விவசாயத்திற்கு பயன்படும் வகையில் அதிநவீன எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம்: கோவையை சேர்ந்தவர் அசத்தல்!

விவசாயத்திற்கு பயன்படும் வகையில் அதிநவீன எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம்: கோவையை சேர்ந்தவர் அசத்தல்!
Published on
Updated on
1 min read

கோவை: கோவையில் அதிக பாரம் ஏற்றி, அதிக தூரம் செல்லும் வகையில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னணி நகரமாக கோவை இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கோவையை சேர்ந்த பரதன் என்பவர் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பலனாக ஒரு அதிநவீன எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளார். 

இந்த வாகனத்தை விவசாயம், குறுந்தொழில் உள்ளிட்ட அணைத்து வணிக துறைகளிலும் பாரங்கள் ஏற்றி செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார். இந்த வாகனத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகப்படுத்தினார். 

புதிய வாகனம் குறித்து, பரதன் கூறுகையில், சக்தி வாய்ந்த 10 kwh பேட்டரி உபயோகப்படுத்தியதாகவும், ஒரு சார்ஜில் 525 கிமீ தூரம் வரை செல்ல முடியும் வகையில் இதனை உருவாக்கி உள்ளதாகவும், நாட்டிலேயே புதிய முயற்சியாக முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன துறையில் ஆராய்ச்சி மற்றும் துறை சார்ந்த மேம்பாடுகளை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

புளுடூத், ஜி.பி.எஸ் உள்ளிட்ட மொபைல் செயலிகளுடன் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பசியால் வாடும் நபர்களுக்கு தினந்தோறும் நேரடியாக சென்று இலவசமாக உணவை வழங்கி பசியை போக்கி வரும் சமூக ஆர்வலர் ஒருவருக்கு இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை இலவசமாக வழங்கியுள்ளார். இதனையறிந்த மக்கள் பரதனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com