயன்படுத்தப்படும் சில வேதிப்பொருட்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதோடு கருப்பை புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மேலும் முடி நீட்டிப்பு சாதனங்கள் நீண்ட காலம் உழைக்கவும், பார்க்க பளபளப்பாக இருக்கவும், பல்வேறு வண்ணங்கள் மற்றும் நீர் எதிர்ப்பு தன்மையைப் பெறவும் பலகட்ட வேதியியல் சிகிச்சைகளுக்கு இந்த முடிகள் உட்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும்போது பயன்படுத்துவோருக்கு பின்வரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது,
பலரும் இதைப் பயன்படுத்திய பிறகு தலையில் அரிப்பு, வீக்கம் அல்லது தோல் சிவந்து போதல் போன்ற புகார்களைத் தெரிவிக்கின்றனர். இந்த முடிகளை வெப்பப்படுத்தி 'ஸ்டைல்' செய்யும் போதோ அல்லது குளிக்கும் போதோ, அதில் உள்ள வேதிப்பொருட்கள் ஆவியாக மாறி வெளியேறுகின்றன. இந்த வாயுக்களைச் சுவாசிப்பதால் கண், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படலாம். நீண்ட காலத்திற்கு இத்தகைய நச்சுப் புகையைச் சுவாசிப்பது கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இதில் உள்ள வேதிப்பொருட்கள் ஹார்மோன் சுரப்பிகளில் ஊடுருவி [பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
இது மட்டுமின்றி அதிக அளவில் பிறப்பு விகிதத்தைக் குறைக்க வழிவகுக்கும் வேதிப்பொருளான ஃப்ளோரின், அத்துடன் ஆர்கனோஹலோஜன்கள் மற்றும் நைட்ரோஅரோமாடிக்ஸ் ஆகியவற்றின் சிறிய அளவைக் கொண்ட சில மாதிரிகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டும் புற்றுநோயை உண்டாக்கும் விளைவுகளைக் கொண்டவை என்று அறியப்படுகிறது.
இருப்பினும், முடி நீட்டிப்புகளிலிருந்து வரும் எந்தவொரு குறிப்பிட்ட அளவு ரசாயன வெளிப்பாடும் சட்டப்பூர்வ தரநிலைகளை விட அதிகமாக உள்ளதா? அல்லது மக்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துமா? என்பதை எந்த ஆய்வுகளும் தீர்மானிக்கவில்லை. இதில் சிக்கலே தயாரிப்பு நிறுவனங்கள் இந்த முடிகளில் என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை முழுமையாக அச்சிட்டு குறிப்பிடுவதில்லை. இதனால் நுகர்வோர் இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அறியாமலேயே இந்த ஹேர் எக்ஸ்டென்ஷனை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இறுதியாக, இதில் பாதுகாப்பான முடி நீட்சி என்று எதுவும் இல்லை அதனால் இதன் பயன்பாட்டை குறைப்பதே இதிலிருந்து விடுபட ஒரே வழியாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.