அண்ணா பல்கலைக்கழகம்: 2 புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம்..!

அண்ணா பல்கலைக்கழகம்:  2   புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம்..!

கல்லூரிக்கு செல்லாவிட்டாலும் வருகையைப் பதிவு செய்து முதுநிலை பொறியியல் பட்டம் தரும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்று அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர்  வேல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,

"அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் B.voc Logistics Management மற்றும் B.Voc Footware manufacturing என்ற இரண்டு புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது ஆனால் மாணவர்களுக்கு இந்த படிப்பின் அருமை தெரியாமல் சேர்க்கை சரியாக நடைபெறவில்லை அதனால் ஐந்து மாணவர்கள் மட்டுமே தற்போது சேர்ந்துள்ளனர்.

இந்த இரண்டு படிப்புகளும் காஞ்சிபுரம் மற்றும் ஆரணியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட உள்ளன. அதன்படி இரண்டு படிப்புகளிலும் தலா 40 சீட்டு வீதம் உள்ளது. இதில் மாணவர்கள் சேர்ந்து படித்து பயன்பெற வேண்டும்", என தெரிவித்தார். அதன்படி, இந்த இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 31 ஆம் தேதி. ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான கல்லூரிகளில் அட்மிஷன் முடிந்த காரணத்தால் அது குறித்து தற்போது தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த இரண்டு படிப்புகளுக்கும் உலக அளவில் தேவை என்பது அதிகமாக உள்ளது. மேலும் அதனுடன் Sector skill council துணையுடன் இரு கோர்ஸ்கள் தொடங்கப்பட்டுள்ளது.  இதனால் வேலை வாய்ப்பு பிரச்சனை இருக்காது. இந்த படிப்பை பொறுத்தவரை ஆறு செமஸ்டர்கள் என மூன்று ஆண்டு படிப்பாக உள்ளது. மேலும் இது பட்டப் படிப்பிற்கு இணையானது.

மற்றும் இந்தியாவில் 37 Sector skill council உள்ளது.  அவர்கள் துணையுடன் செயல்படுவதால் தொழிற்சாலைகளில் படிக்கும் போதே பயிற்சி பெற முடியும் என்பதால் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. மாணவர்கள் அதிக அளவில் தற்போது பொறியியல் படிப்புகள் படித்து வேலையில்லாமல் குறைந்த ஊதியத்திலும் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இது போல திறன் மேம்பாட்டு படிப்புகளில் சேர்ந்து படிக்கும் போது, அவர்களுக்கு முறையான வேலையும் ஊதியமும் கிடைக்கிறது.

அதனால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பொறியியல் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு இதுபோல மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு கொண்ட திறன் மேம்பாட்டு படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம்”, என தெரிவித்தார்.

அதனுடன், தற்போது முதுநிலை பொறியியல் படிப்பான எம்.இ படிக்கும் மாணவர்கள் சட்டவிரோதமாக சில தரம் குறைவான கல்லூரிகளில் சேர்ந்து கல்லூரிக்கு வராமல் பட்டங்களை பெறுகின்றனர். அவ்வாறு பெறப்படும் பட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்தப் பட்டங்கள் செல்லாது மற்றும் அவர்கள் படித்த கல்லூரியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்றும் இது மாதிரியான நிகழ்வுகள் கோயம்புத்தூர் தொடங்கி கேரள எல்லை பகுதிகளில் அதிகமாக நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.

கேரளாவில் இருக்கும் மாணவர்கள் அவர்கள் மாநிலத்தில் பணிபுரிகின்றனர். ஆனால் தமிழக பகுதிகளில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் அவர்களுக்கு அட்மிஷன் இருக்கிறது. அவர்கள் இந்த கல்லூரியில் படிப்பது போல போலியான அட்டனன்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் செமஸ்டர்கள் முடிந்தவுடன் பட்டமும் வழங்கப்படுகிறது. இது எம்.இ. படிக்க மிக எளிமையான வழிமுறையாக இருந்தாலும் இது சட்ட விரோதமானது. எனவே, இப்படிப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆனால் ஏ.ஐ.சி.டி அமைப்பு இதுபோல பணியில் இருந்து கொண்டே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு புதிய கல்வி முறையை தற்போது அங்கீகரித்துள்ளது. ஆனால்,தமிழக அரசு இன்னும் அந்த முறைக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உயர்கல்விக்கான சேர்க்கைக்கு   இந்த மாத இறுதி, கடைசி நாளாக இருப்பதால்  அரசு உடனடியாக இந்த கல்வி முறைக்கு அங்கீகாரம் கொடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கு வழி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com