கையால் மலம் அள்ளும்முறை - உச்சநீதிமன்றம் கூறுவது என்ன?

கையால் மலம் அள்ளும்முறை - உச்சநீதிமன்றம் கூறுவது என்ன?

கையால் மலம் அள்ளும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பணியின்போது உயிரிழப்போரின் குடும்பத்திற்கு இழப்பீடு 30 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

கையால் மலம் அள்ளும் பணிகுறித்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்...

தொழில்நுட்பங்கள் எவ்வளவு  வளர்ந்தாலும் மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பது மனிதர்கள்தான். மலம் அள்ளுவது மனித மாண்புக்கு எதிரான செயல் என்று காலம் காலமாக குரல் கொடுத்து வந்தாலும் தற்போதுவரை அதற்கான தீர்வு இல்லை என்பதே நிதர்சனம் 

உயிருக்கு ஆபத்தான பணி என்று தெரிந்தும் துப்புரவு பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுவது ஏன்? விளைவுகள் தெரிந்தும் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது ஏன்? மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் சோதனை நடைபெற்று வரும் நாட்டில் இதற்கு தீர்வு காணமுடியாதது ஏன்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 330 பேர் உயிரிழந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 51 பேர் என்றும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் அதிகம் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து  தொடுக்கப்பட்ட  பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்  மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்க  வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. 

1). மனிதக்கழிவுகளை கையாள மத்திய அரசு உரிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் மனிதர்களை இந்தப்பணியில் பயன்படுத்த கூடாது என்பதை உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒப்பந்தரர்களுக்கும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

2). மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளை அனைத்து மாநிலங்களும் முறையாக பின்பற்ற வேண்டும்.

3). கழிவுகளை கையாளும் பணியாளர்கள் மற்றும் கழிவுகளை கையாளும்போது இறக்க நேரிடும் பணியாளர்களின்  வாரிசுதாரர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து மறுவாழ்வுகளையும் மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் 

4).  கழிவுகளை கையாளும்போது இறக்கும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டை 10 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்த வேண்டும். 

5).கழிவுகளை கையாளும்போது குறைபாடுகளுடன் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 10 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் கூடாது.

அவர்களின் குறைபாடுகள் அதிகமாக இருந்து, பொருளாதார உதவியற்ற நிலையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 20 லட்சத்திற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.

6). கழிவுகளை கையாள முறையான இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் பணியாளர்கள் இறந்தால் சம்மந்தப்பட்ட ஒப்பந்தாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 

7). தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மற்றும் மத்திய அரசு ஆகியவை ஒன்றிணைந்து கழிவுகளை கையாள்வது குறித்த சர்வே ஓராண்டுக்குள் நடத்தி அதனை செயல்படுத்திட வேண்டும்.

என்பன உள்ளிட்ட 14 வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com