

தமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டது. ஆகையால் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பேசுது வருகிறது. இந்த சூழலில் இந்த வார துவக்கத்தில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மண்டலமாக வலுப்பெறாமல், வலுவிழந்து மறைந்துவிட்டது. இதனால், நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை இல்லை. ஆனால், இன்று அதிகாலை வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. இதனால் மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் மாறி அவ்வப்போது லேசாக மழைபெய்து வருகிறது. இது அக். 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அக்.27ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இந்த புயல் சின்னத்துக்கு மோந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, வரும் 27ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும். அதாவது, திங்கள்கிழமை காலை தென்மேற்கு, மேற்கு மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், இது ஆந்திரம் நோக்கிச் சென்றாலும் தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதிக அளவிலான மழையை கொடுக்கும் என்றுகூறப்படுகிறது.
இந்த சூழலில் தென்கிழக்கு வங்க கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று, காலை 05.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது போர்ட் பிளேருக்கு (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்) மேற்கு-தென்மேற்கில் சுமார் 420 கிமீ, விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 990 கிமீ, சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே 990 கிமீ, காக்கிநாடாவிற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 1000 கிமீ மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தென்கிழக்கே 1040 கிமீ தொலைவில் மையம் கொண்டது.
இது கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 26 ஆம் தேதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 27 ஆம் தேதி காலை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்க கடலில் புயலாக மாறும். அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.