நம்பகம் மிகுந்த சேமிப்பு திட்டங்களில், மக்களின் மனம் கவர்ந்தது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். காரணம், அது அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சேமிப்பு திட்டம். அதில் பிறந்த குழந்தை முதல், 60 வயதை கடந்த முதியவர்கள் வரை, அனைவரும் பயன்பெறும் வண்ணம் சேமிப்பு திட்டங்கள் உள்ளது. ஷேர் மார்க்கெட் போன்ற பிற சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதத்தை விட, அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் வட்டி குறைவுதான்.
ஆனால், ஷேர் மார்க்கெட்டில் உள்ள அந்த ரிஸ்க் இதில் நிச்சயம் இருக்காது. அருகில் ஒரு அஞ்சலகம் இருந்தாலே போதும், யாராலும் எளிய முறையில் சேமிப்பை துவங்க முடியும். ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் உங்கள் முதலீட்டை செய்யும்போது, அது குறித்த ஆய்வை அடிக்கடி செய்துகொண்டே இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தினமும் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை கவனித்துகொன்டே இருக்க வேண்டும்.
இதுவே நீங்கள் ஒரு அஞ்சலக சேமிப்பில் பணத்தை சேமிக்கும்போது, எந்தவித கவலையும் வேண்டாம். நீங்கள் மாதந்தோறும் அஞ்சலகம் சென்று படிவத்தை பூர்த்தி செய்து பணத்தை கணக்கில் போட்டாலே போதும். சரி அஞ்சலகத்தில் உள்ள பல சேமிப்பு திட்டங்களில் இளைஞர்களுக்கு உதவும் ஒரு சேமிப்பை பற்றி காணலாம்.
PPF (Public Provident Fund)
மத்திய அரசின் அஞ்சலகத்தில் உள்ள பல சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று. இதற்கான நிலையான வட்டி விகிதம் (இன்றைய தேதியில்) 7.1 சதவிகிதமாக உள்ளது.
எப்படி சேமிப்பை துவங்குவது?
PPF சேமிப்பு திட்டத்தை பொறுத்தவரை 18 வயதை நிரம்பிய இந்திய பிரஜைகள் யாராக இருந்தாலும் சேரலாம். அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது indiapostgov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாகவும் இந்த சேமிப்பை துவங்கலாம். 500 ரூபாய் துவங்கி 1 லட்சம் ரூபாய் வரை நீங்கள் இந்த திட்டத்தில் மாதம்தோறும் பணத்தை போடமுடியும்.
PPF கணக்கு
நீங்கள் உங்கள் 25வது வயதில் அஞ்சலகம் மூலம் PPF திட்டத்தில் இணைகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். மாதம் நீங்கள் 3500 ரூபாயை, அடுத்த 15 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளின் இறுதியில் உங்கள் PPF கணக்கில், அசலாக 6,30,000 ரூபாயை சேர்த்திருப்பீர்கள்.
அதற்கான 7.1 சதவிகித வட்டியுடன், உங்கள் 40வது வயதில் சுமார் 5,10,000 ரூபாய் வட்டியுடன் உங்கள் PPF கணக்கில் 11,40,000 ரூபாய் இருக்கும். இது 15 ஆண்டுகள் மட்டுமே சேமிக்கும் முறை என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் PPFல் சேமிக்க துவங்கிய சில ஆண்டுகள் கழித்து, இந்த கணக்கில் இருந்து கணிசமான தொகையை நீங்கள் எடுக்கவும் முடியும்.
மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்வதால் உங்களுக்கு சில வரி சலுகைகளும் கிடைக்கும். அரசு சார்ந்த திட்டம் என்பதால் துளி கூட நீங்கள் உங்கள் பணத்தை பற்றி கவலையும் பட வேண்டாம்.
குறிப்பு : இந்த திட்டம் மட்டுமல்ல, அஞ்சலகத்தை பொறுத்தவரை எந்த சேமிப்பு திட்டமாக இருந்தாலும் சரி, அதற்கான மாத தவணையை நீங்கள் மாதத்தின் முதல் 4 தேதிக்குள் செலுத்திவிடுவது நல்லது. காரணம், அந்த 4 தேதிக்குள் நீங்கள் பணத்தை செலுத்தும்போது மட்டுமே உங்களுக்கு முழு வட்டியும் கிடைக்கும். மாத இறுதியில் நீங்கள் பணத்தை செலுத்தினால், நிச்சயம் அதற்கான வட்டி விகிதம் குறையும். இந்த வட்டி விகிதம் குறித்து அஞ்சலக அதிகாரிகளை கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்