"அப்பனுக்கு அப்பன்".. கூகுளுக்கு ஓப்பன் சவால் விடுக்கும் "Perplexity" - இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ!

கூகுள் சர்ச்சில் ஒரு கேள்வி கேட்டால், நிறைய வெப்சைட்டுகள் URL'S வரும். ஆனால், பெர்ப்ளெக்ஸிட்டி உங்களுக்கு நேரடியாக பதிலை சுருக்கமாகத் தரும்.
perplexity
perplexity
Published on
Updated on
3 min read

இணைய உலகில் கூகுள் (Google) இந்த நிமிடம் ஒரு மாபெரும் மன்னனாக இருக்கிறது. தேடுதல் இன்ஜின் (Search Engine) முதல் குரோம் பிரவுஸர் (Chrome Browser) வரை, கூகுள் இணையத்தின் பல முக்கிய அம்சங்களை ஆள்கிறது. ஆனால், இப்போது ஒரு புதிய வீரர் களத்தில் இறங்கியிருக்கிறார் – பெர்ப்ளெக்ஸிட்டி AI (Perplexity AI). 

பெர்ப்ளெக்ஸிட்டி AI: இது என்ன?

பெர்ப்ளெக்ஸிட்டி AI ஒரு ஆன்ஸர் இன்ஜின் (Answer Engine), அதாவது, நம்ம கேள்விகளுக்கு நேரடியாக பதில்களைத் தரும் ஒரு AI-ஆல் இயக்கப்படும் சேர்ச் இன்ஜின். 2022-இல் ஆரவிந்த் ஸ்ரீனிவாஸ் (Aravind Srinivas), டெனிஸ் யாரட்ஸ் (Denis Yarats), ஜானி ஹோ (Johnny Ho), மற்றும் ஆண்டி கோன்வின்ஸ்கி (Andy Konwinski) ஆகியோரால் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கூகுளின் தேடுதல் இன்ஜினுக்கு மாற்றாக இருக்க முயல்கிறது. இது ChatGPT மற்றும் DeepSeek போன்ற பெரிய மொழி மாதிரிகளை (Large Language Models - LLMs) பயன்படுத்தி, வலைத்தளங்களில் இருந்து தகவல்களை சுருக்கமாகவும், தெளிவாகவும், மேற்கோள்களுடன் (citations) வழங்குகிறது.

கூகுள் சர்ச்சில் ஒரு கேள்வி கேட்டால், நிறைய வெப்சைட்டுகள் URL'S வரும். ஆனால், பெர்ப்ளெக்ஸிட்டி உங்களுக்கு நேரடியாக பதிலை சுருக்கமாகத் தருது, அதுவும் எந்த வலைத்தளங்களில் இருந்து தகவல் எடுத்ததுன்னு காட்டிடுது. இதனால, இது பயனர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துது, குறிப்பா புது தலைமுறைக்கு இது ரொம்பவே பிடிச்சிருக்கு. 

2024 டிசம்பரில், இந்நிறுவனத்தின் மதிப்பு 9 பில்லியன் டாலராக இருந்தது. இப்போது, 500 மில்லியன் டாலர் நிதி திரட்டல் மூலம், இதன் மதிப்பு 14 பில்லியன் டாலரைத் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுது. இதுக்கு Amazon-இன் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), Nvidia, SoftBank Vision Fund 2, மற்றும் OpenAI இணை நிறுவனர் ஆன்ட்ரெஜ் கார்பதி (Andrej Karpathy) போன்ற பெரிய முதலீட்டாளர்கள் ஆதரவு தர்றாங்க.

Comet Chrome: கூகுள் குரோமுக்கு சவால்

பெர்ப்ளெக்ஸிட்டி AI இப்போது ஒரு புதிய குரோம்-ஐ அறிமுகப்படுத்த தயாராகுது. அதன் பெயர் கோமட் (Comet). இது கூகுள் குரோமுக்கு (Google Chrome) நேரடி போட்டியாக இருக்கும். கூகுள் குரோம், உலகில் 63.55% மார்க்கெட் ஷேரை வைத்திருக்கிறது, அதுக்கு அடுத்து ஆப்பிளின் சஃபாரி (Safari) 21.81%, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Edge) 5.62% இருக்கு. இந்த கடுமையான போட்டி சந்தையில், பெர்ப்ளெக்ஸிட்டி தன்னோட AI-ஆல் இயக்கப்படும் குரோம்-ஐ கொண்டு வருது.

கோமட் குரோம், கூகுளின் ஓப்பன்-சோர்ஸ் திட்டமான குரோமியத்தை (Chromium) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுது. இதே குரோமியத்தை மைக்ரோசாஃப்ட் எட்ஜ், Brave, மற்றும் Opera குரோம்களும் பயன்படுத்துது. ஆனா, கோமட் உலாவியின் தனித்துவம் என்னன்னா, இது ஏஜென்டிக் AI (Agentic AI) மூலம் இயக்கப்படுது. இதாவது, உலாவி உங்களோட கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமல்லாமல், பயண டிக்கெட் புக் பண்ணுதல், பொருட்கள் வாங்குதல், அல்லது கேலெண்டரில் நிகழ்வுகளை சேர்க்குதல் போன்ற பணிகளையும் செய்யும்.

பெர்ப்ளெக்ஸிட்டியின் தலைமை நிர்வாகி ஆரவிந்த் ஸ்ரீனிவாஸ், CNBC-யிடம் ஒரு நேர்காணலில், “கோமட் குரோம், நீண்ட நேர ஆராய்ச்சி (multi-step research) மற்றும் AI-ஆல் இயக்கப்படும் சர்ச் அனுபவத்தை தரும்”னு கூறியிருக்கார். மேலும், இது முதலில் விளம்பரங்கள் இல்லாமல் (ad-free) இருக்கலாம். 

நிதி திரட்டல்: 14 பில்லியன் டாலர் மதிப்பு

பெர்ப்ளெக்ஸிட்டி AI, தன்னோட மதிப்பை 2024-இல் 9 பில்லியன் டாலராக உயர்த்திய பிறகு, இப்போது 500 மில்லியன் டாலர் நிதி திரட்டல் மூலம் 14 பில்லியன் டாலரை எட்ட முயற்சிக்குது. இந்த நிதி திரட்டலை Accel என்ற முதலீட்டு நிறுவனம் தலைமையேற்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி, கோமட் குரோம்-ஐ உருவாக்கவும், பயனர் அடிப்படையை விரிவாக்கவும், மற்றும் AI தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

2024-இல், இந்நிறுவனம் 50 மில்லியன் டாலர் ஆண்டு வருவாயை (annualized revenue) ஈட்டியது, இதில் 30 மில்லியன் டாலர் அதன் 20 டாலர்/மாத ப்ரோ சந்தாவில் (Pro subscription) இருந்து வந்தது. இதன் ஆப் 20 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாதம் 230 மில்லியன் தேடுதல் கேள்விகளை (search queries) கையாளுது.

முதலீட்டாளர்களில் ஜெஃப் பெசோஸ், Nvidia, Shopify CEO டோபி லுட்கே (Tobi Lutke), மற்றும் Google AI நிர்வாகி ஜெஃப் டீன் (Jeff Dean) போன்றவர்கள் இருக்காங்க. இந்த பெரிய ஆதரவு, பெர்ப்ளெக்ஸிட்டியை AI துறையில் ஒரு முக்கிய டூலாக மாற்றியிருக்கு.

பெர்ப்ளெக்ஸிட்டியின் தலைமை நிர்வாகி ஆரவிந்த் ஸ்ரீனிவாஸ், சென்னை IIT மெட்ராஸ் பட்டதாரி. இவர் OpenAI மற்றும் Google Brain-இல் பணியாற்றியவர், மேலும் Transformer தொழில்நுட்பத்தின் உருவாக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 2025 ஜனவரியில், இவர் இந்தியாவுக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்திய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ (Perplexity Pro) AI கருவியை மலிவு விலையில் வழங்குவது குறித்து பேசியது இங்கு குறிப்பிடத்தக்கது.

கூகுளுக்கு எதிரான சவால்கள்

கூகுள், உலக தேடுதல் சந்தையில் 90% ஆதிக்கம் செலுத்துது. மைக்ரோசாஃப்ட்டின் Bing, ChatGPT-ஐ இணைத்தாலும், வெறும் 4% மார்க்கெட் ஷேர் தான் வைச்சிருக்கு. ஆனா, பெர்ப்ளெக்ஸிட்டி AI இந்த ஆதிக்கத்தை உடைக்க முயற்சிக்குது. இதுக்கு முக்கிய காரணங்கள்:

AI-ஆல் இயக்கப்படும் தேடுதல்: பெர்ப்ளெக்ஸிட்டி, OpenAI-இன் GPT-3.5, Claude 3.7 Sonnet, Gemini Flash 2.0, மற்றும் Llama போன்ற பல மொழி மாதிரிகளைப் பயன்படுத்தி, வலைத்தளங்களில் இருந்து தகவல்களை உடனடியாக சுருக்கமாக தருது. இது கூகுளின் இணைப்புகள் நிறைந்த தேடுதல் முடிவுகளை விட (user-friendly) ஆக இருக்கு.

பெர்ப்ளெக்ஸிட்டி, Motorola Razr ஃபோன்களில் தன்னோட ஆப்பை முன்பே நிறுவ (pre-install) ஒப்பந்தம் செய்திருக்கு. மேலும், Samsung-உடனும் பேச்சுவார்த்தை நடத்துது. ஆனா, கூகுளின் Gemini தான் ஆன்ட்ராய்டு ஃபோன்களில் default assistant-ஆக இருக்கு. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பெர்ப்ளெக்ஸிட்டி மிகப்பெரிய சந்தையை எட்டிப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சர்ச் மிக மிக எளிதாக இருப்பதால், அனைவரும் இதற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தான். கூகுள் உஷாராக வேண்டிய நேரம் இது!.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com